பாடசாலையில் மதக்கல்வி தேவையா?


டிஸ்கி -  இது யாரையும் புண்படுத்தும் பதிவல்ல, என் மனதிற்கு தோன்றியதை பதிவிடுகிறேன், முக்கியமான விடயம் நானும் ஒரு கடவுளை நம்பும் ஆத்திகன்.


சைவ மதத்தை பின்பற்றும் நான், தீவிரமாக கடவுளை வணங்கும் குடும்பத்திலிருந்து வந்தவன், சமயம் பற்றிய கல்வியை பாடசாலையில் விருப்பத்தோடு கற்றுள்ளேன். மதத்தை பற்றி கற்கும் போது பாடசாலையில் எனது மதமான இந்து மதத்தை கற்றேன், மேலும் எனது பள்ளி ஒரு கிறித்தவ பள்ளி என்பதால் சிறிதளவு கிறிஸ்வத அறிவும் கிடைத்தது.

ஆனால் இப்போது யோசிக்கும் போது இச்சமயக்கல்வி மாணவர்களிடம் சிறிய வயதிலே பிரிவினையை தூண்டி விடுவதாக தோன்றுகிறது. இன்று உலகலாவிய ரீதியில் ஏற்படும் எல்லாவித பிரச்சினைகளுக்கும் மதங்களும் ஒரு முக்கிய காரணம், மனிதர்களிடம் அன்பை வளர்க்க வேண்டிய மதமே மனிதர்களிடம் பிரிவினையை தூண்டுகிறது என்றால், அம்மதம் மக்களுக்கு தேவையில்லை என்பதே எனது கருத்து.

இதை நான் மற்றோருக்கு கூறும் போது, என்னை ஒரு மதத்துவேசியாகவே பார்க்கிறார்கள், காரணம் இங்கு அநேகமானோர் வாழ்வது மதத்திற்காகவே ஆகும். நான் கடவுளை நம்புபவன், ஆனால் நான் வணங்கும் இந்து கடவுள்தான் உலகத்தில் ஒரே கடவுள் மற்றைய எல்லா மதங்களும் பொய் என கூறவில்லை, இன்னுமொரு முக்கியமான விடயம் எனக்கு
மற்றைய மதங்களை விமர்சிக்க தார்மீக ரீதியில் உரிமையுமில்லை, காரணம் அவற்றை விமர்சிக்க கூடியளவுக்கு நான் அந்த மதங்களை கற்றவனல்ல, எனது வீட்டை சுத்தமாக்க வேண்டிய பொறுப்பு எனக்குள்ளது.

“எனது வீட்டை சுத்தமாக வைத்திருந்தால் அயலாரின் வீடும் சுத்தமாகும்” என்பதே எனது கொள்கை.

திருநாவக்கரசரை சைவ சமயத்தில் இணைந்ததற்காக சமணர்கள் பல விதத்தில் கொடுமைபடுத்தினார்கள் என்று சமய பாடத்தில் படிப்பித்ததை கொண்டு நான் சிறிய வயதில் மற்றைய சமயத்தவர் எல்லாம் கொடுமைக்காரர்கள் என்னும் கருத்தை கொண்டிருந்தேன், சற்று பெரிய வயது வந்ததன் பின்னரே சமயக்கல்வியை விட வாழ்க்கைக்கல்வி எவ்வளவு முக்கியமானது என்பதை அறிந்தேன்,

மதம் என்னும் ஒன்று இல்லாவிடின் தனி மனிதனது ஒழுக்கம் கேள்விக்குறியதாகி விடுமென்பதாலும், மனிதன் யாருக்குமே பயப்படாவிடின் எதுவுமே செய்ய தயங்க மாட்டான் என்பதாலுமே முன்னோர்கள் மததை உருவாக்கியிருப்பார்கள் என நினைக்கிறேன், மதத்துக்காக மனிதன் என்றல்லாது மனிதனுக்காகவே மதம் என்றிருக்க வேண்டும்.அதாவது மதம் என்பது மனிதனுக்காக உருவாகப்பட்டது, அதுவே மனிதனை பிரிக்க காரணமாய் இருந்துவிட கூடாது என நினைக்கிறேன்.

தலைப்பில் உள்ளவாறு “மதக்கல்வி பாடசாலையில் தேவையா?” என்பது முக்கியமாக விவாதிக்கப்பட வேண்டிய முக்கிய விடயமானது, காரணம் சிறிய வயதில் மூளைக்கு செலுத்தப்படும் விடயம் கடைசி வரை அழியாது, ஆனால் இதில் இன்னாரு விடயமும் உள்ளது, நமது மதம் பற்றி எமக்கு அறிந்து கொள்ள கூடிய வாய்ப்பு இல்லாமலே போய்விடலாம்.

அதனால் எல்லா மாணவருக்கும் ஒருங்கே எல்லா சமயமும் கற்றுக்கொடுக்கலாம் என நினைக்கிறேன், இப்படி கற்றுக் கொடுப்பதால் எல்லாருக்கும் எல்லா மதங்களையும் பற்றி அறிந்து கொள்ளலாம்.

மேலும் இது மத ஒற்றுமையை வளர்க்கும் எனவும் நினைக்கிறேன், மேலும் சமயத்தை பரீட்சைக்கு என படிக்காமல் வாழ்க்கைக்கு என படிக்கும் நிலை வர வேண்டும் என நினைக்கிறேன்.

உங்கள் கருத்துகளையும் பின்னூட்டுங்கள், எனது கருத்து பிழை எனில் அதையும் தெரிவியுங்கள்.

பி.கு. இது ஒரு மீள்பதிவு, இன்று நண்பரொருவருடன் ஏற்பட்ட ஒரு கருத்து மோதலின் பின்னர் இதை மீள்பதிய எண்ணினேன். இரண்டு வருடங்களுக்கு முன்னர் எழுதிய பதிவு இது. ஆனாலும் இன்றும் எனது கருத்தில் எந்த மாற்றமும் இல்லை

Facebook Badge