பதிவர்களுக்கிடையிலான கிரிக்கட் போட்டி விளையாண்ட களைப்பு இன்னும் போகவில்லை, பின்ன கிட்ட தட்ட ஒரு வருடத்திற்கு பின்னர் விளையாண்டால் எப்படி இருக்கும்? ஆறே ஆறு ஓவர்கள் பந்து வீசியது, இன்னும் கைவலி. ஆனாலும் அன்றைய நாள் மிகவும் இனிமையாக கழிந்தது. ஏற்பாட்டாளர்களே இது போன்ற விளையாட்டுகளை எதிர்காலத்திலும் ஏற்பாடு செய்யுங்கள். இவை பதிவர்களுக்கிடையிலான நட்பை அதிகரிக்க உதவும்.
கிரிக்கட் போட்டிக்கு அடுத்த நாள் நடைபெற்ற பதிவர் சந்திப்புக்கு வரவியலாமல் போனது மிகவும் கவலையான விடயம், ஒரு முக்கிய விடயம் காரணமாக கண்டி வர நேரிட்டது. இல்லாவிடின் நிகழ்வில் கலந்து கொண்டிருந்திருக்கலாம்.
------------------------------------------------
மூஞ்சிப்புத்தகத்தில் உருவான காதல்களை பற்றி அடிக்கடி கேள்விபடுகிறோம், இதன் தொடர்ச்சியாக எனது நண்பனொருவருக்கு தெரிந்த ஒருவர் மூஞ்சிப்புத்தகம் மூலம் பழக்கமான பெண்ணொருவரை காதலித்து வீட்டுக்கு தெரியாமல் அப்பெண்ணோடு திருமணம் செய்ய சென்ற போதுதான் அப்பெண் ஏற்கனவே திருமணமானவள் என்றும், அவளது கணவன் வெளி நாட்டில் வேலை செய்கிறார் என்பதும் தெரிந்ததாம், முக்கியமான விடயம் இவை அனைத்தும் நடந்தது 45 நாட்களுக்குள் என்பதாகும்.
எதிர்காலத்தில் சமூக வலையமைப்புகள் எம்மை எங்கு அழைத்து செல்ல போகின்றன?
------------------------------------------------
மலையகத்தில் தோட்ட பாடசாலையொன்றில் 3ம் வகுப்பு படிக்கும் சிறுமியொருத்தியை அப்பாடசாலையில் கற்பிக்கும் காமுகனொருவன் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளான். இவ்விடயம் வெளியே தெரிந்தவுடன் பணம் கொடுத்து இதை மூடி மறைக்க முயன்றானாம். 9வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய கூடிய ஒருத்தனை ஆசிரியனாக நியமித்தது யாரது குற்றம்? இவனெல்லாம் ஒரு ஆசிரியனா? த்த்த்தூதூ
போலீஸ் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. என்னை பொறுத்தவரையில் இவனையெல்லாம் தூக்கிலேற்ற வேண்டும், அல்லது நடு ரோட்டில் வைத்து கல்லெறிந்து கொல்ல வேண்டும்.
------------------------------------------------
ஆஷஸ் போட்டி தொடரில் 3வது போட்டியை வென்று தொடரை உயிர்ப்பித்தது அவுஸ்திரேலிய அணி என்றுதான் சொல்ல வேண்டும். One Side Game என்றுமே பார்ப்பதில் சுகமிருப்பதில்லை. இரு சம பல அணிகள் போட்டியிட்டால் அதனை நன்றாக ரசிக்கலாம். மிட்சில் ஜோன்சன் மற்றும் ஹரிஸ் ஆகிய இருவரது பந்து வீச்சும், ஹசி மற்றும் வொட்சனின் பந்து வீச்சும் அவுஸ்திரேலியாவுக்கு வெற்றியை கொண்டு வந்தன எனலாம். இப்போட்டி நடந்த அதிவேக WACA மைதானத்தில் தனது வழமையான போர்மை காட்டிய மிட்சில் ஜோன்சன் அடுத்த போட்டியில் சிறப்பாக வியைாடுவாரா இல்லையா என்பதிலேயே அவுஸ்திரேலியாவின் தொடர் வெற்றி தங்கியுள்ளது. பொன்டிங் சிறப்பான போர்மில் இல்லாவிட்டாலும் அடுத்த போட்டியில் காயத்தினால் விளையாடாமல் போனால் அது அவுஸ்திரேலியாவுக்கு மனதளவில் பின்னடைவை தருமென்பதில் சந்தேகமில்லை
இந்திய தென்னாபிரிக்காவுக்கு இடையிலான போட்டி எதிர் பார்த்தபடி தென்னாபிரிக்காவுக்கு இனிங்ஸ் வெற்றியை பெற்று தந்திருக்கிறது, ஆனாலும் சாதனை நாயகன் சச்சின் தனது 50 சதத்தை பெற்று கிரிக்கட் சாதனை புத்தகத்தில் இன்னுமொருமுறை தனது பெயரை எழுதியிருக்கிறார். ஆனாலும் சச்சினுக்கு மற்றைய துடுப்பாட்ட வீரர்கள் ஆதரவளித்திருந்தால் இந்தியா ஓரளவுக்கு இப்போட்டியை கௌரவமாக முடித்திருக்கலாம்.
------------------------------------------------
கிரிக்கட் உலக கிண்ண போட்டிகள் வருவதையிட்டு “மறக்க முடியா உலக கிண்ண போட்டிகள்” என்ற தலைப்பில் ஒவ்வொரு வாரமும் பதிவெழுத நினைத்துள்ளேன்.
------------------------------------------------
மன்மதன் அம்பு படத்தில் கமல் எழுதிய கவிதை படத்தில் இடம்பெறாதாம், காரணம் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் என்கிறார்கள். உலக நாயகனின் அக்கவிதையை காட்சிப்படுத்தியிருப்பதை பார்க்க ஆவலுடனிருந்த என்னை போன்றவர்களுக்கு ஏமாற்றம்தான். இப்போதெல்லாம் அடிக்கடி கேக்கும் தத்துவ பாட்டு
“போனா போகுதுன்னு விட்டின்னா, கேணைன்னு ஆப்பு வெப்பாண்டா
தானா தேடி போயி நின்னீன்னா வேணுன்னு காக்க வைப்பாண்டா"
"சாம, தான, பேத, தண்டம் நாலும் சேர்ந்து
தோத்துப் போகும் போது தகிடு தத்தோம் செய் தகிடு தத்தோம் "
இவ்வகையான உச்சரிப்புடன் பாடலை பாடுவது கமலுக்கு அல்வா சாப்பிடுவது போன்றிருக்கும் என நினைக்கிறேன்.
------------------------------------------------
இம்முறையும் ஆஸ்காருக்கும், கோல்டன் குளோப் விருதுக்கும் பரிந்துரைக்ப்பட்டிருக்கும் நம் இசைப்புயலுக்கு இன்னொரு முறை விருது பெற வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்
------------------------------------------------
பத்து தலை நாகபாம்பு ஒன்று இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அதனை இந்து மக்கள் வணங்குகிறார்கள் எனவும் வதந்தியொன்று இலங்கை முழுவதும் பரவியதை அனைவரும் அறிந்திருப்பர். இப்பத்து நாகம் ஒரு போட்டோஷொப் பாவனையாளரின் கைங்கரியம் என்பதை கீழே உள்ள படத்தை பார்த்தால் தெரியும் ஒரு தலையுடன் இருக்கும் பாம்பின் நிழலையும் 10 தலையுடன் இருக்கும் பாம்பின் நிழலையும் கவனியுங்கள். இரண்டும் ஒன்றே.