கிரிக்கட் - பிழையான தீர்ப்புகளினால் இந்தியா தோற்க வேண்டும்
இலங்கை இந்திய அணிகள் தனது முதலாவது டெஸ்ட் போட்டியை இன்று விளையாடுகின்றன. எனது எதிர்பார்ப்பெல்லாம் இத்தொடரில் இந்தியா நடுவர்களின் பிழையான தீர்ப்பினால் படு தோல்வி தோற்கவேண்டும் என்பதேயாகும், ஆனாலும் இலங்கையுடனான போட்டியில் ஐசீசீ நடுவர்கள் இந்தியாவிற்கு எதிராக செயல்படுவார்களா என்பது கேள்விகுறியே?
நான் இவ்வளவும் கூறுவதற்கு காரணம் இந்திய அணியினர் இத்தொடரில் நடுவர்களின் தீர்ப்புப்பை 3வது நடுவருக்கு பரிசோதிக்க வழங்கும் UDRS எனப்படும் நடுவர்களின் தீர்ப்பை மாற்றும் முறையை பாவிக்க எதிர்ப்பு தெரிவித்திருப்பதனாலாகும். தொழிநுட்ப வசதிகள் மிகுந்துள்ள இக்காலப்பகுதியில் இவ்வாறான வசதிகளை பாவிக்க வேண்டும், அதை தவிர்த்து இவ்வாறு இந்திய கிரிக்கட் சபை இம்முறைக்கு எதிர்ப்பு தெரிவிப்பது சாதாரணமாகாது.
உதாரணமாக இந்தியா இலங்கையை வென்று டெஸ்ட் தரப்படுத்தலில் முதலாமிடத்திற்கு வந்த தொடரில் கடைசி டெஸ்டில் செவாக்குக்கு ஆட்டமிழப்புக்கு ஆட்டமிழப்பு வழங்காமலும், மிக சிறந்த போமிலிருந்த டில்சானுக்கு எதிராக வழங்கப்பட்ட பிழையான ஆட்டமிழப்புகளும் போட்டியின் முடிவை தீர்மானித்தது என்பது பலரும் அறிந்ததாகும். இவ்வாறு தவறுகள் நடைபெறாத சிறந்த போட்டிகளையே நாங்கள் பார்க்க விரும்புகிறோம். கடந்த முறை இந்தியாவுக்கு எதிரான இலங்கையில் நடைபெற்ற தொடரில் இம் UDRS முறை மூலம் இலங்கை 11 பிழையான தீர்ப்புகளை மாற்றியமை குறிப்பிடதக்கதாகும், இந்திய அணி 1 பிழையான தீர்ப்பையே மாற்றியது, இதற்கு காரணம் அணியாக இல்லாமல் தனிப்பட்ட வீரர்களுக்காகவே இம் UDRS முறையை பயன்படுத்தியது. கும்ப்ளே ஏராளமான சரியான முடிவுளை தனக்கு தேவையான முறையில் மாற்ற முயற்சித்தமையே இந்திய அணிக்கு பிழையான ஆரம்பத்தை UDRS முறையில் ஏற்பட்டது எனலாம்.
ஐசீசீயின் சமச்சீரற்ற தன்மையினாலேயே இவ்வாறான விடயங்கள் ஏற்படுகின்றன. இயன் சேப்பல் கிரிக்இன்போவில் எழுதியபடி UDRS நடை முறைபடுத்தப்படுவது ஒன்று சகல அணிகளுக்கும் கட்டாயமாக்கப்படல் வேண்டும், அல்லது இம்முறை இல்லாமலாக்கப்படல் வேண்டும். இல்லாமல் ஒரு தொடருக்கு UDRS முறை இருப்பதும், இன்னொரு தொடருக்கு UDRS இல்லாமலிருப்பதும் பிழையான விடயமாகும். பணபலமிக்க இந்திய கிரிக்கட் சபைக்கு ஐசீசீயில் இருக்கும் முக்கியத்துவத்தினால் இது சாத்தியப்படுமா என்பது சந்தேகமே? ஏனெனில் வீரர்களுக்கு ஊக்க மருந்து பாவிப்பதற்கு எதிரான WADA ஒப்பந்தத்தில் இந்திய அணி வீரர்கள் கையெழுத்திடாததினால் இன்னும் இவ்வொப்பந்தம் கிடப்பில் காணப்படுவது குறிப்பிடதக்கதாகும்.
இப்பதிவை பார்த்து இந்திய ரசிகர்கள் என்மேல் பாயக்கூடும் அவர்களுக்காகதான் ஆரம்பத்திலேயே “பிழையான தீர்ப்புகளினால் இந்தியா தோற்க வேண்டும்” என எழுதினேன், அப்போது அவர்களின் UDRS மீதான பார்வை மாறும்.





