Showing posts with label கலைஞர். Show all posts
Showing posts with label கலைஞர். Show all posts

நூடில்ஸ் (12.08.2010)

முதலாவது பதிவர் சந்திப்பு நடந்து இம்மாதத்துடன் ஒரு வருடமாகிறது, எங்கெங்கொ தனி தனியாக பதிவிட்டு கொண்டிருந்த இலங்கை தமிழ் பதிவர்களை ஒன்று சேர்த்த அந்த நிகழ்வுக்கு முக்கிய காரணமானது புல்லட் கண்ட பதிவர் சந்திப்பு பற்றிய கனவு பதிவு. இப்போது புல்லட் எழுதுவதை காணவில்லை, ஏனென்று தெரியவில்லை?, சீக்கிரம் பதிவுலகிற்கு வருமாறு புல்லட்டை கேட்டு கொள்கிறேன். 

---------------------------------------------------------------------------------

மேலும் இந்த ஆகஸ்ட் 31ம் திகதியுடன் ப்லொக்கருக்கு 11 வயதாகிறது. இம்முறை இலங்கை பதிவர்கள் அனைவரும் சேர்ந்து ப்லொக்கரின் பிறந்த நாளன்று கூகுல் குழுமத்தில் சந்திப்பொன்றை நடத்தினால் நல்லதென்று நினைக்கிறேன், நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

---------------------------------------------------------------------------------

இலங்கை இந்திய அணிகளுக்கிடையில் ஒரு நாள் கிரிக்கட் போட்டிகள் மீண்டும் தொடங்கி விட்டன, தொடர்ந்து இந்த இரண்டு அணிகளுக்கிடையில் போட்டிகள் நடப்பது எனக்கென்னவோ கிரிக்கட் பார்க்கும் ஆசையையே இல்லாமல் செய்து விட்டது.  மீண்டும் மொஹம்மட் யுசுப் பாகிஸதான் அணிக்கு விளையாட போகிறார், “மீண்டும் யுசுப்”, இவர் எத்தனை முறை ஓய்வு பெற்றார் என்பதை இவரே மறந்திருப்பார் என நினைக்கிறேன். உலகத்திலே புரிந்து கொள்ள முடியாதது இரண்டு விடயங்கள் என நினைக்கிறேன், முதலாவது பெண்களின் மனது அடுத்தது பாகிஸ்தான் கிரிக்கட் சபை எடுக்கும் முடிவுகள்.

---------------------------------------------------------------------------------

எந்திரன் பட பாடல்கள் கலக்கோ கலக்கல், மணிரத்தினம் படங்களை போல் ரகுமானுக்கு சங்கர் படங்களில் வித்தியாசமான இசையை வழங்கமுடியாது காரணம், சங்கர் படங்களில் ஒரு குறிப்பிட்ட பார்முலாவிற்குதான் இசையமைக்க முடியும், அதிலும் ரகுமான் ஸ்கோர் பண்ணியிருப்பது மகிழ்ச்சியே. “புதிய மனிதா” பாடலை கேட்கும் போது எஸ்.பீ.பாலசுப்ரமணியத்திற்கு இன்னும் 20 வயதோ என எண்ண தோணுகிறது. மனுஷனின் குரல் இன்னும் இளமையாகி கொண்டே போகிறது. அவர் இன்னும் 100 வருடங்கள் வாழ்ந்து பல பாடல்களை தர வேண்டும்.

---------------------------------------------------------------------------------

தஞ்சை பெருங்கோயிலின் 1000மாவது வருட நிகழ்வை தமிழக அரசு கொண்டாட போகிறதாம், பாவம் தமிழக மக்கள் கோயிலும் கருணாநிதியின் பெருமைகளை கேட்க போகிறார்கள், அதில் எனக்கொரு சந்தேகம் தஞ்சை பெருங்கோயிலை கட்டியது கருணாநிதியின் பாட்டன் என சொல்ல போகிறார்களோ?
---------------------------------------------------------------------------------

கிரிக் இன்போ இணைய தளத்தில் வெளியான இரண்டு கார்ட்டுன்கள் கீழே



கலைஞர் ஐயாவுக்கு ஒரு கடிதம்

மதிப்புகுறிய கலைஞர் ஐயா அவர்களுக்கு, 

இனிமேல் வாரா வாரம் யாருக்காவது கடிதமெழுதலாமென யோசித்த முதல் கடிதமான இக்கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேனையா. வேறு யாருக்கும் கடிதம் எழுதுவதை காட்டிலும் உங்களுக்கு கடிதமெழுதுவது லேசான காரியமில்லை என்பது எனக்கு தெரியும். அண்ணாமலைக்கே பாலா இல்லாட்டி திருப்பதிக்கே மொட்டையா என பலர் கேட்கிறார்கள். கடிதமெழுதியே பல சாதனைகளை படைத்த சாதனை தமிழரல்லவா நீங்கள். ஆமாம் கேட்க மறந்து விட்டேன், நீங்கள் நலமாக இருக்கிறீர்களா? 

உங்கள் நலத்துக்கு என்ன குறை வரபோகிறது, மகன், பேரன், கொள்ளு பேரன், அவனது மகன் என பலரது ஆயுளை எடுத்து கொண்டு நீங்கள் இன்னும் பல காலம் வாழவேண்டும். உங்களது சாதனைகளை பற்றி பல விழாக்களை பார்த்து அதில் கவரப்பட்ட நான், ஏதோ என்னளவில் உங்களுக்கு பாராட்டு விழா எடுக்கவியலாது ஆகையால் ஒரு பாராட்டு கடிதமெழுதுகிறேன். உங்களது சாதனைகள் தான் எத்தனை எத்தனை, அவற்றில் சிலவற்றை மீட்டி பார்க்கிறேன்.

* என்னுடைய தாத்தாவுடைய அப்பா காலத்தில் நாடகங்களுக்கும் படங்களுக்கும் கதை எழுதி புகழடைந்த நீங்கள், அந்த புகழை வைத்தே ஆட்சியை கைப்பற்றிய சாதனை உலகத்தில் எந்த எழுத்தாளராலும் முடியாத விடயம், பெரிய எழுத்தாளராக கருதப்படும் ஷேக்ஸ்பியரையே நீங்கள் இந்த விடயத்தில் தோற்கடித்துவிட்டீர்கள்.

*    உலக தமிழர்கள் எங்காவது கஷ்டபட நேர்ந்தால் ஒரு கடிதத்தை எழுதியே அவர்கள் குறையை தீர்த்து வைக்கும் நீங்கள் ஒரு மேதை என்பதில் எந்த சந்தேகமில்லை, மகாத்மாவின் காந்தியின் அகிம்சை கொள்கையின் மொத்த உருவமாக உங்களை காண்கிறேன், இலங்கை தமிழர்கள் போரில் கஷ்டபட்ட போதும், இந்திய மீனவர்கள் கடலில் தாக்கப்பட்ட போதும் ஒரே ஒரு பேப்பரையும் பேனாவையும் வைத்து கடிதமெழுதி அப்பிரச்சினைகளை தீர்த்த உங்களை எப்படி பாராட்டினாலும் தகும். பிள்ளையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டிவிடும் உங்களது திறமைக்கு ஆஸ்கார் விருதோ கின்னஸ் விருதோ கிடைக்காமல் விட்டதில் ஏதொ சதியிருக்கிறதென்று நினைக்கிறேன்

*  அந்த காலத்தில் படங்களுக்கு கதைவசனமெழுதி சாதாரண தமிழனுக்கே தமிழை சொல்லி கொடுத்து தமிழை வளர்த்த அதன் உச்சகட்டமாக நீங்கள் ஆனானபட்ட உலக சூப்பர்ஸ்டார் ஜாக்கிசேனையே மேடையில் உட்காரவைத்து அரை மணித்தியாலம் எனக்கே புரியாத தமிழில் கவி நயத்துடன் வாழ்த்தி உலக சூப்பர் ஸ்டாருக்கே நீங்கள் தமிழ் சொல்லி கொடுத்தீர்கள், அந்த காட்சியை பார்த்து நான் ஆனந்த கண்ணீர் விட்டது இன்னும் என் மனதில் பசுமையாய் இருக்கிறது.

*   கம்பன், வள்ளுவன், பாரதி போன்றோர் தமிழுக்கு செய்த சேவையை விட ஆயிரம் மடங்கு செய்த சேவையை நீங்கள் தமிழுக்கு செய்திருப்பதினால் தமிழ் என்னும் தொன்மையான மொழியை அழிவிலிருந்து காப்பாற்றியிருக்கும் உங்களை செம்மொழி மாநாட்டில் அனைவரும் புகழ்தது என்னை பொருத்தவரையில் குறைவானதாகவே படுகிறது.  அதிலும் சினிமா பாட்டெழுத கூப்பிட்ட போது “அம்மி கொத்த சிற்பி தேவையில்லை” என விழித்த மாபெரும் கவிஞாக என் மனதிலிருந்த அப்துல் ரகுமானையே உங்கள் துதி பாட செய்தது ஒரு சாதனையே..

*  ஏழு கோடி மக்களை ஆட்சி செய்யும் முக்கியமான பதவியிலிருந்தாலும் வந்த வழியை மறக்காமல் பெண் சிங்கம், உளியின் ஓசை போன்ற சமூகத்துக்கு அதி முக்கிய திரைப்படங்களுக்கு கதை எழுதியும் எல்லா வித சினிமா விழாக்களிலும் கலந்து கொண்டும் சினிமாவை இன்னும் மறக்கவில்லை என்பதை காட்டும் உங்களது நன்றியுனர்வு என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது. மேலும் இந்த வயதிலும் அரைகுறை ஆடைகளோடு ஆடும் நடனங்களை பார்த்து மெய் மறந்து ரசிக்கும் நீங்கள் எத்தனை வயதானாலும் இளைஞனாகவே என் கண்களுக்கு படுகிறீர்கள். அதற்கா பாச தலைவன் என்னும் பட்டம் உங்களது தகுதிக்கு போதாதென்றே எனக்கு படுகிறது.

*    தமிழை உய்விக்க நீங்கள் செய்யும் சேவைகள் எண்ணிலடங்கா, சன் டீவி, ரெட் ஜயன்ட் மூவிஸ், சன் பிக்சர்ஸ், க்ளவுட் நைன் மூவிஸ் என தமிழ் மொழிக்கு உங்கள் குடும்பத்திலிருந்து கிடைத்திருக்கும் சொற்களை கொண்டே ஒரு அகராதி எழுதிடலாம்.

*  இந்த தள்ளாத வயதிலும் ஆட்சி பொறுப்பை யாருக்காவது கொடுத்தால் அவர்களால் நல்லாட்சி தரவியலாது என்பதால் மக்கள் சேவையிலேயே உங்களது நேரத்தை செலவிடும் கடமையுணர்ச்சி உலகில் எந்த தலைவருக்கும் வராதது. 

 இன்னும் உங்களது சாதனைகளை எழுதினால் இந்த பதிவை என்னால் முடிக்க முடியாமல் போய்விடும், ஆகையால் எனது இச்“சிறு” கடிதத்தை இத்துடன் முடித்து கொள்கிறேன்.

உங்களளவுக்கு கடிதமெழுதுவதில் அனுபவமில்லாததினால், இக்கடிதத்தில் ஏதாவது சொற்பிழை, எழுத்து பிழை இருந்தால் என்னை மன்னித்து கொள்ளுமாறு கேட்டு விடைபெறுகிறேன்.

இப்படிக்கு
அப்பாவி தமிழன்

Facebook Badge