நூடுல்ஸ் - 18-08-2010
சுராஜ் ரன்தீவ் போட்ட நோபோலுக்கு யப்பா எத்தனை விமர்சனங்கள், இனி மனுஷன் தூங்குறப்பவும் கிரீசுக்கு பின்னாடி இருக்கேனா என பார்த்து தூங்குவாராயிருக்கும்.
எனக்கு அவர் செய்தது பிழை என்பதில் எந்த வேறு கருத்தும் கிடையாது, எனினும் உணர்ச்சி வேகத்தில் அவ்வாறான விடயங்கள் நடப்பது சகஜமே, நான் ஓரு முறை விளையாடும்போது நடுவரின் மீது ஏற்பட்ட கோபத்தில் நானும் இவ்வாறு வேண்டுமென்றே 2 அடி முன்னாடி சென்று நோபோல் வீசியிருக்கிறேன்.
அது டீம் மீட்டிங்கில் திட்டமிட்டு செய்யப்பட்டதல்ல, அந்த நேரத்தில் உணர்ச்சி வசப்பட்டு ரன்தீவ் செய்தது, அவரது தவறுக்கு அவர் மன்னிப்பு கேட்டு விட்டார், தவறு செய்வது மனித குணம், அதற்கு மன்னிப்பு கேட்பது தெய்வ குணம், இந்த இடத்தில் சுராஜ் மன்னிப்பு கேட்டு விட்டார்.
ஆனால் இதை “சிங்களவனின் சதி” என்று இந்திய பதிவர்கள் சிலர் எழுதுவது கண்டிக்கதக்கது, விளையாட்டிலும் இனவாதத்தை விளைக்க முயல்வது கண்டிக்க தக்கது, அதிலும் முக்கியமாக அவர்களுக்கு தெரியாத விடயம், சுராஜ் ரன்தீவ் சிங்களவரல்ல என்பதும் அவர் ஒரு சிறுபான்மை இன வீரர் என்பதுமாகும்.
இந்த பிரச்சினையை பெரிதாக்குவது இந்திய ஊடகங்களாகும்
--------------------------------------------------------------------------
இந்திய ஊடகங்களை பற்றி கதைக்கையில் சொல்ல வேண்டிய ஒரு முக்கிய விடயம், அவற்றின் நம்பகதன்மை. இந்த லிங்கிற்கு சென்று பாருங்கள், எஸ்.வி.சேகர் என்னும் கட்சி விட்டு கட்சி தாண்டும் பச்சோந்தி நித்தியானந்தா மற்றும் ரஞ்சிதா மேல் பிழையில்லை என்று வாதாடுகிறதை ஒரு சினிமா செய்தி வெளியிடும் ஊடகம் வெளியிட்டிருப்பது கண்டிக்கதக்கது.
மக்களிற்கு உண்மையை எடுத்து செல்ல வேண்டிய ஊடகங்களே இவ்வாறான செய்தியை வெளியிடுவது நல்லதல்ல, தனக்கு இலாபமாக அதிக பணம் கிடைக்க வேண்டுமென்பதற்காக ஊடக விபச்சாரம் செய்யும் இவ்வாறான ஊடகங்களை தண்டிக்க வேண்டும், காரணம் ஊடகங்களில் எழுதியிருக்கும் அனைத்தும் உண்மை என்பதை நம்பும் ஏராளமானவர்களை எனக்கு தெரியும், எனது நண்பனொருவனின் தந்தை பத்திரிகையில் செய்தி வெளிவந்தால் அதை மிகவும் சரியென்பதாக நம்புவார், நாம் பிழை என்றால் எங்களோடு எதிர்த்து வாதிப்பார்.
--------------------------------------------------------------------------
எந்திரன் பாடல்களை கேட்டு கொண்டிருக்கும் போது எதேச்சையாக வானொலியொன்றில் “காதல் சொல்ல வந்தேன்” படத்திலிருந்து “அன்புள்ள சந்தியா” என்னும் பாடலை கேட்க நேர்ந்தது, செம கலக்கல் பாடல், கார்த்திக் உணர்ந்து பாடியிருக்கிறார். கார்த்திக் வாழ்க்கையில் சந்தியா என்று யாரையாவது காதலித்திருப்பாரோ? என்று என்னுமளவிற்கு இப்பாடலை பாடியிருக்கிறார்.
இப்போதைக்கு எனது பிளே லிஸ்ட்டில் எந்திரன் பாடல்களுக்கு அடுத்ததாக இருப்பது இப்பாடலேயாகும். கேட்டு பாருங்கள் ரசிப்பீர்கள்.
--------------------------------------------------------------------------
காலையில் வெற்றி வானொலியின் பேப்பர் தம்பியின் குறும்பான அரசியல் விமர்சனங்களை ரசிப்பதுண்டு, அந்த குரலுக்கு சொந்தக்காரர் யாரப்பா? திடீரென்று அவர் சொல்லும் அரசியல் பஞ்ச் வசனங்கள் கலக்கல்.
இன்று விடியலில் லோஷன் “நண்பர்களோடு ஒத்து போகும் விடயங்கள்” பற்றி கதைத்தார். நானும் ஒரு குறுஞ்செய்தி அனுப்ப நினைத்து பின்னர் எனது பதில் பெரிதாக இருப்பதால் அனுப்பவில்லை,
எனக்கு அதிகமாக நண்பர்கள் இருப்பதற்கு காரணம் ஒவ்வொரு நண்பரோடு ஒவ்வொரு விடயம் கதைப்பேன், சிலருக்கு கிரிக்கட் பிடிக்கும் அவர்களை சந்திக்கும் போது கிரிக்கட் கதைப்பேன், சிலருக்கு கிரிக்கட் பிடிக்காது கால்பந்து மட்டுமே பிடிக்கும், அவர்களை கண்டால் கால்பந்து பற்றி கதைப்பேன். இன்னும் சில நண்பர்கள் என்னை கண்டால் ஏ.ஆர். ரகுமானை பற்றி கதைப்பார்கள், அவர்களோடு இசைப்புயல் பற்றி கதைப்பேன், என்னைப்போல் இசைப்புயலின் தீவிர ரசிகர் ஒருவர் எனக்கு நண்பராகவுள்ளார், அவர் எனக்கு நண்பனாக ஆனதே இசைப்புயலின் பாடல்களினால் தானாகும். அவர் கடைசியாக என்னோடு கதைத்தது எந்திரன் பாடல் வெளியிட்ட நாளன்று அதற்கு முன்னர் அவர் கதைத்தது விண்ணை தாண்டி வருவாயா பாடல் வெளியீட்டன்று, எங்களிரண்டு பேருக்கு ரகுமானை தவிர்த்து வேறு எந்த விடயமும் கதைப்பதற்கு இல்லை.
--------------------------------------------------------------------------
எனது நண்பியொருத்திக்கு இரு கண்களிலும் பார்வையில்லை, ஆனாலும் தன்னம்பிக்கை என்னவென்பதை நான் அறிந்து கொண்டது அவளிடம்தான். அவளொரு பட்டதாரியும் கூட. அவளையும் ஒருத்தன் காதலித்தான். அந்த மனிதனை நான் கடவுளை விட பெரியவராக கருதினேன், ஆனால் இன்று அவளை விட்டு வேறு ஒருத்தியை கல்யாணம் கட்ட போகிறான், அவன் எனது தோழியை கை விட்டதற்கு காரணம் என்ன வென்று தெரியாது, ஆனால் இன்று அவன் எனது மனதில் ரொம்ப கேவலமானவனாகி விட்டான். இப்படிபட்டவளை கைவிட அவனுக்கு எப்படி மனம் வந்ததோ தெரியாது, இவனெல்லாம் ஒரு மனிதனா?
இவர்களும் மனிதர்களே.. இவர்களை படைத்த கடவுளின் தவறுக்கு இவர்களை பழிவாங்காதீர்கள். இவர்களை கண்டால் தயவு செய்து அவர்களுக்கு உதவுங்கள்





