மலை மகுடம், வெற்றி FMக்கு நன்றி
காலையில் ஒலிபரப்பாகும் வானொலி நிகழ்ச்சிகளை கேட்டு கொண்டே எனது காலை வேலைகளை செய்யும் நான், மற்றைய நேரங்களில் வானொலி கேட்பது என்பது மிகவும் குறைவு. எனினும் வெற்றி FM இல் அடிக்கடி மலையக்திற்கான நிகழ்ச்சி என்று குறிப்பிட்டு விளம்பரபடுத்தியன் காரணமாக கடந்த சனிக்கிழமை மலைமகுடம் நிகழ்ச்சி கேட்டேன். அந்நிகழ்ச்சி சம்பந்மாக எனது கருத்துகளை எழுத முயற்சித்து அதிக ஆணிபிடுங்கல்களுக்கு மத்தியில் இப்போது எழுதுகிறேன்.
மலையக மக்களிற்கான ஒரு சமகால நிகழ்வுகளை வெளிப்படுத்தகூடிய/விமர்சிக்க கூடிய ஒரு நிகழ்ச்சி காலத்தின் கட்டாயமாகவே நான் காணுகிறேன். நாளின் பெரும்பகுதியை உழைப்பிற்காகவே செலவிடும் அம்மக்கள் படும் கஷ்டங்களை கண்கூடாகவே கண்டிருக்கிறேன். எனது அப்பா ஒரு தேயிலை தொழிற்சாலை உத்தியோகத்தராக கடமை புரிந்ததாலும் மலையகத்திலிருக்கும் சில தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து நான் கடமை புரிந்ததாலும் அம்மக்களின் பல பிரச்சினைகளை நேரடியாகவே கண்டிருக்கிறேன். இம்மக்களின் இப்பிரச்சினைகளை வெளி உலகிற்கு சொல்ல வேண்டிய கடமை எமக்குள்ளது. காரணம் இலங்கையில் ஒரு பக்கம் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழர்களை போன்றே பொருளாதாரத்தால் பாதிக்கப்பட்ட இன்னொரு சமூகமும் இருப்பது பலருக்கு தெரியாததால் ஆகும்.
சம்பளப்பிரச்சினை, கல்விப்பிரச்சினை போன்றவற்றை வெளிக்கொணர்ந்த அந்நிகழ்ச்சியில் அடுத்து வரும் வாரங்களில் முடிந்தால் அப்பிரச்சினைகளை எதிர்கொள்ளும் மிக அடித்தட்டு மக்களிடம் பேசி அவர்களது கருத்துகளையும் வெளிப்படுத்துங்கள். மலையகத்தில் குழந்தைகளின் குறை வளர்ச்சிக்கான காரணத்தை அறிய ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் செய்த ஆய்வினில் பங்கு பற்றியுள்ளேன். எங்களது ஆய்வின் முடிவாக நாம் கண்டறிந்தது குறைவளர்ச்சிக்கான முக்கிய காரணம் பொருளாதாரம் மற்றும் குழந்தைகளுக்கான போசணை பற்றிய போதிய விளக்கமின்மை.
தோட்ட மருத்துவமனைகளில் தமிழ் தெரியாத Mid-Wife பணிபுரிதல், தமிழ் தெரிந்தாலும் தாய்மார்களுக்கு பக்குவமாக எடுத்து சொல்லாமை, மேலும் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய வரப்பிரசாதங்களை தட்டிப்பறித்தல் போன்றவைதான் அதிகமாக குழந்தைகள் குறை வளர்ச்சியடைவதற்கான காரணமாகும். இங்கு நான் குறை வளர்ச்சி என்பது வயதிற்கு தகுந்த எடை மற்றும் உயரம் காணப்படாமை என்பனவாகும்.
மேலும் மலையத்தில் தோட்ட தொழிலாளர் தவிர்ந்த இன்னும் பல இந்திய வம்சாவளி தமிழர்கள் உண்டு. இவர்கள் பல்வேறு நோக்கங்களுக்காக இந்தியாவிலிருந்து இங்கு வந்து இப்போது இலங்கையில் குடியேறியவர்கள்.
கல்வி பற்றி மலைமகுடத்தில் கூறிய சில விடயங்களை பார்க்கும் போது எனது பாடசாலை காலம் நினைவுக்கு வருகிறது. நுவரெலியா மாவட்டத்தில் காணப்படும் பல்வேறு பௌதீக, பொருளாதார காரணிகளை கொண்டு குறைந்த புள்ளிகளை பெற்றால் பல்கலைகழகம் என்னும் நிலை காணப்படுகிறது. இது சரியா பிழையா என விவாதம் நடந்து கொண்டிருக்கிறது, ஆனாலும் இவ்வரபிரசாத்தினால் பயனடைவது தோட்ட தொழிலாளர்களின் பிள்ளைகளா என்பது கேள்விக்குறியே?
நான் உயர்தரம் கற்கும் காலத்தில் வேறுமாவட்டத்தில் சாதாரண தரம் முழுவதும் படித்து, உயர்தரமும் கொஞ்சகாலம் படித்துவிட்டு எங்களது பாடசாலையில் இணைந்த இரண்டு மாணவர்கள் பல்கலைகழகம் தெரிவானார்கள், மிகவும் குறைந்த புள்ளிகள் வித்தியாசத்தில் எனது பல்கலைகழக தெரிவை இழந்தேன். மேலும் 1 புள்ளியினால் பல்கலைகழக தெரிவை இழந்த மாணவனையும் அறிவேன். இப்போதும் இதே பிரச்சினை காணப்படுகிறதா என தெரியவில்லை.
இந்நிகழ்ச்சியில் முடிந்தளவு இவ்வாறான மக்களின் பிரச்சினைகளை பதிவு செய்யுங்கள், அடிமட்டத்தில் வாழும் மக்களின் குரல்களை உலகிற்கு கொண்டு வாருங்கள். வாய்சொல் வீரர்களை விட அடிபட்ட மக்களின் குரல்களில் உள்ள துக்கம் ஆயிரம் கதை சொல்ல கூடியது. பாடல்களை கேட்கும் பத்தோடு பதினொன்றான நிகழ்ச்சியாக இல்லாமல் இலங்கை பொருளாதாரத்தின் அச்சாணியான இம்மக்கள், தங்கள் பொருளாதார பிரச்சினைகளை உலகிற்கு எடுத்து சொல்லும் நிகழ்வாக இந்நிகழ்ச்சி மாற பிரார்த்திக்கிறேன்.