காதலித்து பார் (Remix Version)

காதலித்து பார்,
உன்னை சுற்றி பேண்டேஜுகள் போடப்படும்,
மதுபானம் அர்த்தப்படும்
வானத்தின் நீலம் விளங்கும்,
உனக்கும் உதை விழும்,
எழுத கையில்லாமல் போகும்,
பொலிஸ்காரன் தெய்வம் ஆவான்,
கீழே விழுந்து மூக்கு கண்ணாடி உடையும்
கண்ணிரண்டும் ஒலி குருடாகும்
காதலித்து பார்...


படுக்கையை நனைப்பாய்
மூன்று முறை மருந்து குடிப்பாய்
காத்திருந்தால் 
வருஷங்கள் நிமிஷங்கள் என்பாய்
வந்துவிட்டால் நிமிஷங்கள் வருஷம் என்பாய்
தெருநாய் கூட உன்னை கவனிக்காது
ஆனால் உன் வீட்டு நாயே உன்னை கடிப்பதாய் உணாவாய்

உருட்டு கட்டையால் உதை வாங்கி நடு ரோட்டில் உருள்வாய்
இந்த ஆயுதங்கள், அண்ணன் காரன், அவனது நண்பர்கள் எல்லாம்
அவள் செய்த ஏற்பாடுகள் என்பாய்
காதலித்து பார்...



இருதயம் அடிக்கடி நின்று போகும்
பெரும் சப்தத்தில் உனது குரல் மட்டும் ஊமையாகும்
உன் நகம் கீறியே உனக்கு காயம் வரும்
பிறந்த நாளுக்கு கிடைத்த சட்டையை காதல் கிழிக்கும்
ஆர்மோன்கள் காய்ந்து போய்விடும்
உதடுகள் மட்டும் பீட்ரூட் ஆகும்
தாகங்கள் பீர்களாகும்
பிறகு மதுபான சாலையில் தாகங்கள் அடங்கும்
காதலித்து பார்...



அடிவாங்கியே உடைந்து போக உன்னால் முடியுமா
இம்சையை அனுபவித்து அகிம்சை அடைந்ததுண்டா?
அடிவாங்கும் சுகம் அறிந்ததுண்டா?
சாகமுன்னரே உன்னை புதைக்க வேண்டுமா?
பாதையில் தனிமையாகவும்
சபையில் கூட்டமாகவும்
ஏளனபட வேண்டுமா?



ஹாஸ்பிட்டலை அடைய வேண்டுமா?
ஐந்து அங்குலமாவது உன்னை தைக்க வேண்டுமா?
பட்டினியே பரவாயில்லை என எண்ணியதுண்டா?
காதலித்து பார்...



கடன் வாங்கி பரிசு கொடுத்து சிலிர்க்க முடியுமே அதற்க்காகவேணும்
ஆண் என்ற சொல்லுக்கு ஏமாளி எனவும்

பெண் என்ற சொல்லுக்கு அறிவாளி எனவும்
அகராதியில் ஏறாத அர்த்தங்கள் விளங்குமே அதற்க்காகவேணும்
வாழ்விலே கஷ்டபடவும்
சாவிலே சந்தோஷபடவும் முடியுமே , அதற்க்காகவேணும்
காதலித்து பார்...




அண்ணன் காரன் சட்டை கிழித்தாலும்
உறவுகள் உயிர் எடுத்தாலும்
விழித்து பார்க்கையில் உன் “பர்ஸ்” களவு போய் இருந்தாலும்
ஒரே ஆணியில் உன்னை மட்டும் சிலுவையில் அறைந்தாலும்
நீ நேசிக்கும் அவனோ அவளோ உன்னை நேசிக்க மறந்தாலும்
காதலித்து பார்...

பார், ஹாஸ்பிட்டல் இரண்டில் ஒன்று இங்கேயே நிச்சயம்
காதலித்து பார்.........

நூடுல்ஸ் - 18-08-2010

சுராஜ் ரன்தீவ் போட்ட நோபோலுக்கு யப்பா எத்தனை விமர்சனங்கள், இனி மனுஷன் தூங்குறப்பவும் கிரீசுக்கு பின்னாடி இருக்கேனா என பார்த்து தூங்குவாராயிருக்கும். 

எனக்கு அவர் செய்தது பிழை என்பதில் எந்த வேறு கருத்தும் கிடையாது, எனினும் உணர்ச்சி வேகத்தில் அவ்வாறான விடயங்கள் நடப்பது சகஜமே, நான் ஓரு முறை விளையாடும்போது நடுவரின் மீது ஏற்பட்ட கோபத்தில் நானும் இவ்வாறு வேண்டுமென்றே 2 அடி முன்னாடி சென்று நோபோல் வீசியிருக்கிறேன். 

அது டீம் மீட்டிங்கில் திட்டமிட்டு செய்யப்பட்டதல்ல, அந்த நேரத்தில் உணர்ச்சி வசப்பட்டு ரன்தீவ் செய்தது, அவரது தவறுக்கு அவர் மன்னிப்பு கேட்டு விட்டார், தவறு செய்வது மனித குணம், அதற்கு மன்னிப்பு கேட்பது தெய்வ குணம், இந்த இடத்தில் சுராஜ் மன்னிப்பு கேட்டு விட்டார்.

ஆனால் இதை “சிங்களவனின் சதி” என்று இந்திய பதிவர்கள் சிலர் எழுதுவது கண்டிக்கதக்கது, விளையாட்டிலும் இனவாதத்தை விளைக்க முயல்வது கண்டிக்க தக்கது, அதிலும் முக்கியமாக அவர்களுக்கு தெரியாத விடயம், சுராஜ் ரன்தீவ் சிங்களவரல்ல என்பதும் அவர் ஒரு சிறுபான்மை இன வீரர் என்பதுமாகும். 

இந்த பிரச்சினையை பெரிதாக்குவது இந்திய ஊடகங்களாகும்

--------------------------------------------------------------------------

இந்திய ஊடகங்களை பற்றி கதைக்கையில் சொல்ல வேண்டிய ஒரு முக்கிய விடயம், அவற்றின் நம்பகதன்மை. இந்த  லிங்கிற்கு சென்று பாருங்கள், எஸ்.வி.சேகர் என்னும் கட்சி விட்டு கட்சி தாண்டும் பச்சோந்தி நித்தியானந்தா மற்றும் ரஞ்சிதா மேல் பிழையில்லை என்று வாதாடுகிறதை ஒரு சினிமா செய்தி வெளியிடும் ஊடகம் வெளியிட்டிருப்பது கண்டிக்கதக்கது.

மக்களிற்கு உண்மையை எடுத்து செல்ல வேண்டிய ஊடகங்களே இவ்வாறான செய்தியை வெளியிடுவது நல்லதல்ல, தனக்கு இலாபமாக அதிக பணம் கிடைக்க வேண்டுமென்பதற்காக ஊடக விபச்சாரம் செய்யும் இவ்வாறான ஊடகங்களை தண்டிக்க வேண்டும், காரணம் ஊடகங்களில் எழுதியிருக்கும் அனைத்தும் உண்மை என்பதை நம்பும் ஏராளமானவர்களை எனக்கு தெரியும், எனது நண்பனொருவனின் தந்தை பத்திரிகையில் செய்தி வெளிவந்தால் அதை மிகவும் சரியென்பதாக நம்புவார், நாம் பிழை என்றால் எங்களோடு எதிர்த்து வாதிப்பார்.

--------------------------------------------------------------------------

எந்திரன் பாடல்களை கேட்டு கொண்டிருக்கும் போது எதேச்சையாக வானொலியொன்றில் “காதல் சொல்ல வந்தேன்” படத்திலிருந்து “அன்புள்ள சந்தியா” என்னும் பாடலை கேட்க நேர்ந்தது, செம கலக்கல் பாடல், கார்த்திக் உணர்ந்து பாடியிருக்கிறார். கார்த்திக் வாழ்க்கையில் சந்தியா என்று யாரையாவது காதலித்திருப்பாரோ?  என்று என்னுமளவிற்கு இப்பாடலை பாடியிருக்கிறார்.

இப்போதைக்கு எனது பிளே லிஸ்ட்டில் எந்திரன் பாடல்களுக்கு அடுத்ததாக இருப்பது இப்பாடலேயாகும். கேட்டு பாருங்கள் ரசிப்பீர்கள்.

--------------------------------------------------------------------------

காலையில் வெற்றி வானொலியின் பேப்பர் தம்பியின் குறும்பான அரசியல் விமர்சனங்களை ரசிப்பதுண்டு, அந்த குரலுக்கு சொந்தக்காரர் யாரப்பா? திடீரென்று அவர் சொல்லும் அரசியல் பஞ்ச் வசனங்கள் கலக்கல்.

இன்று விடியலில் லோஷன் “நண்பர்களோடு ஒத்து போகும் விடயங்கள்” பற்றி கதைத்தார். நானும் ஒரு குறுஞ்செய்தி அனுப்ப நினைத்து பின்னர் எனது பதில் பெரிதாக இருப்பதால் அனுப்பவில்லை, 

எனக்கு அதிகமாக நண்பர்கள் இருப்பதற்கு காரணம் ஒவ்வொரு நண்பரோடு ஒவ்வொரு விடயம் கதைப்பேன், சிலருக்கு கிரிக்கட் பிடிக்கும் அவர்களை சந்திக்கும் போது கிரிக்கட் கதைப்பேன், சிலருக்கு கிரிக்கட் பிடிக்காது கால்பந்து மட்டுமே பிடிக்கும், அவர்களை கண்டால் கால்பந்து பற்றி கதைப்பேன். இன்னும் சில நண்பர்கள் என்னை கண்டால் ஏ.ஆர். ரகுமானை பற்றி கதைப்பார்கள், அவர்களோடு இசைப்புயல் பற்றி கதைப்பேன், என்னைப்போல் இசைப்புயலின் தீவிர ரசிகர் ஒருவர் எனக்கு நண்பராகவுள்ளார், அவர் எனக்கு நண்பனாக ஆனதே இசைப்புயலின் பாடல்களினால் தானாகும். அவர் கடைசியாக என்னோடு கதைத்தது எந்திரன் பாடல் வெளியிட்ட நாளன்று அதற்கு முன்னர் அவர் கதைத்தது விண்ணை தாண்டி வருவாயா பாடல் வெளியீட்டன்று, எங்களிரண்டு பேருக்கு ரகுமானை தவிர்த்து வேறு எந்த விடயமும் கதைப்பதற்கு இல்லை.

--------------------------------------------------------------------------


எனது நண்பியொருத்திக்கு இரு கண்களிலும் பார்வையில்லை, ஆனாலும் தன்னம்பிக்கை என்னவென்பதை நான் அறிந்து கொண்டது அவளிடம்தான். அவளொரு பட்டதாரியும் கூட. அவளையும் ஒருத்தன் காதலித்தான். அந்த மனிதனை நான் கடவுளை விட பெரியவராக கருதினேன், ஆனால் இன்று அவளை விட்டு வேறு ஒருத்தியை கல்யாணம் கட்ட போகிறான், அவன் எனது தோழியை கை விட்டதற்கு காரணம் என்ன வென்று தெரியாது, ஆனால் இன்று அவன் எனது மனதில் ரொம்ப கேவலமானவனாகி விட்டான். இப்படிபட்டவளை கைவிட அவனுக்கு எப்படி மனம் வந்ததோ தெரியாது, இவனெல்லாம் ஒரு மனிதனா?


 இவர்களும் மனிதர்களே.. இவர்களை படைத்த கடவுளின் தவறுக்கு இவர்களை பழிவாங்காதீர்கள். இவர்களை கண்டால் தயவு செய்து அவர்களுக்கு உதவுங்கள்





நூடில்ஸ் (12.08.2010)

முதலாவது பதிவர் சந்திப்பு நடந்து இம்மாதத்துடன் ஒரு வருடமாகிறது, எங்கெங்கொ தனி தனியாக பதிவிட்டு கொண்டிருந்த இலங்கை தமிழ் பதிவர்களை ஒன்று சேர்த்த அந்த நிகழ்வுக்கு முக்கிய காரணமானது புல்லட் கண்ட பதிவர் சந்திப்பு பற்றிய கனவு பதிவு. இப்போது புல்லட் எழுதுவதை காணவில்லை, ஏனென்று தெரியவில்லை?, சீக்கிரம் பதிவுலகிற்கு வருமாறு புல்லட்டை கேட்டு கொள்கிறேன். 

---------------------------------------------------------------------------------

மேலும் இந்த ஆகஸ்ட் 31ம் திகதியுடன் ப்லொக்கருக்கு 11 வயதாகிறது. இம்முறை இலங்கை பதிவர்கள் அனைவரும் சேர்ந்து ப்லொக்கரின் பிறந்த நாளன்று கூகுல் குழுமத்தில் சந்திப்பொன்றை நடத்தினால் நல்லதென்று நினைக்கிறேன், நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

---------------------------------------------------------------------------------

இலங்கை இந்திய அணிகளுக்கிடையில் ஒரு நாள் கிரிக்கட் போட்டிகள் மீண்டும் தொடங்கி விட்டன, தொடர்ந்து இந்த இரண்டு அணிகளுக்கிடையில் போட்டிகள் நடப்பது எனக்கென்னவோ கிரிக்கட் பார்க்கும் ஆசையையே இல்லாமல் செய்து விட்டது.  மீண்டும் மொஹம்மட் யுசுப் பாகிஸதான் அணிக்கு விளையாட போகிறார், “மீண்டும் யுசுப்”, இவர் எத்தனை முறை ஓய்வு பெற்றார் என்பதை இவரே மறந்திருப்பார் என நினைக்கிறேன். உலகத்திலே புரிந்து கொள்ள முடியாதது இரண்டு விடயங்கள் என நினைக்கிறேன், முதலாவது பெண்களின் மனது அடுத்தது பாகிஸ்தான் கிரிக்கட் சபை எடுக்கும் முடிவுகள்.

---------------------------------------------------------------------------------

எந்திரன் பட பாடல்கள் கலக்கோ கலக்கல், மணிரத்தினம் படங்களை போல் ரகுமானுக்கு சங்கர் படங்களில் வித்தியாசமான இசையை வழங்கமுடியாது காரணம், சங்கர் படங்களில் ஒரு குறிப்பிட்ட பார்முலாவிற்குதான் இசையமைக்க முடியும், அதிலும் ரகுமான் ஸ்கோர் பண்ணியிருப்பது மகிழ்ச்சியே. “புதிய மனிதா” பாடலை கேட்கும் போது எஸ்.பீ.பாலசுப்ரமணியத்திற்கு இன்னும் 20 வயதோ என எண்ண தோணுகிறது. மனுஷனின் குரல் இன்னும் இளமையாகி கொண்டே போகிறது. அவர் இன்னும் 100 வருடங்கள் வாழ்ந்து பல பாடல்களை தர வேண்டும்.

---------------------------------------------------------------------------------

தஞ்சை பெருங்கோயிலின் 1000மாவது வருட நிகழ்வை தமிழக அரசு கொண்டாட போகிறதாம், பாவம் தமிழக மக்கள் கோயிலும் கருணாநிதியின் பெருமைகளை கேட்க போகிறார்கள், அதில் எனக்கொரு சந்தேகம் தஞ்சை பெருங்கோயிலை கட்டியது கருணாநிதியின் பாட்டன் என சொல்ல போகிறார்களோ?
---------------------------------------------------------------------------------

கிரிக் இன்போ இணைய தளத்தில் வெளியான இரண்டு கார்ட்டுன்கள் கீழே



கலைஞர் ஐயாவுக்கு ஒரு கடிதம்

மதிப்புகுறிய கலைஞர் ஐயா அவர்களுக்கு, 

இனிமேல் வாரா வாரம் யாருக்காவது கடிதமெழுதலாமென யோசித்த முதல் கடிதமான இக்கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேனையா. வேறு யாருக்கும் கடிதம் எழுதுவதை காட்டிலும் உங்களுக்கு கடிதமெழுதுவது லேசான காரியமில்லை என்பது எனக்கு தெரியும். அண்ணாமலைக்கே பாலா இல்லாட்டி திருப்பதிக்கே மொட்டையா என பலர் கேட்கிறார்கள். கடிதமெழுதியே பல சாதனைகளை படைத்த சாதனை தமிழரல்லவா நீங்கள். ஆமாம் கேட்க மறந்து விட்டேன், நீங்கள் நலமாக இருக்கிறீர்களா? 

உங்கள் நலத்துக்கு என்ன குறை வரபோகிறது, மகன், பேரன், கொள்ளு பேரன், அவனது மகன் என பலரது ஆயுளை எடுத்து கொண்டு நீங்கள் இன்னும் பல காலம் வாழவேண்டும். உங்களது சாதனைகளை பற்றி பல விழாக்களை பார்த்து அதில் கவரப்பட்ட நான், ஏதோ என்னளவில் உங்களுக்கு பாராட்டு விழா எடுக்கவியலாது ஆகையால் ஒரு பாராட்டு கடிதமெழுதுகிறேன். உங்களது சாதனைகள் தான் எத்தனை எத்தனை, அவற்றில் சிலவற்றை மீட்டி பார்க்கிறேன்.

* என்னுடைய தாத்தாவுடைய அப்பா காலத்தில் நாடகங்களுக்கும் படங்களுக்கும் கதை எழுதி புகழடைந்த நீங்கள், அந்த புகழை வைத்தே ஆட்சியை கைப்பற்றிய சாதனை உலகத்தில் எந்த எழுத்தாளராலும் முடியாத விடயம், பெரிய எழுத்தாளராக கருதப்படும் ஷேக்ஸ்பியரையே நீங்கள் இந்த விடயத்தில் தோற்கடித்துவிட்டீர்கள்.

*    உலக தமிழர்கள் எங்காவது கஷ்டபட நேர்ந்தால் ஒரு கடிதத்தை எழுதியே அவர்கள் குறையை தீர்த்து வைக்கும் நீங்கள் ஒரு மேதை என்பதில் எந்த சந்தேகமில்லை, மகாத்மாவின் காந்தியின் அகிம்சை கொள்கையின் மொத்த உருவமாக உங்களை காண்கிறேன், இலங்கை தமிழர்கள் போரில் கஷ்டபட்ட போதும், இந்திய மீனவர்கள் கடலில் தாக்கப்பட்ட போதும் ஒரே ஒரு பேப்பரையும் பேனாவையும் வைத்து கடிதமெழுதி அப்பிரச்சினைகளை தீர்த்த உங்களை எப்படி பாராட்டினாலும் தகும். பிள்ளையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டிவிடும் உங்களது திறமைக்கு ஆஸ்கார் விருதோ கின்னஸ் விருதோ கிடைக்காமல் விட்டதில் ஏதொ சதியிருக்கிறதென்று நினைக்கிறேன்

*  அந்த காலத்தில் படங்களுக்கு கதைவசனமெழுதி சாதாரண தமிழனுக்கே தமிழை சொல்லி கொடுத்து தமிழை வளர்த்த அதன் உச்சகட்டமாக நீங்கள் ஆனானபட்ட உலக சூப்பர்ஸ்டார் ஜாக்கிசேனையே மேடையில் உட்காரவைத்து அரை மணித்தியாலம் எனக்கே புரியாத தமிழில் கவி நயத்துடன் வாழ்த்தி உலக சூப்பர் ஸ்டாருக்கே நீங்கள் தமிழ் சொல்லி கொடுத்தீர்கள், அந்த காட்சியை பார்த்து நான் ஆனந்த கண்ணீர் விட்டது இன்னும் என் மனதில் பசுமையாய் இருக்கிறது.

*   கம்பன், வள்ளுவன், பாரதி போன்றோர் தமிழுக்கு செய்த சேவையை விட ஆயிரம் மடங்கு செய்த சேவையை நீங்கள் தமிழுக்கு செய்திருப்பதினால் தமிழ் என்னும் தொன்மையான மொழியை அழிவிலிருந்து காப்பாற்றியிருக்கும் உங்களை செம்மொழி மாநாட்டில் அனைவரும் புகழ்தது என்னை பொருத்தவரையில் குறைவானதாகவே படுகிறது.  அதிலும் சினிமா பாட்டெழுத கூப்பிட்ட போது “அம்மி கொத்த சிற்பி தேவையில்லை” என விழித்த மாபெரும் கவிஞாக என் மனதிலிருந்த அப்துல் ரகுமானையே உங்கள் துதி பாட செய்தது ஒரு சாதனையே..

*  ஏழு கோடி மக்களை ஆட்சி செய்யும் முக்கியமான பதவியிலிருந்தாலும் வந்த வழியை மறக்காமல் பெண் சிங்கம், உளியின் ஓசை போன்ற சமூகத்துக்கு அதி முக்கிய திரைப்படங்களுக்கு கதை எழுதியும் எல்லா வித சினிமா விழாக்களிலும் கலந்து கொண்டும் சினிமாவை இன்னும் மறக்கவில்லை என்பதை காட்டும் உங்களது நன்றியுனர்வு என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது. மேலும் இந்த வயதிலும் அரைகுறை ஆடைகளோடு ஆடும் நடனங்களை பார்த்து மெய் மறந்து ரசிக்கும் நீங்கள் எத்தனை வயதானாலும் இளைஞனாகவே என் கண்களுக்கு படுகிறீர்கள். அதற்கா பாச தலைவன் என்னும் பட்டம் உங்களது தகுதிக்கு போதாதென்றே எனக்கு படுகிறது.

*    தமிழை உய்விக்க நீங்கள் செய்யும் சேவைகள் எண்ணிலடங்கா, சன் டீவி, ரெட் ஜயன்ட் மூவிஸ், சன் பிக்சர்ஸ், க்ளவுட் நைன் மூவிஸ் என தமிழ் மொழிக்கு உங்கள் குடும்பத்திலிருந்து கிடைத்திருக்கும் சொற்களை கொண்டே ஒரு அகராதி எழுதிடலாம்.

*  இந்த தள்ளாத வயதிலும் ஆட்சி பொறுப்பை யாருக்காவது கொடுத்தால் அவர்களால் நல்லாட்சி தரவியலாது என்பதால் மக்கள் சேவையிலேயே உங்களது நேரத்தை செலவிடும் கடமையுணர்ச்சி உலகில் எந்த தலைவருக்கும் வராதது. 

 இன்னும் உங்களது சாதனைகளை எழுதினால் இந்த பதிவை என்னால் முடிக்க முடியாமல் போய்விடும், ஆகையால் எனது இச்“சிறு” கடிதத்தை இத்துடன் முடித்து கொள்கிறேன்.

உங்களளவுக்கு கடிதமெழுதுவதில் அனுபவமில்லாததினால், இக்கடிதத்தில் ஏதாவது சொற்பிழை, எழுத்து பிழை இருந்தால் என்னை மன்னித்து கொள்ளுமாறு கேட்டு விடைபெறுகிறேன்.

இப்படிக்கு
அப்பாவி தமிழன்

Facebook Badge