கலைஞர் ஐயாவுக்கு ஒரு கடிதம்
மதிப்புகுறிய கலைஞர் ஐயா அவர்களுக்கு,
இனிமேல் வாரா வாரம் யாருக்காவது கடிதமெழுதலாமென யோசித்த முதல் கடிதமான இக்கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேனையா. வேறு யாருக்கும் கடிதம் எழுதுவதை காட்டிலும் உங்களுக்கு கடிதமெழுதுவது லேசான காரியமில்லை என்பது எனக்கு தெரியும். அண்ணாமலைக்கே பாலா இல்லாட்டி திருப்பதிக்கே மொட்டையா என பலர் கேட்கிறார்கள். கடிதமெழுதியே பல சாதனைகளை படைத்த சாதனை தமிழரல்லவா நீங்கள். ஆமாம் கேட்க மறந்து விட்டேன், நீங்கள் நலமாக இருக்கிறீர்களா?
உங்கள் நலத்துக்கு என்ன குறை வரபோகிறது, மகன், பேரன், கொள்ளு பேரன், அவனது மகன் என பலரது ஆயுளை எடுத்து கொண்டு நீங்கள் இன்னும் பல காலம் வாழவேண்டும். உங்களது சாதனைகளை பற்றி பல விழாக்களை பார்த்து அதில் கவரப்பட்ட நான், ஏதோ என்னளவில் உங்களுக்கு பாராட்டு விழா எடுக்கவியலாது ஆகையால் ஒரு பாராட்டு கடிதமெழுதுகிறேன். உங்களது சாதனைகள் தான் எத்தனை எத்தனை, அவற்றில் சிலவற்றை மீட்டி பார்க்கிறேன்.
* என்னுடைய தாத்தாவுடைய அப்பா காலத்தில் நாடகங்களுக்கும் படங்களுக்கும் கதை எழுதி புகழடைந்த நீங்கள், அந்த புகழை வைத்தே ஆட்சியை கைப்பற்றிய சாதனை உலகத்தில் எந்த எழுத்தாளராலும் முடியாத விடயம், பெரிய எழுத்தாளராக கருதப்படும் ஷேக்ஸ்பியரையே நீங்கள் இந்த விடயத்தில் தோற்கடித்துவிட்டீர்கள்.
* உலக தமிழர்கள் எங்காவது கஷ்டபட நேர்ந்தால் ஒரு கடிதத்தை எழுதியே அவர்கள் குறையை தீர்த்து வைக்கும் நீங்கள் ஒரு மேதை என்பதில் எந்த சந்தேகமில்லை, மகாத்மாவின் காந்தியின் அகிம்சை கொள்கையின் மொத்த உருவமாக உங்களை காண்கிறேன், இலங்கை தமிழர்கள் போரில் கஷ்டபட்ட போதும், இந்திய மீனவர்கள் கடலில் தாக்கப்பட்ட போதும் ஒரே ஒரு பேப்பரையும் பேனாவையும் வைத்து கடிதமெழுதி அப்பிரச்சினைகளை தீர்த்த உங்களை எப்படி பாராட்டினாலும் தகும். பிள்ளையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டிவிடும் உங்களது திறமைக்கு ஆஸ்கார் விருதோ கின்னஸ் விருதோ கிடைக்காமல் விட்டதில் ஏதொ சதியிருக்கிறதென்று நினைக்கிறேன்
* அந்த காலத்தில் படங்களுக்கு கதைவசனமெழுதி சாதாரண தமிழனுக்கே தமிழை சொல்லி கொடுத்து தமிழை வளர்த்த அதன் உச்சகட்டமாக நீங்கள் ஆனானபட்ட உலக சூப்பர்ஸ்டார் ஜாக்கிசேனையே மேடையில் உட்காரவைத்து அரை மணித்தியாலம் எனக்கே புரியாத தமிழில் கவி நயத்துடன் வாழ்த்தி உலக சூப்பர் ஸ்டாருக்கே நீங்கள் தமிழ் சொல்லி கொடுத்தீர்கள், அந்த காட்சியை பார்த்து நான் ஆனந்த கண்ணீர் விட்டது இன்னும் என் மனதில் பசுமையாய் இருக்கிறது.
* கம்பன், வள்ளுவன், பாரதி போன்றோர் தமிழுக்கு செய்த சேவையை விட ஆயிரம் மடங்கு செய்த சேவையை நீங்கள் தமிழுக்கு செய்திருப்பதினால் தமிழ் என்னும் தொன்மையான மொழியை அழிவிலிருந்து காப்பாற்றியிருக்கும் உங்களை செம்மொழி மாநாட்டில் அனைவரும் புகழ்தது என்னை பொருத்தவரையில் குறைவானதாகவே படுகிறது. அதிலும் சினிமா பாட்டெழுத கூப்பிட்ட போது “அம்மி கொத்த சிற்பி தேவையில்லை” என விழித்த மாபெரும் கவிஞாக என் மனதிலிருந்த அப்துல் ரகுமானையே உங்கள் துதி பாட செய்தது ஒரு சாதனையே..
* ஏழு கோடி மக்களை ஆட்சி செய்யும் முக்கியமான பதவியிலிருந்தாலும் வந்த வழியை மறக்காமல் பெண் சிங்கம், உளியின் ஓசை போன்ற சமூகத்துக்கு அதி முக்கிய திரைப்படங்களுக்கு கதை எழுதியும் எல்லா வித சினிமா விழாக்களிலும் கலந்து கொண்டும் சினிமாவை இன்னும் மறக்கவில்லை என்பதை காட்டும் உங்களது நன்றியுனர்வு என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது. மேலும் இந்த வயதிலும் அரைகுறை ஆடைகளோடு ஆடும் நடனங்களை பார்த்து மெய் மறந்து ரசிக்கும் நீங்கள் எத்தனை வயதானாலும் இளைஞனாகவே என் கண்களுக்கு படுகிறீர்கள். அதற்கா பாச தலைவன் என்னும் பட்டம் உங்களது தகுதிக்கு போதாதென்றே எனக்கு படுகிறது.
* தமிழை உய்விக்க நீங்கள் செய்யும் சேவைகள் எண்ணிலடங்கா, சன் டீவி, ரெட் ஜயன்ட் மூவிஸ், சன் பிக்சர்ஸ், க்ளவுட் நைன் மூவிஸ் என தமிழ் மொழிக்கு உங்கள் குடும்பத்திலிருந்து கிடைத்திருக்கும் சொற்களை கொண்டே ஒரு அகராதி எழுதிடலாம்.
* இந்த தள்ளாத வயதிலும் ஆட்சி பொறுப்பை யாருக்காவது கொடுத்தால் அவர்களால் நல்லாட்சி தரவியலாது என்பதால் மக்கள் சேவையிலேயே உங்களது நேரத்தை செலவிடும் கடமையுணர்ச்சி உலகில் எந்த தலைவருக்கும் வராதது.
இன்னும் உங்களது சாதனைகளை எழுதினால் இந்த பதிவை என்னால் முடிக்க முடியாமல் போய்விடும், ஆகையால் எனது இச்“சிறு” கடிதத்தை இத்துடன் முடித்து கொள்கிறேன்.
உங்களளவுக்கு கடிதமெழுதுவதில் அனுபவமில்லாததினால், இக்கடிதத்தில் ஏதாவது சொற்பிழை, எழுத்து பிழை இருந்தால் என்னை மன்னித்து கொள்ளுமாறு கேட்டு விடைபெறுகிறேன்.
இப்படிக்கு
அப்பாவி தமிழன்
அவ்வ்வ்வ்வ்வ்வ்....
எவ்வளவு தான் தாங்குவார் ஐயா?
// தமிழை உய்விக்க நீங்கள் செய்யும் சேவைகள் எண்ணிலடங்கா, சன் டீவி, ரெட் ஜயன்ட் மூவிஸ், சன் பிக்சர்ஸ், க்ளவுட் நைன் மூவிஸ் என தமிழ் மொழிக்கு உங்கள் குடும்பத்திலிருந்து கிடைத்திருக்கும் சொற்களை கொண்டே ஒரு அகராதி எழுதிடலாம். //
ஸ்டாலின் என்ற பெயரை விட்டமைக்குக் கண்டனங்கள்... ;)
யோகா ஏன் செத்த பாம்பை ஏன் மீண்டும் அடிக்கின்றீர்கள்.
கிழவனுக்கு காது சவிடு கண்குருடு தெரியாதே...
அன்பு உடன் பிறப்பே..
1957 களில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தின்போது அன்றய நாட்களில் என்னோடு தோழ் நின்று போராடிய அன்புத்தம்பிகளின் அக்கறையான கடித அறிக்கைகள், கண்டனங்களை இன்று அன்புத்தம்பி யோகோ உங்கள் திருமகத்தில் கண்டுகொண்டேன்.
இருந்தபோதிலும் ஆங்காங்கே என் பற்றிய புகழ்ச்சிகளில் நான் உவகை கொள்கின்றேன். அன்பு உடன்பிறப்பு யோகா எப்போதும் என்மீது பேரன்பு கொண்டவர்.
அன்று நான் கூறியதுபோல
"வீழ்வது உடலாக இருந்தாலும்
வாழ்வது தமிழாக இருக்கவேண்டும்"
என்ற கொள்கையை தமது கடமையாகக்கொண்டு என்னை தலைவனாக ஏற்று வாழ்ந்துவரும் என் இளவல்.
மதியையும் குளிர்ச்சியையும் பிரிக்க முடியாது, சமுத்திரத்தையும் அலையையும் பிரிக்கமுடியாது, அதேபோல என்னையும் என் அன்புத்தம்பி யோகாவையும் பிரிக்க சிலர் எத்தனித்தாலும் அது நடக்காது.
(தங்கள் கடிதத்திற்கு கலைஞர் ஐயா பதில் எழுதினால்)
அருமையான கடிதம்
சிரிப்பு வருது சிரிப்பு வருது சித்தப்பா!!!