நூடுல்ஸ் (30-12-2010)

கடந்த வாரம் நத்தார் பண்டிகையை கொண்டாடிய நண்பர்கள் அனைவருக்கும் எனது நத்தார் தின வாழ்த்துக்கள், ஒவ்வொரு வருடமும் நண்பர்களின் வீட்டிலே அவர்களுடன் சேர்ந்து நத்தார் பண்டிகை கொண்டாடி வந்த எனக்கு இம்முறை கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் பங்கெடுக்க முடியாமல் போனது வருத்தமே. வழமையாகவே நுவரெலியாவில் டிசம்பர் மாதங்களில் காணப்படும் தூறல், மூடுபனி, கடுங் குளிர் மற்றும் அங்கு கூடும் வெளி மாவட்ட மக்களின் எண்ணிக்கை என்பவற்றால் எமது பிரதேசம் மிகவும் அழகாய் காணப்படும். இவற்றை எல்லாம் இம்முறை மிஸ் பண்ணியது கவலையான விடயம்.

-----------------------------------------------------------------------

ஒரு காலத்தில் இளைஞர்களுக்கு பிடித்த ஆங்கில வானொலி அலைவரிசையான SUN FM, அரசியல் குத்து வெட்டுக்களின் பின்னர் மீள முதலாம் திகதி தொடக்கம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளி வந்துள்ளன. மீள தொடங்கவிருக்கும் SUN FM வானொலிக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

-----------------------------------------------------------------------

பதிவர் ஜனா தனது மாத்தி யோசி என்னும் பதிவில் என்னை ஒரு ஆவிக்கதை எழுத சொல்லி அழைத்திருக்கிறார். எப்படி யோசித்தாலும் ஆவி வரவே மாட்டேங்குதே? ஆவியை தேடி இரவு 12 மணிக்கு வீதியில் தனியாகவும் நடந்து பார்த்தேன், ஆனாலும் அங்கு நான் ஆவிகளுக்கு பதிலாக பாவிகளையே கண்டேன். அந்த பாவிகளை பற்றி தனியாக ஒரு பதிவு பின்னர் எழுதுகிறேன். அதற்கு முன்னர் ஜனாவின் விருப்பப்படி ஜனவரியில் ஆவிகளை பற்றி எழுத வேண்டும்.

-----------------------------------------------------------------------

ஆஷஸ் தொடரை இங்கிலாந்துக்கு தாரை வார்த்து கொடுத்து விட்டனர் அவுஸ்திரேலிய அணியினர். அவுஸ்திரேலியர் சிகரத்திலிருந்து இவ்வளவு சீக்கிரமாக கீழே விழுவர் என நான் எண்ணியும் இருக்கவில்லை. எனக்கென்னவோ அவுஸ்திரேலியரின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் தேர்வுக்குழுவே என எண்ணத் தோன்றுகிறது. ஸ்மித் போன்ற வீரர்கள் பங்களாதேஷ் டெஸ்ட் அணியில் இடம்பிடிப்பதே கடினம், ஆனால் இவ்வாறான வீரர்களை தெரிவு செய்தது அவர்களது முக்கிய குற்றமாகவே படுகிறது. அடுத்த போட்டியில் பொன்டிங்குக்கு பதிலாக அணி தலைவராக பங்கெடுக்கும் கிளார்க் இழந்த மானத்தை ஒரளவாவது காப்பாற்றுவாரா என பார்ப்போம்.

-----------------------------------------------------------------------

தென்னாபிரிக்காவுக்கு எதிரான இரண்டாம் டெஸ்ட் போட்டியில் இந்தியா வென்று தொடருக்கு உயிரூட்டியிருக்கிறது, ஆனாலும் இப்போட்டியில் இந்திய அணி வீரர்களுக்கு ஆதரவாக நடுவர்களும் விளையாண்டனர் என்பது போட்டியை பார்த்த அனைவருக்கும் தெரியும். UDRS முறையை இந்திய அணியினர் எதிர்த்தது இப்போட்டியை பொறுத்தவரையில் அவர்களுக்கு சாதகமாகவே இருந்தது. UDRS முறை இருந்திருந்தால் போட்டி முடிவு மாறியிருக்கலாம்.  இந்திய அணி முதலாமிடத்தை பிடித்த இலங்கையுடனான தொடரின் முக்கிய போட்டியில் நடுவர்களின் தவறான முடிவுகளால் போட்டி இந்திய அணிக்கு சாதமாக மாறியது அனைவருமறிந்ததே.  சேவாக்குக்கு வழங்கப்படாத ஆட்டமிழப்பு, போர்மிலிருந்த டில்ஷானுக்கு இரண்டு இனிங்சிலும் வழங்கிய பிழையான ஆட்டமிழப்புக்களே இந்திய அணியை முதலாமி்டத்துக்கு கொண்டு சென்றது என நான் எண்ணுகிறேன்.


நான் இந்திய அணியின் எதிர்ப்பாளன் இல்லை, ஆனாலும் உலகில் எல்லா அணியும் ஏற்று கொண்டுள்ள தொழிநுட்பத்தை ஏற்க மறுத்தோடு மட்டுமல்லாது, தான் வேறு நாடுகளில் பங்கு பெறும் போட்டிகளிலும் அத்தொழிநுட்பத்தை பாவிக்கவிடாமல் பெறும் வெற்றியை 90சதவீதமான வெற்றியாகவே கருதவேண்டும். இந்திய அணியின் கடந்த அவுஸ்திரேலிய சுற்றுலாவின் போது நடுவர்கள் இந்திய அணிக்கு எதிராக செயல்பட்டது அனைவரும் அறிந்ததே. அத்தொடர் நடந்த காலங்களில் UDRS முறை இருந்திருந்தால் போட்டி முடிவுகள் மாறியிருக்கலாம் என்பதை இந்திய ரசிகர்களும் ஏற்றுக் கொள்வார்கள் என நினைக்கிறேன்.

-----------------------------------------------------------------------

ஆண்டொன்று போனால் வயதொன்றும் போகும் என்பார்கள், இப்போதுதான் ஆரம்பித்தது போன்றிருந்த இந்த 2010 வருடமும் முடிந்து விட்டது. வயதொன்றும் போய்விட்டது. தனிப்பட்ட முறையில் எனக்கு 2010 ஒரு நல்ல வருடமாக அமைந்தது. இதே போல் எதிர்வரும் 2011 வருடமும் சிறப்பாக இருக்கும் என நம்புவோமாக. “நம்பிக்கை தானே வாழ்க்கை”.

எதிர்வரும் 2011 சகலருக்கும் மிகவும் சிறப்பான ஆண்டாக மலர வேண்டும் என வாழ்த்துகிறேன்.

மறக்க முடியா உலக கிண்ண கிரிக்கட் போட்டிகள் - போட்டி 1

மறக்க முடியாத உலக கிண்ண கிரிக்கட் போட்டிகள் என்னும் தொடரை இன்று முதல் எழுத எண்ணியுள்ளேன். உங்களின் ஆதரவுடன் தொடர்ந்து இதை எழுதலாம் என்றிருக்கிறேன்


போட்டி - 1996ம் ஆண்டு உலக கிண்ண போட்டிகள் அரையிறுதி ஆட்டம்
அணிகள் - அவுஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகள்
மைதானம் - மொகாலி
நாணய சுழற்சியில் வெற்றி - அவுஸ்திரேலியா


நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலியா அணி தலைவர் மார்க் டெயிலர் வேக பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான மொகாலி ஆடுகளத்தில் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானிக்கிறார். முதலில் துடுப்பெடுத்தாட இந்த ஆடுகளம் சிறப்பானதல்ல என்பதை மேற்கிந்திய வேகபந்து வீச்சாளர்கள் அவுஸ்திரேலியாக்கு உணர்த்தினார்கள். தொடர் முழுவதும் சிறப்பாக ஆடி வந்த மார்க் வாஹ்வை கர்ட்லி அம்ரோஸ் ஓட்டம் பெற முன்னரே ஆட்டமிழக்க செய்தார், தொடர்ந்து மார்க்டெயிலர், ரிக்கி பொன்டிங், ஸ்டீவ் வாஹ் ஆகியோரை குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க செய்தனர். ஸ்டீவ் வாஹ் ஆட்டமிழக்கும் போது அவுஸ்திரேலிய அணியின் ஸ்கோர் 4 விக்கட் இழப்புக்கு 15 ஓட்டங்கள். இப்போட்டியில் வென்றால்தான் உலக கிண்ண இறுதி போட்டியில் விளையாடலாம் என்னும் இக்கட்டான போட்டியில் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்ட முதுகெழும்பை முறியடித்தனர் மேற்கிந்திய தீவுகளின் வேக பந்து வீச்சாளர்கள் அம்ரோசும் மற்றும் இயன் பிஷோப். 


பின்னர் ஆடுகளத்தில் இணைந்த அக்காலப்பகுதியில் ஆபத்பாந்தவனாக அவுஸ்திரேலியா அணிக்கு கை கொடுக்கும் மைக்கல் பெவன் மற்றும் சகல துறை ஆட்டக்காரர் ஸ்டுவர்ட் லோ ஆகிய இருவரும்  ஒரு சிறப்பான இணைப்பாட்டத்தினை வழங்கினர். இவ்விருவருக்கும் இடையிலான 137 ஓட்ட இணைப்பாட்டதுடன், இறுதி நேரத்தில் இறங்கிய இயன் ஹீலியின் அதிரடியான 31 ஒட்டமும் சேர அவுஸ்திரேலிய அணிக்கு ஓரளவுக்கு போராட கூடிய 207 என்னும் ஓட்ட எண்ணிக்கை கிடைத்தது.


208 என்னும் இலகுவான இலக்கினை நோக்கி ஆட தொடங்கிய மேற்கிந்திய அணிக்கு ஓரளவு சிறப்பான ஆரம்பத்தை பெற்று தந்தனர். அவ்வணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான சிவ்நரின் சந்தர்போல் மற்றும் கோட்னி பிரவுண் ஆகியோர். எப்படியாவது ஒரு விக்கட் எடுக்க வேண்டும் என்று முயன்ற அவுஸ்திரேலிய அணி தலைவர் மார்க் டெயிலர் பவர்பிளே முடிய முன்னர் தனது மாயாஜால பந்து வீச்சாளரான ஷேன் வோர்னை அழைத்தார். மார்க் டெயிலரின் திட்டம் பலித்தது, தனது முதலாவது பந்திலேயே பிரவுணை ஆட்டமிழக்க செய்தார் ஷேன் வோர்ன். அதன் பின்னர் இணைந்து ஆட தொடங்கிய இடது ஆட்டக்காரர்களான லாரா மற்றும் சந்தர்போல் போட்டியை மேற்கிந்திய அணிக்கு வெற்றிக்கு இட்டு செல்ல சிறப்பாக ஆடினர். வேகமாக 45 ஓட்டங்களை பெற்ற பிரையன் லாராவின் முக்கியமான விக்கட்டை ஸ்டீவ் வாஹ் வீழ்த்துகையில் அணியின் ஓட்ட எண்ணிக்கை 2 விக்கட் இழப்புக்கு 93. தொடர்ந்து அணித்தலைவர் ரிச்சி ரிச்சர்ட்சனும் சந்தர்போலும் இணைந்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை 163வரை கொண்டு சென்றனர். காலில் ஏற்பட்ட உபாதை காரணமாக சிறப்பாக விளையாட இயலாத சந்தர்போல் கிளன் மெக்ராவின் பந்து வீச்சில் பிளமிங்கிடம் பிடி கொடுத்து ஆட்டமிழக்கும் போது ஓட்ட எண்ணிக்கை 165. அவர் பெற்ற ஓட்ட எண்ணிக்கை 80. இன்னும் 9 ஓவர்களின் 43 ஓட்டங்களை பெற வேண்டும், கைவசம் 7 விக்கட்டுகள் உள்ளன, மேலும் அணித்தலைவர் ரிச்சி ரிச்சர்ட்சன் சிறப்பாக விளையாடி கொண்டிருக்கிறார் என்பதால் இலவாக இப்போட்டியை வென்று விடலாம் என மேற்கிந்திய அணி எண்ணியிருக்கையில் அடுத்த விக்கட்டையும் வீழ்த்துகிறார் கிளன் மெக்ரா. எனினும் ஆட்டமிழந்த வீரர் ரொஜர் ஹாப்பர், இவர் ஒரு பந்துவீசும் வீரராகவே அறியப்பட்டு வந்துள்ளார். தொடர்ந்து ஆடுகளத்தில் இறங்கிய சகலதுறை வீரர் ஒட்டிஸ் கிப்சன் வோனின் மாயசுழலில் மாட்டி விக்கட் காப்பாளர் ஹீலியிடம் பிடி கொடுத்து ஆட்டமிழக்கையில் அணியின் ஓட்ட எண்ணிக்கை 178. தொடர்ந்து துடுப்பெடுத்தாட வந்த அணியின் துடுப்பாட்ட வீரர் ஜிம்மி அடம்ஸை ஓட்டம் பெற முன்னர் ஷேன் வோர்ன் ஆட்டமிழக்க செய்ய, தொடர்ந்து ஆட வருகிறார், ஒற்றைகையால் ஆறு ஓட்டங்களை அடிப்பதில் கில்லாடியான கீத் ஆர்த்தட்டன். இவரை ஒரு சிறப்பான பந்து வீச்சின் மூலம் ஆட்டமிழக்க செய்கிறார் டேமியன் பிளமிங். Attacking Field Setting செய்து பின்வரிசை துடுப்பாட்ட வீரர்களுக்கு ஓட்டம் பெற முடியாதவாறு செய்த அவுஸ்திரேலிய அணி தலைவர் மார்க் டெயிலருக்கு ஆதரவா சிறப்பாக பந்து வீசினர் அவ்வணி பந்து வீச்சாளர்கள். முக்கியமாக ஷேன் வோர்ன் தனது கடைசி 3 ஓவர்களில் ஆறு ஓட்டங்களை கொடுத்து 3 விக்கட்டுகளை பெறுகின்றார்.  ஆனாலும் சிறப்பாக ஆடி கொண்டிருக்கும் தலைவர் ரிச்சி ரிச்சட்சன் கடைசி ஓவரை முகம் கொடுக்கும் போது அணியின் வெற்றிக்கு தேவையான ஓட்ட எண்ணிக்கை 10. மீதமுள்ள விக்கட்டுகளின் எண்ணிக்கை 2.  இறுதி ஓவரை வீச மார்க் டெயிலர் பந்தை டேமியன் பிளமிங்கிடம் கொடுக்கிறார்.


முதலாம் பந்து - மிட் விக்கட் திசையில் அப்பந்தை அடித்து ஆடிய ரிச்சட்சன் 4 ஓட்டங்களை பெறுகிறார். இன்றும் 5 பந்துகளில் 6 ஓட்டங்கள் தேவை.


இரண்டாம் பந்து - ரிச்சட்சனின் துடுப்பில் உள்பகுதியில் பட்ட பந்துக்கு ஓட்டம் பெற முயன்றனர் அம்ரோசும், ரிச்சட்சனும். பந்தை எடுத்த ஹீலி விக்கட்டை நோக்கி எறிகிறார். மூன்றாம் நடுவரின் தீர்ப்பின்படி அம்ரோஸ் ஆட்டமிழக்கப்பட்டவராக அறிவிக்கப்படுகிறார். இன்னும் நான்கு பந்து களில் 6 ஓட்டங்கள் தேவை. பந்தை எதிர் கொள்ள வந்திருப்பவர். உலகில் அதிக முறை பூச்சியத்துக்கு ஆட்டமிழந்த வீரர் என்னும் சாதனையை கொண்டிருந்த வீரர் கோட்னி வோல்ஷ்


மூன்றாம் பந்து - கிளீன் போல்ட். பிளமிங் விக்கட்டை நோக்கி வீசிய பந்தை கோட்டை விட்ட வோல்ஷ் உலக கிண்ண கனவையும் கனவாகவே மாற்றிவிட்டார். மறுபுறத்தில் 49 ஓட்டங்களுடன் அணிதலைவர் ஆடுகளத்தில் இருந்தும் போட்டியை 5 ஓட்டங்களால் வென்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது அவுஸ்திரேலிய அணி


ஸ்கோர் சுருக்கும் 


அவுஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 8 விக்கட் இழப்புக்கு 207 ஓட்டங்கள்
 துடுப்பாட்டத்தில் மைக்கல் பேவன் - 69, ஸ்டுவர்ட் லோ - 72, ஹீலி - 31
 பந்து வீச்சில் அம்ரோஸ் 26/2, பிஷப் 35/2


மேற்கிந்திய தீவுகள் அணி 49.3 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 202 ஓட்டங்கள்

  துடுப்பாட்டத்தில் சந்தர்போல் - 80, லாரா - 45, ரிச்சட்சன் - 49 ஆட்டமிக்காமல்
   பந்து வீச்சில் ஷேன் வோர்ன் 36/4, பிளமிங் 48/2, மக்ரா 30/2

 போட்டியின் சிறப்பாட்டக்காரர் ஷேன் வோர்ன்குறிப்பு - இப்போட்டியை மறக்காமைக்கு இன்னொரு முக்கிய காரணம், எனது விருப்பத்துக்குறிய வீரர்களில் ஒருவரான ரிச்சி ரிச்சட்சனின் இறுதி சர்வதேச போட்டி இதுவென்பதாலாகும்.

நூடுல்ஸ் (22-12-2010)

பதிவர்களுக்கிடையிலான கிரிக்கட் போட்டி விளையாண்ட களைப்பு இன்னும் போகவில்லை, பின்ன கிட்ட தட்ட ஒரு வருடத்திற்கு பின்னர் விளையாண்டால் எப்படி இருக்கும்? ஆறே ஆறு ஓவர்கள் பந்து வீசியது, இன்னும் கைவலி. ஆனாலும் அன்றைய நாள் மிகவும் இனிமையாக கழிந்தது. ஏற்பாட்டாளர்களே இது போன்ற விளையாட்டுகளை எதிர்காலத்திலும் ஏற்பாடு செய்யுங்கள். இவை பதிவர்களுக்கிடையிலான நட்பை அதிகரிக்க உதவும்.

கிரிக்கட் போட்டிக்கு அடுத்த நாள் நடைபெற்ற பதிவர் சந்திப்புக்கு வரவியலாமல் போனது மிகவும் கவலையான விடயம், ஒரு முக்கிய விடயம் காரணமாக கண்டி வர நேரிட்டது. இல்லாவிடின் நிகழ்வில் கலந்து கொண்டிருந்திருக்கலாம்.
------------------------------------------------
மூஞ்சிப்புத்தகத்தில் உருவான காதல்களை பற்றி அடிக்கடி கேள்விபடுகிறோம், இதன் தொடர்ச்சியாக எனது நண்பனொருவருக்கு தெரிந்த ஒருவர் மூஞ்சிப்புத்தகம் மூலம் பழக்கமான பெண்ணொருவரை காதலித்து வீட்டுக்கு தெரியாமல் அப்பெண்ணோடு திருமணம் செய்ய சென்ற போதுதான் அப்பெண் ஏற்கனவே திருமணமானவள் என்றும், அவளது கணவன் வெளி நாட்டில் வேலை செய்கிறார் என்பதும் தெரிந்ததாம், முக்கியமான விடயம் இவை அனைத்தும் நடந்தது 45 நாட்களுக்குள் என்பதாகும்.

எதிர்காலத்தில் சமூக வலையமைப்புகள் எம்மை எங்கு அழைத்து செல்ல போகின்றன?
------------------------------------------------

மலையகத்தில் தோட்ட பாடசாலையொன்றில் 3ம் வகுப்பு படிக்கும் சிறுமியொருத்தியை அப்பாடசாலையில் கற்பிக்கும் காமுகனொருவன் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளான். இவ்விடயம் வெளியே தெரிந்தவுடன் பணம் கொடுத்து இதை மூடி மறைக்க முயன்றானாம். 9வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய கூடிய ஒருத்தனை ஆசிரியனாக நியமித்தது யாரது குற்றம்? இவனெல்லாம் ஒரு ஆசிரியனா? த்த்த்தூதூ

போலீஸ் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. என்னை பொறுத்தவரையில் இவனையெல்லாம் தூக்கிலேற்ற வேண்டும், அல்லது நடு ரோட்டில் வைத்து கல்லெறிந்து கொல்ல வேண்டும்.
------------------------------------------------
ஆஷஸ் போட்டி தொடரில் 3வது போட்டியை வென்று தொடரை உயிர்ப்பித்தது அவுஸ்திரேலிய அணி என்றுதான் சொல்ல வேண்டும். One Side Game என்றுமே பார்ப்பதில் சுகமிருப்பதில்லை. இரு சம பல அணிகள் போட்டியிட்டால் அதனை நன்றாக ரசிக்கலாம். மிட்சில் ஜோன்சன் மற்றும் ஹரிஸ் ஆகிய இருவரது பந்து வீச்சும், ஹசி மற்றும் வொட்சனின் பந்து வீச்சும் அவுஸ்திரேலியாவுக்கு வெற்றியை கொண்டு வந்தன எனலாம். இப்போட்டி நடந்த அதிவேக WACA மைதானத்தில் தனது வழமையான போர்மை காட்டிய மிட்சில் ஜோன்சன் அடுத்த போட்டியில் சிறப்பாக வியைாடுவாரா இல்லையா என்பதிலேயே அவுஸ்திரேலியாவின் தொடர் வெற்றி தங்கியுள்ளது. பொன்டிங் சிறப்பான போர்மில் இல்லாவிட்டாலும் அடுத்த போட்டியில் காயத்தினால் விளையாடாமல் போனால் அது அவுஸ்திரேலியாவுக்கு மனதளவில் பின்னடைவை தருமென்பதில் சந்தேகமில்லை

இந்திய தென்னாபிரிக்காவுக்கு இடையிலான போட்டி எதிர் பார்த்தபடி தென்னாபிரிக்காவுக்கு இனிங்ஸ் வெற்றியை பெற்று தந்திருக்கிறது, ஆனாலும் சாதனை நாயகன் சச்சின் தனது 50 சதத்தை பெற்று கிரிக்கட் சாதனை புத்தகத்தில் இன்னுமொருமுறை தனது பெயரை எழுதியிருக்கிறார். ஆனாலும் சச்சினுக்கு மற்றைய துடுப்பாட்ட வீரர்கள் ஆதரவளித்திருந்தால் இந்தியா ஓரளவுக்கு இப்போட்டியை கௌரவமாக முடித்திருக்கலாம்.
------------------------------------------------
கிரிக்கட் உலக கிண்ண போட்டிகள் வருவதையிட்டு “மறக்க முடியா உலக கிண்ண போட்டிகள்” என்ற தலைப்பில் ஒவ்வொரு வாரமும் பதிவெழுத நினைத்துள்ளேன்.
------------------------------------------------
மன்மதன் அம்பு படத்தில் கமல் எழுதிய கவிதை படத்தில் இடம்பெறாதாம், காரணம் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் என்கிறார்கள். உலக நாயகனின் அக்கவிதையை காட்சிப்படுத்தியிருப்பதை பார்க்க ஆவலுடனிருந்த என்னை போன்றவர்களுக்கு ஏமாற்றம்தான். இப்போதெல்லாம் அடிக்கடி கேக்கும் தத்துவ பாட்டு

“போனா போகுதுன்னு விட்டின்னா, கேணைன்னு ஆப்பு வெப்பாண்டா 
தானா தேடி போயி நின்னீன்னா வேணுன்னு காக்க வைப்பாண்டா"

"சாம, தான, பேத,  தண்டம் நாலும் சேர்ந்து 
தோத்துப் போகும் போது தகிடு தத்தோம் செய் தகிடு தத்தோம்  "

இவ்வகையான உச்சரிப்புடன் பாடலை பாடுவது கமலுக்கு அல்வா சாப்பிடுவது போன்றிருக்கும் என நினைக்கிறேன். 
------------------------------------------------

இம்முறையும் ஆஸ்காருக்கும், கோல்டன் குளோப் விருதுக்கும் பரிந்துரைக்ப்பட்டிருக்கும் நம் இசைப்புயலுக்கு இன்னொரு முறை விருது பெற வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்
------------------------------------------------
பத்து தலை நாகபாம்பு ஒன்று இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அதனை இந்து மக்கள் வணங்குகிறார்கள் எனவும் வதந்தியொன்று இலங்கை முழுவதும் பரவியதை அனைவரும் அறிந்திருப்பர். இப்பத்து நாகம் ஒரு போட்டோஷொப் பாவனையாளரின் கைங்கரியம் என்பதை கீழே உள்ள படத்தை பார்த்தால் தெரியும் ஒரு தலையுடன் இருக்கும் பாம்பின் நிழலையும் 10 தலையுடன் இருக்கும் பாம்பின் நிழலையும் கவனியுங்கள். இரண்டும் ஒன்றே.

கிரிக்கட் பதிவர்கள் ஆடிய கிரிக்கட்

இலங்கை தமிழ் பதிவர்கள் ஆடிய கிரிக்கட் போட்டி இனிதே கடந்த வார இறுதியில் நடந்து முடிந்தது, அது பற்றிய முழு விபரங்களை லோஷனின் பதிவில் வாசித்திருப்பீர்கள், வாசிக்காதவர்கள் இந்த சுட்டியில் வாசிக்கலாம்


*நிரூஜா எனப்படும் மாலவன் எங்களது அணிக்கு தலைவராகவும், அனுதினன் மற்றைய அணிக்கு தலைவராகவும் அறிவிக்கப்பட்டனர். நாணய சுழற்சியில் நாங்கள் தோற்று களத்தடுப்பை தேர்வு செய்தோம் (வென்றிருந்தால் துடுப்பாட்டத்தை தேர்வு செய்திருப்போம் என்பது வேறு விடயம்.)

* எமது ஆரம்ப பந்து வீச்சாளர்களான மருதமூரான் மற்றும் சி.பொ. கோபிநாத்தின் சிறப்பான பந்து வீச்சில் ஆரம்பத்தில் மெதுவாக ஒட்டங்களை பெற்ற அனுதினன் அணியினர், 11 வருடங்களுக்கு பின்னர் துடுப்பெடுத்தாட மைதானத்திற்குள் நுழைந்த ஜனாவின் அதிரடியோடு வேகமாக ஒட்டங்களை பெற்றனர், லோஷன் 4 விக்கட்டுகளை வீழ்த்தி அவ்வணியினரின் ஓட்டங்களை 93ஆக கட்டு படுத்த உதவினார். தொடர்ந்து ஆடிய எமது அணியினர் ஆரம்பத்தில் சிறப்பான அடித்தளத்தை இட்டாலும் தொடர்ந்து விக்கட்டுகள் சரிய நானும், சி.பொ. கோபிநாத்தும் சிறந்த ஒரு இணைப்பாட்டத்தை வழங்கினோம், எனினும் நான் தேவையற்ற விதமாக தலைக்கு மேல் சென்ற பந்தை பைன்லெக் பக்கமாக திருப்ப முயற்சிக்க அது Top Edge ஆக மாறி வரோவினால் பிடியெடுக்கப்பட்டதும், கோபிநாத் முக்கியமான தருணத்தில் ரன்அவுட் ஆனதாலும் போட்டியை நாம் 6 ஓட்டங்களால் தோற்க நேரிட்டது. தலைவர் அனுதினன் 4 விக்கட்டுகளை எடுத்து அணிக்கு வெற்றியை தேடி தந்தார். திருமலைக்குஞ்சு பவனும் சிறப்பாக பந்து வீசினார்.

*முதலாம் போட்டியில் தோற்றதால் எப்படியும் வென்றுவிட வேண்டும் என்னும் உத்வேகத்தோடு நாம் இரண்டாவது ஆட்டத்தில் மைதானத்தில் இறங்கினோம். முன்னைய போட்டியோடு ஒப்பிடுகையில் இம்முறை சிறப்பாக பந்து வீசினோம், ஆனால் களத்தடுப்பில் பல பிடிகளை விட்டு எமது உலக தரத்தை வெளிக்காட்டினோம். கடந்த போட்டியில் 4 விக்கட்டுகளை எடுத்த லோஷன் இம்முறை 5விக்கட்டுகளை எடுத்தார். இதன் காரணமாக அனுதினன் அணியினர் 79 ஒட்டங்களுக்கு கட்டுபடுத்தினோம். (அவ்வணியின் முக்கிய ஆட்டக்காரர் ஜனாவின் பிடியை பல கிலோமீற்றர் ஒடி சென்று பிடித்த யோகாவின் அதி சிறந்த பிடியும் ஓட்ட எண்ணிக்கையை மட்டுபடுத்த ஒரு முக்கிய காரணம் என கிரிக்இன்போவில் ரிச்சி பேனோ சொல்லியிருக்கிறார்), மேலும் பால்குடி மற்றும் வதீஸ் ஆகியோரின் 2 சிறப்பான பிடிகளும் எங்களுக்கு விக்கட்டுகளை பெற்று தந்தன. இம்முறை ஆரம்ப துடுப்பாட்ட வீரராக தரமுயர்த்தப்பட்ட கோபிநாத் ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டம் ஆடி எமது அணியை வெற்றியை நோக்கி அழைத்து சென்றார். ஆட்டமிழக்காமல் அரைச்சதம் பெற்ற கோபிநாத்தோடு லோஷனும் போட்டியின் முடிவுவரை களத்தில் இருந்தனர். 

டிஸ்கி
* போட்டோ போட்டு எல்லாரையும் கலாய்க்கும் பவன் மைதானத்தில் அமைதியின் சிகரமாய் இருந்தார்.

* தரங்கம் புகழ் சுபாங்கன் அடித்த பந்து சிக்சருக்கு சென்றுவிட்டது என மகிழ்ந்திருந்தால் அப்பந்தை மது பிடியெடுத்து சிக்சரை விக்கட்டாக மாற்றினார். 

* அனலிஸ்ட் கோபி அனுதினனின் ஷார்ட் பிட்ச் பந்துக்கு ரொக்கட் விட்டார்.

* பிரபல வேக பந்து வீச்சாளர் யோகா (நான்தான்) வீசிய அதிகமான பந்துக்கள் புல்பிட்சாகவே சென்றது.

* கூல் போய் பந்து தடுக்கும் இடங்களுக்கு பந்து செல்லவேயில்லை, காரணம் ஏதேனும் ஸ்பொட் பிக்சிங்கா?

* மருதமூரானின் பந்து வீச்சு பாணி மிக அழகாக இருந்தது, போட்டியை பார்க்க வந்திருந்த ரசிகைகள் அனைவரும் அவரையே வைத்த கண் பார்க்காமல்  பார்த்து ரசித்தனர். (வந்திருந்தால்)

* போட்டிக்காக இலங்கையின் பல பாகங்களிலுமிருந்து பல பதிவர்கள் வந்திருந்தது போட்டியின் ஏற்பாட்டாளர்களுக்கு அதிக உந்து சக்தியை வழங்கியது என்றால் அது மிகையாகாது. எதிர்காலத்தில் இவ்வாறான ஏற்பாடுகளை முன்னெடுக்க இவர்கள் முயல்வார்கள் என நினைக்கிறேன்

* கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடித்ததை போல், நானும் அனலிஸ்ட் கன்கொன்னின் உதவியுடன் மைதானத்தை கண்டறிந்தேன். அதற்கு முதல் நாள் இரவு பெய்த மழையால் விளையாட முடியாமல் போய்விடுமோ என கவலைப்பட்டே கன்கொன் விடிய விடிய தூங்கமலிருந்ததாக பதிவுலீக்ஸ் தகவல்கள் தெரிவித்திருந்தன.

* நேரடி ஒளிபரப்பு செய்ய தயாராக வந்த “மதுயிசம்” புகழ் மதுவுக்கு மின்சார இணைப்பை மைதானத்திற்கு கொண்டு வருவதற்குள் போதும் போதும் என்றாகியிருக்கும். ஆனாலும் தடைகற்களை எல்லாம் படிக்கல்லாக மாற்றிய மது போட்டியை செவ்வனே நேரடியாக ஒளிபரப்பினார். (இப்போட்டி நேரடியாக ஒளிபரப்பானதால் ஸ்டார் கிரிக்கட் சமகாலத்தில் ஒளிபரப்பிய ஆஷஸ் போட்டியை பலர் பார்க்காமல் விட்டு அவ் அலைவரிசைக்கு பாரிய நட்டம் ஏற்பட்டது வேறு விடயம்). இங்கிலாந்திலிருந்து எமது ஆட்டத்தை ரசித்த பதிவர் வந்தி அடிக்கடி எம்மோடு அரட்டையிலும் ஈடுபட்டார்.


நான் துடுப்பெடுத்தாடும் ஒரு காட்சி.

இரண்டாவது போட்டியில் வென்ற எமது அணியினர் மகிழ்ச்சியுடன்

முதலாவது போட்டியில் வெற்றி பெற்ற அணியினருடன் சேது ஐயா அவர்கள் உரையாடுகிறார். எமது அணியை சேர்ந்த லோஷனும் உரையாடலில் பங்கெடுக்கிறார்

நூடுல்ஸ் - 08 -12 - 2010

ரொம்ப நாளாக தொய்வுநிலையில் இருந்த இலங்கை தமிழ் பதிவுலகம் கடந்த ஒரு வாரமாக மீளவும் உற்சாகமாகி பழைய நிலைக்கு வந்திருப்பது மகிழ்ச்சியான விடயம், அதுவும் பதிவர்களை கலாய்க்கும் பதிவுகள் அதிகரிப்பது, பதிவர்களுக்கிடையிலான நல்லுறவை வலுப்படுத்தும் என்பதில் ஐயமில்லை. எதிர்வரும் 19ம் திகதி நடக்கவிருக்கும் பதிவர் சந்திப்பின் பின்னர் இன்னும் அதிக பதிவுகள் வெளிவரும் என்தில் எவ்வித ஐயமுமில்லை, காரணம் கடந்த இரண்டு பதிவர் சந்திப்புகளின் பின்னரும், சர்ச்சைக்குரிய “இருக்கிறம்” சந்திப்பிற்கு பின்னரும் எம்மவர்களின் பதிவுகள் அதிகரித்ததை யாமறிவோம்.

------------------------------------------------

ஆஷஷில் இங்கிலாந்திற்கு சவாலாக இருக்கவேண்டிய அவுஸ்திரேலிய அணியினர் இப்படி பல் புடுங்கிய பாம்பாக இருப்பது கொஞ்சம் கவலையளிக்கிறது, அதிலும் Punter சொதப்புவது அவரது தீவிர ரசிகர்களுக்கு (எனக்குதான்)  ஏமாற்றமளிக்கிறது.கடந்த 10 வருடங்களில் முதல் முறையாக தர வரிசையில் முதல் 20 துடுப்பாட்ட வீரர்களுக்குள் அவர் இடம் பெறாமையானது அவரது சொந்த போர்ம் சிறப்பாக இல்லாமையை காட்டுகிறது. உலக கிண்ணத்திற்கு முன்னர்அவர் பழைய நிலைக்கு வர வேண்டும், அப்போதுதான் விறுவிறுப்பான உலக கிண்ண போட்டிகளை பார்க்கலாம். 

------------------------------------------------

இந்திய அனுபவமிக்க டெஸ்ட் அணி நியுசிலாந்தோடு தடுமாறி தொடரை வெல்ல, அனுபமற்ற இந்திய ஒரு தின அணி நியுசிலாந்தோடு கலக்கலாய் ஆடி தொடரை வென்றதும் இந்திய அணியின் Bench Strength ஐ காட்டுகிறது.

------------------------------------------------

எங்களது கண்டியில் புது மைதானத்தில் டெஸ்ட் போட்டி நடக்கிறது, போய் பார்ப்போமென்றால் வருண பகவான் எங்களுக்கெல்லாம் எதிரியாய் வந்து எங்களது திட்டங்களை தவிடு பொடியாக்கிவிட்டார். உள்ளக கிரிக்கட் போட்டி தொடர்தான் தற்போது இலங்கையில் விளையாடலாம் என நினைக்கிறேன்.

------------------------------------------------

“மன்மதன் அம்பு” பாடல்கள் கேட்டேன், அதிலும் கமலின் கவிதை வரிகள் கேட்டு நிரம்ப ரசித்தேன், இந்த மனுஷனுக்குள் எத்தினை திறமைகள்? “காபி வித் அனு” நிகழ்ச்சியில் கமல் சுட சுட எழுதிய வெண்பா ரசிக்கும் படியாக இருந்தது. வழமையாகவே கமலின் பேட்டிகளை மிகவும் ரசிக்கலாம், காரணம் அதிகமாக கமல் யாருக்கும் “வாளி” வைப்பதில்லை.

------------------------------------------------

வெற்றியின் விடியல் கேட்டு நாளை ஆரம்பிக்கும் நான் தற்போது வானொலியே கேட்பதில்லை ஏனெனில் முன்னர் FM 105.1 இல் ஒலிபரப்பாகிய வெற்றி FM இப்போதெல்லாம் அவ்வலைரிசையில் ஒலிபரப்பாவதில்லை என நினைக்கிறேன். லோஷன்தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.

------------------------------------------------

உயர்தர பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் அதிக புள்ளிகளை பெற்ற மாணவர்களில் இருவர் கொழும்பை சேர்ந்தவர்கள், மற்றைய இருவரும் ரம்புக்கன மற்றும் குளியாபிட்டியை சேர்ந்தவர்கள் என்பது மகிழ்வான விடயம், வெளி மாவட்ட மாணவர்கள் இவ்வாறு சிறந்த பெறுபேறுகளை பெறுவது ஆரோக்கியமான விடயம். இதில் இன்னொரு விடயம் கலை மற்றும் வர்த்தக பிரிவுகளில் அதியுயர் புள்ளிகளை இரு மாணவிகள் பெற்று கொள்ள கணித மற்றும் விஞ்ஞான பிரிவுகளில் அதியுயர் புள்ளிகளை இரு மாணவர்கள் பெற்றுள்ளனர்.

------------------------------------------------

முதலாவது பதிவர் சந்திப்பின் பின்னர் போடப்பட்ட முதல் பட பதிவு என்னுடையதுதான் என நினைக்கிறேன். அதில் எனக்கு தமிழிசில் பலவாக்குகளை அள்ளி குவித்த லோஷன் + நயன்தாரா படம் கீழே. 


கமல் படங்களில் பிடித்த 10 படங்கள்

நண்பர் பிலோசபி பிரபாகரன் எனக்கு பிடித்த சிறந்த 10 கமல் படங்களை பற்றிய தொடர்பதிவொன்றுக்கு அழைத்துள்ளார். கமல் படங்களில் எனக்கு பிடித்த படங்களை 10 என்னும் குறுகிய வட்டத்துக்குள் வைக்கவியலாது என்பது கண்கூடு. எனினும் சிறிய வயது முதல் நான் பார்த்ததில் எனக்கு பிடித்த கமல் படங்களில் பத்து படங்களை இங்கு பட்டியலிடுகிறேன்.

சிறிய வயதில் கமலின் ஜனரஞ்சக படங்ளை மாத்திரமே ரசித்துவந்த நான், ரஜனி படங்களையே அதிகமாக ரசித்திருக்கிறேன், ஆனாலும் ஓரளவுக்கு விவரம் தெரிந்த பின்னர் கமல் என்னும் கலைஞனை பார்த்து வியந்திருக்கிறேன். பொது வாழ்வில் கமல் என்னும் மனிதன் தன்னை எப்போதும் திறந்த புத்தகமாகவே வெளிக்காட்டியிருப்பது எனக்கு எப்போதும் ஆச்சிரியம் தரும் விடயமே. அதிலும் பலர் தன்னை உத்தமர் என காட்ட விரும்புகையில் கமல் தனது விடயங்களை (கமலின் பல கருத்துக்களோடு முரண்பாடு இருந்தாலும்) மறைக்க விரும்பாதது ஆச்சரியமான விடயமே.

இனி எனக்கு பிடித்த கமலின் படங்களில் சிறந்த 10 படங்கள்.

10. மைக்கல் மதன காமராஜன்
தமிழில் வழமையாக இரட்டை வேடம் என்றால் மச்சம் வைத்திருப்பவர் ஒரு வேடமும், மச்சம் இல்லாமல் இருப்பவர் ஒரு வேடமும் என கருதப்பட்ட காலத்தில் நான்கு வேடங்களை கமல் அநாயாசமாக நடித்திருப்பார். 4 கமலினதும் உடல்மொழிகள்(Body Language) வெவ்வேறானதாக இருக்கும்.
  இதில் என்ன விசேடம் என்றால் 4 பேர்களையும் சுற்றியே கதை பின்னப்பட்டிருப்பதும், அதில் யாரும் முக்கியமில்லாமல் இல்லை என்பதுமாகும், மேலும் தன்னை ஒரு சிறந்த நகைச்சுவை நாயகனாகவும், கதை வசனகர்த்தாவாகவும் வெளிக்காட்டிய படம்.

09.புன்னகை மன்னன்
நாயகன் நாயகி இருவரும் தற்கொலை செய்ய முயலும் போது கமல் மரத்தில் தொங்கிவிட ரேகா அவர் கண்முன்னாடியே கீழே விழுவதை பார்த்து கமல் அழும் காட்சி இன்னும் பலருக்கு மறக்க முடியாது. இன்னும் கமலை மிமிக்ரி செய்பவர்கள் இதைதான் நடித்து காட்டுகிறார்கள். இப்படத்தில் கமல் தனது நவரச நடிப்பை காட்டியிருப்பார். அதிலும் கமல் கோபப்படும் காட்சிகளை பார்க்கும் போது எமக்கும் பயம் வரும், சிறப்பாக நடனமும் ஆடியிருப்பார். சாப்ளின் சின்னப்பாவாக வரும் கமலின் நடிப்பு என்றுமே மறக்க முடியாதது. இப்படத்தை பார்க்கும் போது எனக்கு வயது 14, அதற்கு பின்னர் இப்படத்தை என்றுமே பார்த்ததில்லை, ஆனாலும் இப்படம் என்றும் நினைவில் இருக்கிறது.

08. குருதிப்புனல்
நாயகன் வெல்லவேண்டும், வில்லன் திருந்த வேண்டும் அல்லது சாக வேண்டும் என்னும் தரித்திரம் பிடித்த தமிழ் சினிமா விதிக்கு மாறாக எடுக்கப்பட்ட படம், பாடல்கள் அற்ற இப்படம் ஆங்கில படங்களுக்கு இணையாக எடுக்கப்பட்ட படம். இதில் கமலின் நடிப்பு அதி சிறப்பாக இருக்கும். இவ்வாறான ஒரு பாத்திரத்தை தேர்ந்தெடுத்ததற்காக கமலை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்

07. தசாவதாரம்
பத்து கமல்கள் ஒருத்தரினதும் உடல் மொழி, வார்த்தை பிரயோகம் மற்றவரை போன்று இருக்காது. பத்து நடிகர்களின் வித்தியாசமான நடிப்பை தனி ஒருவரே நடித்திருப்பார், மேலும் கதாசிரியராக தமிழ் சினிமாவை அடுத்த தலைமுறைக்கு எடுத்து சென்றிருக்கிறார் கமல். இதில் சில முக ஒப்பனைகள் வெளி தெரிந்தாலும், கமல் என்னும் கலைஞனின் பல முகங்களை வெளிக்காட்டிய இப்படம் எனக்கு மிக பிடித்த படங்களில் ஒன்று.

06. விக்ரம்
வாத்தியாரின் கதையில் கமல் நடித்த துப்பறியும் பாணியிலான படம், இன்றைய கால கட்டத்தில் இப்படம் எடுக்கப்பட்டிருந்தால், இப்போதிருக்கும் தொழிநுட்பத்திற்கும், கமலின் அனுபவத்திற்கும் தமிழ் சினிமாவின் சிகரம் தொட்ட படமாகியிருக்கும். ஆனாலும் சிறிய வயதில் நான் ரசித்து கை தட்டி பார்த்த படங்களில் இதுவும் ஒன்று. இப்படத்தின் பாடல்களான “விக்ரம், விக்ரம்”, “என் ஜோடி மஞ்சக்குருவி”, “வனிதாமணி”, “மீண்டும் மீண்டும் வா” என்பன இன்னும் ரசிக்க கூடியவை என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

05. நாயகன்
மணிரத்தினம் என்னும் இயக்குனரின் ரசிகனான எனக்கு கமலின் நடிப்பை நம்ம டைரக்டர் மிக சிறப்பாக வெளிக்கொணர்ந்தது மகிழ்ச்சி. வேலு நாயக்கரை தமிழ் சினிமா என்றுமே மறக்காது. கமல் என்னும் நடிகனுக்கு தேசிய விருது வாங்கி கொடுத்த படம். “நாலு பேருக்கு நல்லது நடந்தா எதுவுமே தப்பில்லை” என்னும் வசனம் இன்றும் பலரால் பேசப்படுகிறது. இப்படத்திற்கு இசைஞானி வழங்கியிருக்கும் இசை காலத்தால் அழியாதது. “கோட் பாதர்” பாதர் என்னும் ஆங்கில படத்தின் தழுவல் என பலரும் இதைக்குறிப்பிடுவர், சரி அப்படியே இருந்துட்டு போகட்டும். எந்த குப்பனும் சுப்பனும் கோட்பாதரை ரசிக்க போகிறான், அவங்களுக்கு புரியும் மொழியில் ஒரு படம் வெளிவருவது நன்றே, அது தழுவல் படமாயிருந்தாலும் பரவாயில்லை. நானும் இன்னும் கோட்பாதர் படம் பார்க்கவில்லை. ஆகவே நாலு பேருக்கு (எனக்கும்தான்) நல்லது நடந்தா எதுவும் தப்பில்லை.


04. மகாநதி
எனது பள்ளிகாலத்தில் எனது வீட்டின் அருகே உள்ள ஒரு சிங்கள அன்பரினால் எனக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்ட படம். அவரால் எனக்கு பல உலக திரைப்படங்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டன, அதில் ஒரு உலக தரமான திரைப்படம் மகாநதி. கமலை சிறந்த நடிகர் என சொல்ல விரும்பாதோர் இப்படத்தை பார்த்தால் தனது கருத்தை மாற்றிக் கொள்வர். கமல், சந்தானபாரதி கூட்டணியில் தமிழுக்கு கிடைத்த சிறந்த படம் இதுவேயாகும்.


03. விருமாண்டி
விருமாண்டி, கொத்தாளதேவர், நல்லம நாயக்கர், பேய்காமன், அன்னலட்சுமி போன்ற பாத்திரங்களை மறக்கத்தான் முடியுமா? கமலின் இன்னொரு முகமான இயக்குனர் கமலை தமிழுலக்கு எடுத்து காட்டிய படம். திரைக்கதை அமைப்பில் தமிழுக்கு புதுமைகளை புகுத்திய இப்படத்தில் இளையராஜா இசை ராஜாங்கமே நடத்தியிருப்பார். அப்பத்தா செத்த பின்னர் விருமாண்டியின் நடிப்பு மிகவும் சிறப்பாக இருக்கும். மேலும் படத்தின் ஆரம்ப காட்சிகளில் கமலின் அட்டகாசமான நகைச்சுவை காட்சிகள் இடம் பெற்றிருக்கும். காதல், வன்முறை, ஏக்கம், வன்முறை, பாசம் என சகலவற்றையும் மிக சிறப்பாக வெளிக்காட்டிய இயக்குனர் கமலை இப்படத்தில் மிகவும் ரசித்தேன். இந்த படத்திற்கு பேர் வைக்க கமல் பட்ட கஷ்டங்கள் தமிழர்கள் எவ்வளவு கீழ்போக்காக யோசிக்கிறார்கள் என்பதற்கு உதாரணம்.


2. மூன்றாம் பிறை
இப்படத்தை பார்த்து அடுத்த இரண்டு நாட்கள் தூக்கம் வராமல் தவித்திருக்கிறேன், தூங்க கண்ணை மூடினால் கண்ணுக்குள் கமல் ரயில் நிலையத்தில் விஜிக்காக குரங்கு போல நடிக்கும் காட்சி வந்து என்னை ஏதோ செய்திருக்கிறது. படம் முழுக்க சிறப்பாக சிறுமி குணம் கொண்ட பெண்ணாக நடித்த ஸ்ரீதேவியின் நடிப்பை கடைசி 10 நிமிட நடிப்பால் கமல் வென்று விடுவார். சீனு பாத்திரத்தில் கமலின் மிக சிறந்த நடிப்பை காணலாம். இந்த படம் இன்னும் என்னுள் மறக்காமல் இருப்பதற்கு காரணம் கடைசி சில நிமிடங்களில் கமல் என்னும் கலைஞன் திரையின் முழு ஆளுமையையும் கைப்பற்றியது ஆகும். கிட்டத்தட்ட இதன் இரண்டாம் பகுதி போல் வெளிவந்த படம் “தீபாவளி”. ஏனேனில் மனநிலை சரியாக வந்த பின்னர் தன்னை மறந்த காதலிக்கு தன்னை அறிமுகம் செய்ய துடிக்கும் நாயகன், என்னும் கதை சுருக்கத்தில் வெளி வந்த இப்படம் ரசிகர்களின் மனநிலையை பெரிதாக மூன்றாம் பிறையை போல் ஆக்கிரமிக்காமைக்கு காரணம், தமிழ் சினிமாவின் எவர்கிறீன் ஜோடி கமல், ஸ்ரீதேவியின் நடிப்பாகும்.


1. அன்பே சிவம்

யார் யார் சிவம், நீ நான் சிவம், ஆத்திகம் பேசும் அடியோர்க்கெல்லாம் சிவமே அன்பாகும், நாத்திகம் பேசும் நல்லவர்க்கெல்லாம் அன்பே சிவமாகும்” என்னும் கருத்தை கூறிய படம். எவ்வதையிலும் ஒத்து போகா இரு முரண்பட்ட கருத்துக்களையுடைய இரு கதாபாத்திரங்களுடன் பயணிக்கும் படமானது, கதை, திரைக்கதை, வசனம், இசை, ஒளிப்பதிவு, படதொகுப்பு, இயக்கம் என எல்லாவகையிலும் மிக சிறந்த படமென்பதில் மாற்றுக்கருத்து இருக்காது என நம்புகிறேன். கமல், மாதவன் என்னும் இரு துருவங்களோடு பயணிக்கும் படத்தோடு நாமும் பயணிக்கிறோம். கமலுக்கு மாத்திரமல்ல மாதவன், சுந்தர்.சீ ஆகியோருக்கும் இப்படம் ஒரு மைல்கல் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. என்னுடைய All Time Favorite படம் அன்பே சிவமாகும்.
பி.கு - இங்கு நான் சொல்லியிருப்பது சில படங்களை மாத்திரமேயாகும். இன்னும் சலங்கை ஒலி, வசூல் ராஜா, உன்னைப் போல் ஒருவன், வேட்டையாடு விளையாடு, மும்பை எக்ஸ்பிரஸ், ஆளவந்தான், பஞ்சதந்திரம், அவ்வை சண்முகி, இந்தியன், கலைஞன், தெனாலி, நம்மவர், அபுர்வ சகோதரர்கள், சூரசம்ஹாரம், ஒரு கைதியின் டைரி, கல்யாணராமன், வாழ்வே மாயம், குரு ஆகிய படங்கள் இவ்வரிசையில் இடம் பெறாமல் போனதற்கு காரணம் என்னை இங்கு எழுத சொன்னது 10 படங்களை மாத்திமே என்பதினாலாகும்.


இத்தொடர்பதிவை எழுத நான் அழைப்பது
1. லோசன் (தீவிர கமல் ரசிகரான இவருக்கு பிடித்த 10 கமல் படங்களை ரசிக்கலாம்)
2. கன்கொன் கோபி (இவர் அதிகம் படம் பார்க்கா விட்டாலும், இவரை எழுத அழைக்க காரணம் நீண்ட காலம் பதிவெழுதாமலிருப்பரை பதிவவுலகிற்கு அழைத்து வர முயற்சிப்பதாலாகும்.
3. வந்தி மாமா (கமல் பற்றி இவர் எழுதினால் ரசிக்கலாம், எழுத நேரமிருக்குமோ தெரியாது?)
2. ம.தி. சுதா (சுடு சோறு சாப்பிடுபவரின் ரசனையை ரசிக்கலாம்

Facebook Badge