Showing posts with label கதம்பம். Show all posts
Showing posts with label கதம்பம். Show all posts

நூடுல்ஸ் (30-12-2010)

கடந்த வாரம் நத்தார் பண்டிகையை கொண்டாடிய நண்பர்கள் அனைவருக்கும் எனது நத்தார் தின வாழ்த்துக்கள், ஒவ்வொரு வருடமும் நண்பர்களின் வீட்டிலே அவர்களுடன் சேர்ந்து நத்தார் பண்டிகை கொண்டாடி வந்த எனக்கு இம்முறை கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் பங்கெடுக்க முடியாமல் போனது வருத்தமே. வழமையாகவே நுவரெலியாவில் டிசம்பர் மாதங்களில் காணப்படும் தூறல், மூடுபனி, கடுங் குளிர் மற்றும் அங்கு கூடும் வெளி மாவட்ட மக்களின் எண்ணிக்கை என்பவற்றால் எமது பிரதேசம் மிகவும் அழகாய் காணப்படும். இவற்றை எல்லாம் இம்முறை மிஸ் பண்ணியது கவலையான விடயம்.

-----------------------------------------------------------------------

ஒரு காலத்தில் இளைஞர்களுக்கு பிடித்த ஆங்கில வானொலி அலைவரிசையான SUN FM, அரசியல் குத்து வெட்டுக்களின் பின்னர் மீள முதலாம் திகதி தொடக்கம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளி வந்துள்ளன. மீள தொடங்கவிருக்கும் SUN FM வானொலிக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

-----------------------------------------------------------------------

பதிவர் ஜனா தனது மாத்தி யோசி என்னும் பதிவில் என்னை ஒரு ஆவிக்கதை எழுத சொல்லி அழைத்திருக்கிறார். எப்படி யோசித்தாலும் ஆவி வரவே மாட்டேங்குதே? ஆவியை தேடி இரவு 12 மணிக்கு வீதியில் தனியாகவும் நடந்து பார்த்தேன், ஆனாலும் அங்கு நான் ஆவிகளுக்கு பதிலாக பாவிகளையே கண்டேன். அந்த பாவிகளை பற்றி தனியாக ஒரு பதிவு பின்னர் எழுதுகிறேன். அதற்கு முன்னர் ஜனாவின் விருப்பப்படி ஜனவரியில் ஆவிகளை பற்றி எழுத வேண்டும்.

-----------------------------------------------------------------------

ஆஷஸ் தொடரை இங்கிலாந்துக்கு தாரை வார்த்து கொடுத்து விட்டனர் அவுஸ்திரேலிய அணியினர். அவுஸ்திரேலியர் சிகரத்திலிருந்து இவ்வளவு சீக்கிரமாக கீழே விழுவர் என நான் எண்ணியும் இருக்கவில்லை. எனக்கென்னவோ அவுஸ்திரேலியரின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் தேர்வுக்குழுவே என எண்ணத் தோன்றுகிறது. ஸ்மித் போன்ற வீரர்கள் பங்களாதேஷ் டெஸ்ட் அணியில் இடம்பிடிப்பதே கடினம், ஆனால் இவ்வாறான வீரர்களை தெரிவு செய்தது அவர்களது முக்கிய குற்றமாகவே படுகிறது. அடுத்த போட்டியில் பொன்டிங்குக்கு பதிலாக அணி தலைவராக பங்கெடுக்கும் கிளார்க் இழந்த மானத்தை ஒரளவாவது காப்பாற்றுவாரா என பார்ப்போம்.

-----------------------------------------------------------------------

தென்னாபிரிக்காவுக்கு எதிரான இரண்டாம் டெஸ்ட் போட்டியில் இந்தியா வென்று தொடருக்கு உயிரூட்டியிருக்கிறது, ஆனாலும் இப்போட்டியில் இந்திய அணி வீரர்களுக்கு ஆதரவாக நடுவர்களும் விளையாண்டனர் என்பது போட்டியை பார்த்த அனைவருக்கும் தெரியும். UDRS முறையை இந்திய அணியினர் எதிர்த்தது இப்போட்டியை பொறுத்தவரையில் அவர்களுக்கு சாதகமாகவே இருந்தது. UDRS முறை இருந்திருந்தால் போட்டி முடிவு மாறியிருக்கலாம்.  இந்திய அணி முதலாமிடத்தை பிடித்த இலங்கையுடனான தொடரின் முக்கிய போட்டியில் நடுவர்களின் தவறான முடிவுகளால் போட்டி இந்திய அணிக்கு சாதமாக மாறியது அனைவருமறிந்ததே.  சேவாக்குக்கு வழங்கப்படாத ஆட்டமிழப்பு, போர்மிலிருந்த டில்ஷானுக்கு இரண்டு இனிங்சிலும் வழங்கிய பிழையான ஆட்டமிழப்புக்களே இந்திய அணியை முதலாமி்டத்துக்கு கொண்டு சென்றது என நான் எண்ணுகிறேன்.


நான் இந்திய அணியின் எதிர்ப்பாளன் இல்லை, ஆனாலும் உலகில் எல்லா அணியும் ஏற்று கொண்டுள்ள தொழிநுட்பத்தை ஏற்க மறுத்தோடு மட்டுமல்லாது, தான் வேறு நாடுகளில் பங்கு பெறும் போட்டிகளிலும் அத்தொழிநுட்பத்தை பாவிக்கவிடாமல் பெறும் வெற்றியை 90சதவீதமான வெற்றியாகவே கருதவேண்டும். இந்திய அணியின் கடந்த அவுஸ்திரேலிய சுற்றுலாவின் போது நடுவர்கள் இந்திய அணிக்கு எதிராக செயல்பட்டது அனைவரும் அறிந்ததே. அத்தொடர் நடந்த காலங்களில் UDRS முறை இருந்திருந்தால் போட்டி முடிவுகள் மாறியிருக்கலாம் என்பதை இந்திய ரசிகர்களும் ஏற்றுக் கொள்வார்கள் என நினைக்கிறேன்.

-----------------------------------------------------------------------

ஆண்டொன்று போனால் வயதொன்றும் போகும் என்பார்கள், இப்போதுதான் ஆரம்பித்தது போன்றிருந்த இந்த 2010 வருடமும் முடிந்து விட்டது. வயதொன்றும் போய்விட்டது. தனிப்பட்ட முறையில் எனக்கு 2010 ஒரு நல்ல வருடமாக அமைந்தது. இதே போல் எதிர்வரும் 2011 வருடமும் சிறப்பாக இருக்கும் என நம்புவோமாக. “நம்பிக்கை தானே வாழ்க்கை”.

எதிர்வரும் 2011 சகலருக்கும் மிகவும் சிறப்பான ஆண்டாக மலர வேண்டும் என வாழ்த்துகிறேன்.

நூடுல்ஸ் (22-12-2010)

பதிவர்களுக்கிடையிலான கிரிக்கட் போட்டி விளையாண்ட களைப்பு இன்னும் போகவில்லை, பின்ன கிட்ட தட்ட ஒரு வருடத்திற்கு பின்னர் விளையாண்டால் எப்படி இருக்கும்? ஆறே ஆறு ஓவர்கள் பந்து வீசியது, இன்னும் கைவலி. ஆனாலும் அன்றைய நாள் மிகவும் இனிமையாக கழிந்தது. ஏற்பாட்டாளர்களே இது போன்ற விளையாட்டுகளை எதிர்காலத்திலும் ஏற்பாடு செய்யுங்கள். இவை பதிவர்களுக்கிடையிலான நட்பை அதிகரிக்க உதவும்.

கிரிக்கட் போட்டிக்கு அடுத்த நாள் நடைபெற்ற பதிவர் சந்திப்புக்கு வரவியலாமல் போனது மிகவும் கவலையான விடயம், ஒரு முக்கிய விடயம் காரணமாக கண்டி வர நேரிட்டது. இல்லாவிடின் நிகழ்வில் கலந்து கொண்டிருந்திருக்கலாம்.
------------------------------------------------
மூஞ்சிப்புத்தகத்தில் உருவான காதல்களை பற்றி அடிக்கடி கேள்விபடுகிறோம், இதன் தொடர்ச்சியாக எனது நண்பனொருவருக்கு தெரிந்த ஒருவர் மூஞ்சிப்புத்தகம் மூலம் பழக்கமான பெண்ணொருவரை காதலித்து வீட்டுக்கு தெரியாமல் அப்பெண்ணோடு திருமணம் செய்ய சென்ற போதுதான் அப்பெண் ஏற்கனவே திருமணமானவள் என்றும், அவளது கணவன் வெளி நாட்டில் வேலை செய்கிறார் என்பதும் தெரிந்ததாம், முக்கியமான விடயம் இவை அனைத்தும் நடந்தது 45 நாட்களுக்குள் என்பதாகும்.

எதிர்காலத்தில் சமூக வலையமைப்புகள் எம்மை எங்கு அழைத்து செல்ல போகின்றன?
------------------------------------------------

மலையகத்தில் தோட்ட பாடசாலையொன்றில் 3ம் வகுப்பு படிக்கும் சிறுமியொருத்தியை அப்பாடசாலையில் கற்பிக்கும் காமுகனொருவன் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளான். இவ்விடயம் வெளியே தெரிந்தவுடன் பணம் கொடுத்து இதை மூடி மறைக்க முயன்றானாம். 9வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய கூடிய ஒருத்தனை ஆசிரியனாக நியமித்தது யாரது குற்றம்? இவனெல்லாம் ஒரு ஆசிரியனா? த்த்த்தூதூ

போலீஸ் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. என்னை பொறுத்தவரையில் இவனையெல்லாம் தூக்கிலேற்ற வேண்டும், அல்லது நடு ரோட்டில் வைத்து கல்லெறிந்து கொல்ல வேண்டும்.
------------------------------------------------
ஆஷஸ் போட்டி தொடரில் 3வது போட்டியை வென்று தொடரை உயிர்ப்பித்தது அவுஸ்திரேலிய அணி என்றுதான் சொல்ல வேண்டும். One Side Game என்றுமே பார்ப்பதில் சுகமிருப்பதில்லை. இரு சம பல அணிகள் போட்டியிட்டால் அதனை நன்றாக ரசிக்கலாம். மிட்சில் ஜோன்சன் மற்றும் ஹரிஸ் ஆகிய இருவரது பந்து வீச்சும், ஹசி மற்றும் வொட்சனின் பந்து வீச்சும் அவுஸ்திரேலியாவுக்கு வெற்றியை கொண்டு வந்தன எனலாம். இப்போட்டி நடந்த அதிவேக WACA மைதானத்தில் தனது வழமையான போர்மை காட்டிய மிட்சில் ஜோன்சன் அடுத்த போட்டியில் சிறப்பாக வியைாடுவாரா இல்லையா என்பதிலேயே அவுஸ்திரேலியாவின் தொடர் வெற்றி தங்கியுள்ளது. பொன்டிங் சிறப்பான போர்மில் இல்லாவிட்டாலும் அடுத்த போட்டியில் காயத்தினால் விளையாடாமல் போனால் அது அவுஸ்திரேலியாவுக்கு மனதளவில் பின்னடைவை தருமென்பதில் சந்தேகமில்லை

இந்திய தென்னாபிரிக்காவுக்கு இடையிலான போட்டி எதிர் பார்த்தபடி தென்னாபிரிக்காவுக்கு இனிங்ஸ் வெற்றியை பெற்று தந்திருக்கிறது, ஆனாலும் சாதனை நாயகன் சச்சின் தனது 50 சதத்தை பெற்று கிரிக்கட் சாதனை புத்தகத்தில் இன்னுமொருமுறை தனது பெயரை எழுதியிருக்கிறார். ஆனாலும் சச்சினுக்கு மற்றைய துடுப்பாட்ட வீரர்கள் ஆதரவளித்திருந்தால் இந்தியா ஓரளவுக்கு இப்போட்டியை கௌரவமாக முடித்திருக்கலாம்.
------------------------------------------------
கிரிக்கட் உலக கிண்ண போட்டிகள் வருவதையிட்டு “மறக்க முடியா உலக கிண்ண போட்டிகள்” என்ற தலைப்பில் ஒவ்வொரு வாரமும் பதிவெழுத நினைத்துள்ளேன்.
------------------------------------------------
மன்மதன் அம்பு படத்தில் கமல் எழுதிய கவிதை படத்தில் இடம்பெறாதாம், காரணம் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் என்கிறார்கள். உலக நாயகனின் அக்கவிதையை காட்சிப்படுத்தியிருப்பதை பார்க்க ஆவலுடனிருந்த என்னை போன்றவர்களுக்கு ஏமாற்றம்தான். இப்போதெல்லாம் அடிக்கடி கேக்கும் தத்துவ பாட்டு

“போனா போகுதுன்னு விட்டின்னா, கேணைன்னு ஆப்பு வெப்பாண்டா 
தானா தேடி போயி நின்னீன்னா வேணுன்னு காக்க வைப்பாண்டா"

"சாம, தான, பேத,  தண்டம் நாலும் சேர்ந்து 
தோத்துப் போகும் போது தகிடு தத்தோம் செய் தகிடு தத்தோம்  "

இவ்வகையான உச்சரிப்புடன் பாடலை பாடுவது கமலுக்கு அல்வா சாப்பிடுவது போன்றிருக்கும் என நினைக்கிறேன். 
------------------------------------------------

இம்முறையும் ஆஸ்காருக்கும், கோல்டன் குளோப் விருதுக்கும் பரிந்துரைக்ப்பட்டிருக்கும் நம் இசைப்புயலுக்கு இன்னொரு முறை விருது பெற வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்
------------------------------------------------
பத்து தலை நாகபாம்பு ஒன்று இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அதனை இந்து மக்கள் வணங்குகிறார்கள் எனவும் வதந்தியொன்று இலங்கை முழுவதும் பரவியதை அனைவரும் அறிந்திருப்பர். இப்பத்து நாகம் ஒரு போட்டோஷொப் பாவனையாளரின் கைங்கரியம் என்பதை கீழே உள்ள படத்தை பார்த்தால் தெரியும் ஒரு தலையுடன் இருக்கும் பாம்பின் நிழலையும் 10 தலையுடன் இருக்கும் பாம்பின் நிழலையும் கவனியுங்கள். இரண்டும் ஒன்றே.

நூடுல்ஸ் - 08 -12 - 2010

ரொம்ப நாளாக தொய்வுநிலையில் இருந்த இலங்கை தமிழ் பதிவுலகம் கடந்த ஒரு வாரமாக மீளவும் உற்சாகமாகி பழைய நிலைக்கு வந்திருப்பது மகிழ்ச்சியான விடயம், அதுவும் பதிவர்களை கலாய்க்கும் பதிவுகள் அதிகரிப்பது, பதிவர்களுக்கிடையிலான நல்லுறவை வலுப்படுத்தும் என்பதில் ஐயமில்லை. எதிர்வரும் 19ம் திகதி நடக்கவிருக்கும் பதிவர் சந்திப்பின் பின்னர் இன்னும் அதிக பதிவுகள் வெளிவரும் என்தில் எவ்வித ஐயமுமில்லை, காரணம் கடந்த இரண்டு பதிவர் சந்திப்புகளின் பின்னரும், சர்ச்சைக்குரிய “இருக்கிறம்” சந்திப்பிற்கு பின்னரும் எம்மவர்களின் பதிவுகள் அதிகரித்ததை யாமறிவோம்.

------------------------------------------------

ஆஷஷில் இங்கிலாந்திற்கு சவாலாக இருக்கவேண்டிய அவுஸ்திரேலிய அணியினர் இப்படி பல் புடுங்கிய பாம்பாக இருப்பது கொஞ்சம் கவலையளிக்கிறது, அதிலும் Punter சொதப்புவது அவரது தீவிர ரசிகர்களுக்கு (எனக்குதான்)  ஏமாற்றமளிக்கிறது.கடந்த 10 வருடங்களில் முதல் முறையாக தர வரிசையில் முதல் 20 துடுப்பாட்ட வீரர்களுக்குள் அவர் இடம் பெறாமையானது அவரது சொந்த போர்ம் சிறப்பாக இல்லாமையை காட்டுகிறது. உலக கிண்ணத்திற்கு முன்னர்அவர் பழைய நிலைக்கு வர வேண்டும், அப்போதுதான் விறுவிறுப்பான உலக கிண்ண போட்டிகளை பார்க்கலாம். 

------------------------------------------------

இந்திய அனுபவமிக்க டெஸ்ட் அணி நியுசிலாந்தோடு தடுமாறி தொடரை வெல்ல, அனுபமற்ற இந்திய ஒரு தின அணி நியுசிலாந்தோடு கலக்கலாய் ஆடி தொடரை வென்றதும் இந்திய அணியின் Bench Strength ஐ காட்டுகிறது.

------------------------------------------------

எங்களது கண்டியில் புது மைதானத்தில் டெஸ்ட் போட்டி நடக்கிறது, போய் பார்ப்போமென்றால் வருண பகவான் எங்களுக்கெல்லாம் எதிரியாய் வந்து எங்களது திட்டங்களை தவிடு பொடியாக்கிவிட்டார். உள்ளக கிரிக்கட் போட்டி தொடர்தான் தற்போது இலங்கையில் விளையாடலாம் என நினைக்கிறேன்.

------------------------------------------------

“மன்மதன் அம்பு” பாடல்கள் கேட்டேன், அதிலும் கமலின் கவிதை வரிகள் கேட்டு நிரம்ப ரசித்தேன், இந்த மனுஷனுக்குள் எத்தினை திறமைகள்? “காபி வித் அனு” நிகழ்ச்சியில் கமல் சுட சுட எழுதிய வெண்பா ரசிக்கும் படியாக இருந்தது. வழமையாகவே கமலின் பேட்டிகளை மிகவும் ரசிக்கலாம், காரணம் அதிகமாக கமல் யாருக்கும் “வாளி” வைப்பதில்லை.

------------------------------------------------

வெற்றியின் விடியல் கேட்டு நாளை ஆரம்பிக்கும் நான் தற்போது வானொலியே கேட்பதில்லை ஏனெனில் முன்னர் FM 105.1 இல் ஒலிபரப்பாகிய வெற்றி FM இப்போதெல்லாம் அவ்வலைரிசையில் ஒலிபரப்பாவதில்லை என நினைக்கிறேன். லோஷன்தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.

------------------------------------------------

உயர்தர பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் அதிக புள்ளிகளை பெற்ற மாணவர்களில் இருவர் கொழும்பை சேர்ந்தவர்கள், மற்றைய இருவரும் ரம்புக்கன மற்றும் குளியாபிட்டியை சேர்ந்தவர்கள் என்பது மகிழ்வான விடயம், வெளி மாவட்ட மாணவர்கள் இவ்வாறு சிறந்த பெறுபேறுகளை பெறுவது ஆரோக்கியமான விடயம். இதில் இன்னொரு விடயம் கலை மற்றும் வர்த்தக பிரிவுகளில் அதியுயர் புள்ளிகளை இரு மாணவிகள் பெற்று கொள்ள கணித மற்றும் விஞ்ஞான பிரிவுகளில் அதியுயர் புள்ளிகளை இரு மாணவர்கள் பெற்றுள்ளனர்.

------------------------------------------------

முதலாவது பதிவர் சந்திப்பின் பின்னர் போடப்பட்ட முதல் பட பதிவு என்னுடையதுதான் என நினைக்கிறேன். அதில் எனக்கு தமிழிசில் பலவாக்குகளை அள்ளி குவித்த லோஷன் + நயன்தாரா படம் கீழே. 


நூடில்ஸ் (01.09.2010)


01நான் ADSL இணைய இணைப்பை பாவித்துவந்த நான் கடந்த மார்ச் மாதத்திலிருந்து Mobitel Broadband இணைய இணைபுக்கு மாறிவிட்டேன், மார்ச் மாதம் வாங்கிய இணைப்புக்கு இதுவரை ஒரு கட்டண பட்டியலையும் மொபிடெல் நிறுவனம் எனக்கு அனுப்பவில்லை, ஏதோ போனால் போகட்டும் என ஒவ்வொரு மாதமும் இணைய பாவனைக்கு என ஒரு குறிப்பிட்ட கட்டணத்தை கட்டி வந்தேன், இடையில் மொபிடெல் நிறுவனத்திற்கு சென்று இரு முறையும், தொலைபேசியில் ஒரு முறையும் எனக்கு பில் வரவில்லை என முறையீடும் செய்திருக்கிறேன், ஒவ்வொருமுறையும் அவர்கள் பில்லை தபாலில் அனுப்பியிருக்கிறோம், வராதது ஏனென பார்க்கிறோம் என நம்பிக்கையளிக்கும் வகையில் பதிலளித்தனர்


திடீரென கடந்த வாரம் எனது இணைய இணைப்பு இயங்கவில்லை கஸ்டமர் கெயாரை தொடர்பு கொண்டால் நான் கட்டணம் செலுத்த தவறியதால் எனது இணைப்பை துண்டித்து விட்டார்களாம், எவ்வளவு கட்டணம் என அறியாமல் எப்படி செலுத்துவதாம்? நேற்று தொடர்பு கொண்ட போது நான் ஈ-பில்லிங் (e-Bill) சேவையை தெரிவு செய்திருப்பதால் எனக்கு பில் அனுப்பவில்லை என சொன்னார்கள், அது எப்பவொ நான் முயற்சி செய்து பார்த்து மறந்து போனது, எனது பிரச்சினை என்னவென்றால் ”அவ்வளவு பெரிய நிறுவனத்திற்கு எனக்கு பில் வராததன் காரணத்தை கண்டுபிடிக்க 3 மாதம் ஆனதா?“ என்பதாகும். இதற்கே இப்படி என்றால் வேறு பெரிய ஒரு பிரச்சினை ஏற்பட்டிருப்பின் என்ன செய்வார்கள்? இந்த பிரச்சினையால் நான் வேறு ஒரு நிறுவன இணைய இணைப்புக்கு மாற யோசித்துள்ளேன்

------------------------------------------------------------------------------------------------------
சம்பின்ஸ் லீகில் இலங்கை வயம்ப அணிக்கு அனுசரனை வழங்குவதற்கு பாலியல் ஊக்குவித்தல் தொடர்பான மருந்துகளை விநியோகிக்கும் நிறுவனம் முன்வந்திருப்பது பலரது அதிருப்தியை சம்பாதித்துள்ளது.  என்னை கேட்டால் நானும் இது வேண்டாமென்றெ சொல்லுவேன், காரணம் அதிக பணம் கொடுப்பதற்காக யாரையும் ஏற்று கொள்ளலாமென்றில்லை. இவ்வாறான அதிக பணம் மீதான மோகமே பாகிஸ்தான் வீரர்களை லஞ்சம் வாங்கி ஸபொட் பிக்சிங் (தமிழ் வார்த்தை யாதோ?) செய்ய வழிவகுத்துள்ளது. ஆகவே பணமே விளையாட்டு என்பதை ஊக்குவிக்காமலிருக்க வேண்டும், இலங்கை கிரிக்கட் சபை இதை செய்யுமா?
------------------------------------------------------------------------------------------------------
கடந்த ஆகஸ்ட் 29ம் திகதி திருமண பந்தத்தில் இணைந்த “அறிந்ததும் அனுபவமும்” பதிவரும், சக்தி வானொலி அறிவிப்பளருமான டயானா சதாசக்திநாதன் அவர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். 
------------------------------------------------------------------------------------------------------
உயர்தர பரீட்சையின் போது பரீட்சை திணைக்களம் விட்ட தவறுகளால் பரீட்சை எழுதவியலாமல் போன இரு மாணவர்களை நேற்றைய தொலைக்காட்சி செய்தியில் பார்க்க கிடைத்தது, இனி எவ்வளவுதான் மன்னிப்பு கேட்டாலும் இழந்து போன அம்மாணவர்களது பரீட்சை கனவு நனவாகாது என்பது கசப்பான உண்மை கடந்த காலங்களில் வினாதாள்களில் தவறுகளை விட்ட பரீட்சைகள் திணைக்களம், இவ்வாறு மாணவர்களின் வாழ்க்கையோடு விளையாடுவது கண்டிக்கதக்கது, சம்பந்தப்பட்டவர்கள் கவனிப்பார்களா?

உயர்தர பரீட்சை பற்றிய இன்னொரு செய்தி, ஒரு மாணவி பரீட்சைக்கு விடையளிக்க நேரம் போதாமையால் தற்கொலை செய்து கொண்டாள் என்பது, இவ்வாறு பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் தற்கொலை செய்வது தற்போது அதிகமாகிவிட்டது வருந்தத்தக்கது.
------------------------------------------------------------------------------------------------------
நேற்று மூட் சரியில்லை என மூஞ்சிப்புத்தகத்தில் ஸ்டேஸ் போட்டு சில நேரத்திலேயே தொலைபேசியில் தொடர்பு கொண்டு கனிவாக பேசிய நண்பர் பதிவர் “சிதறல்கள்” ரமேசுக்கு  எனது நன்றிகள், மே மாதம் எனது இணைய கணக்குகள் ஹேக் செய்யப்பட்டவுடன் என்னுடன் தொடர்பு கொண்டு எனக்கு உதவிய பதிவுலக நண்பர்கள, நேற்று தொடர்பு கொண்ட பதிவர் என பல சிறந்த நண்பர்களை தந்ததற்கு பதிவுலகிற்கு நன்றி சொல்கிறேன்.

------------------------------------------------------------------------------------------------------
இனிமேல் கிரிக்கட்டில் நடுவர்கள் இப்படிதான் இருக்க வேண்டி வருமோ?


நூடுல்ஸ் - 18-08-2010

சுராஜ் ரன்தீவ் போட்ட நோபோலுக்கு யப்பா எத்தனை விமர்சனங்கள், இனி மனுஷன் தூங்குறப்பவும் கிரீசுக்கு பின்னாடி இருக்கேனா என பார்த்து தூங்குவாராயிருக்கும். 

எனக்கு அவர் செய்தது பிழை என்பதில் எந்த வேறு கருத்தும் கிடையாது, எனினும் உணர்ச்சி வேகத்தில் அவ்வாறான விடயங்கள் நடப்பது சகஜமே, நான் ஓரு முறை விளையாடும்போது நடுவரின் மீது ஏற்பட்ட கோபத்தில் நானும் இவ்வாறு வேண்டுமென்றே 2 அடி முன்னாடி சென்று நோபோல் வீசியிருக்கிறேன். 

அது டீம் மீட்டிங்கில் திட்டமிட்டு செய்யப்பட்டதல்ல, அந்த நேரத்தில் உணர்ச்சி வசப்பட்டு ரன்தீவ் செய்தது, அவரது தவறுக்கு அவர் மன்னிப்பு கேட்டு விட்டார், தவறு செய்வது மனித குணம், அதற்கு மன்னிப்பு கேட்பது தெய்வ குணம், இந்த இடத்தில் சுராஜ் மன்னிப்பு கேட்டு விட்டார்.

ஆனால் இதை “சிங்களவனின் சதி” என்று இந்திய பதிவர்கள் சிலர் எழுதுவது கண்டிக்கதக்கது, விளையாட்டிலும் இனவாதத்தை விளைக்க முயல்வது கண்டிக்க தக்கது, அதிலும் முக்கியமாக அவர்களுக்கு தெரியாத விடயம், சுராஜ் ரன்தீவ் சிங்களவரல்ல என்பதும் அவர் ஒரு சிறுபான்மை இன வீரர் என்பதுமாகும். 

இந்த பிரச்சினையை பெரிதாக்குவது இந்திய ஊடகங்களாகும்

--------------------------------------------------------------------------

இந்திய ஊடகங்களை பற்றி கதைக்கையில் சொல்ல வேண்டிய ஒரு முக்கிய விடயம், அவற்றின் நம்பகதன்மை. இந்த  லிங்கிற்கு சென்று பாருங்கள், எஸ்.வி.சேகர் என்னும் கட்சி விட்டு கட்சி தாண்டும் பச்சோந்தி நித்தியானந்தா மற்றும் ரஞ்சிதா மேல் பிழையில்லை என்று வாதாடுகிறதை ஒரு சினிமா செய்தி வெளியிடும் ஊடகம் வெளியிட்டிருப்பது கண்டிக்கதக்கது.

மக்களிற்கு உண்மையை எடுத்து செல்ல வேண்டிய ஊடகங்களே இவ்வாறான செய்தியை வெளியிடுவது நல்லதல்ல, தனக்கு இலாபமாக அதிக பணம் கிடைக்க வேண்டுமென்பதற்காக ஊடக விபச்சாரம் செய்யும் இவ்வாறான ஊடகங்களை தண்டிக்க வேண்டும், காரணம் ஊடகங்களில் எழுதியிருக்கும் அனைத்தும் உண்மை என்பதை நம்பும் ஏராளமானவர்களை எனக்கு தெரியும், எனது நண்பனொருவனின் தந்தை பத்திரிகையில் செய்தி வெளிவந்தால் அதை மிகவும் சரியென்பதாக நம்புவார், நாம் பிழை என்றால் எங்களோடு எதிர்த்து வாதிப்பார்.

--------------------------------------------------------------------------

எந்திரன் பாடல்களை கேட்டு கொண்டிருக்கும் போது எதேச்சையாக வானொலியொன்றில் “காதல் சொல்ல வந்தேன்” படத்திலிருந்து “அன்புள்ள சந்தியா” என்னும் பாடலை கேட்க நேர்ந்தது, செம கலக்கல் பாடல், கார்த்திக் உணர்ந்து பாடியிருக்கிறார். கார்த்திக் வாழ்க்கையில் சந்தியா என்று யாரையாவது காதலித்திருப்பாரோ?  என்று என்னுமளவிற்கு இப்பாடலை பாடியிருக்கிறார்.

இப்போதைக்கு எனது பிளே லிஸ்ட்டில் எந்திரன் பாடல்களுக்கு அடுத்ததாக இருப்பது இப்பாடலேயாகும். கேட்டு பாருங்கள் ரசிப்பீர்கள்.

--------------------------------------------------------------------------

காலையில் வெற்றி வானொலியின் பேப்பர் தம்பியின் குறும்பான அரசியல் விமர்சனங்களை ரசிப்பதுண்டு, அந்த குரலுக்கு சொந்தக்காரர் யாரப்பா? திடீரென்று அவர் சொல்லும் அரசியல் பஞ்ச் வசனங்கள் கலக்கல்.

இன்று விடியலில் லோஷன் “நண்பர்களோடு ஒத்து போகும் விடயங்கள்” பற்றி கதைத்தார். நானும் ஒரு குறுஞ்செய்தி அனுப்ப நினைத்து பின்னர் எனது பதில் பெரிதாக இருப்பதால் அனுப்பவில்லை, 

எனக்கு அதிகமாக நண்பர்கள் இருப்பதற்கு காரணம் ஒவ்வொரு நண்பரோடு ஒவ்வொரு விடயம் கதைப்பேன், சிலருக்கு கிரிக்கட் பிடிக்கும் அவர்களை சந்திக்கும் போது கிரிக்கட் கதைப்பேன், சிலருக்கு கிரிக்கட் பிடிக்காது கால்பந்து மட்டுமே பிடிக்கும், அவர்களை கண்டால் கால்பந்து பற்றி கதைப்பேன். இன்னும் சில நண்பர்கள் என்னை கண்டால் ஏ.ஆர். ரகுமானை பற்றி கதைப்பார்கள், அவர்களோடு இசைப்புயல் பற்றி கதைப்பேன், என்னைப்போல் இசைப்புயலின் தீவிர ரசிகர் ஒருவர் எனக்கு நண்பராகவுள்ளார், அவர் எனக்கு நண்பனாக ஆனதே இசைப்புயலின் பாடல்களினால் தானாகும். அவர் கடைசியாக என்னோடு கதைத்தது எந்திரன் பாடல் வெளியிட்ட நாளன்று அதற்கு முன்னர் அவர் கதைத்தது விண்ணை தாண்டி வருவாயா பாடல் வெளியீட்டன்று, எங்களிரண்டு பேருக்கு ரகுமானை தவிர்த்து வேறு எந்த விடயமும் கதைப்பதற்கு இல்லை.

--------------------------------------------------------------------------


எனது நண்பியொருத்திக்கு இரு கண்களிலும் பார்வையில்லை, ஆனாலும் தன்னம்பிக்கை என்னவென்பதை நான் அறிந்து கொண்டது அவளிடம்தான். அவளொரு பட்டதாரியும் கூட. அவளையும் ஒருத்தன் காதலித்தான். அந்த மனிதனை நான் கடவுளை விட பெரியவராக கருதினேன், ஆனால் இன்று அவளை விட்டு வேறு ஒருத்தியை கல்யாணம் கட்ட போகிறான், அவன் எனது தோழியை கை விட்டதற்கு காரணம் என்ன வென்று தெரியாது, ஆனால் இன்று அவன் எனது மனதில் ரொம்ப கேவலமானவனாகி விட்டான். இப்படிபட்டவளை கைவிட அவனுக்கு எப்படி மனம் வந்ததோ தெரியாது, இவனெல்லாம் ஒரு மனிதனா?


 இவர்களும் மனிதர்களே.. இவர்களை படைத்த கடவுளின் தவறுக்கு இவர்களை பழிவாங்காதீர்கள். இவர்களை கண்டால் தயவு செய்து அவர்களுக்கு உதவுங்கள்





நூடுல்ஸ் (06-07-2010)

இந்திய அரசியலில் மீண்டும் இலங்கை பிரச்சினை பெரிதாக கதைக்கப்படுகிறது, கிட்டடியில் தமிழகத்தில் ஏதாவது தேர்தல் வர போகிறது என நினைக்கிறேன். பதிவர் பவனின் பதிவில் இந்திய நண்பாகள் பலரும் இலங்கை தமிழருக்காக இந்திய மக்கள் பரிந்து பேசுவது தப்பா? என கேட்டார்கள்,  இல்லவேயில்லை, தமிழக சகோதரர்கள் இலங்கை தமிழர்கள் மீது வைத்திருக்கும் பாசம் அளவில்லாதது, ஆனால் தமிழக சந்தர்ப்பவாத அரசியல் வாதிகள் இலங்கை தமிழர்களை தங்களது அரசியல் நலனுக்காக மாத்திரமே பாவிப்பது இங்குள்ள பலருக்கும் தெரிந்த விடயம்.  அவர்களால் எம்மவர்களுக்கு எந்த வித நன்மையும் கிடைக்க போவதில்லை, தந்தியடிக்கவும்,  தண்ணயடிக்கவுமே இலங்கை தமிழரை பற்றி பேசுவார்கள், இந்த லட்சணத்தில் செம்மொழி மாநாடு வேறு...

பல கோடி ரூபா செலவில் கருணாநிதிக்கு பாராட்டு விழாவாகதான் நான் இவ்விழாவை பார்த்தேன், அதில் வீணடிக்கப்பட்ட பணத்தில் ஒரு பகுதியை இங்குள்ள அகதிகளுக்கு கொடுத்திருந்தால் பல நாட்கள் அதில் பசியாறியிருக்கலாம்.

-----------------------------------------------------------------------------------

இலங்கை ரக்பி லீக் சுற்று போட்டியின் இறுதிப்போட்டியில் கண்டி விளையாட்டு கழகம் கடைசி நேரத்தில் CH & FC கழகம் வெற்றி பெற்றது. வழமை போல் கண்டி விளையாட்டு கழகம் வெற்றி பெறாமை, கொஞ்சம் கவலையான விடயமாக இருந்தாலும் சுற்று போட்டியில் சகல போட்டிகளிலும் கிடைத்த புள்ளிகளின் அடிப்படையில் கண்டி விளையாட்டு கழகம் சம்பியனாக அறிவிக்கப்பட்டது சந்தோஷமே.

-----------------------------------------------------------------------------------

கால்பந்து உலக கிண்ணம் கடைசி கட்டத்தை நெருங்குகிறது, உருகுவே, நெதர்லாந்து, ஸ்பெயின், ஜேர்மன் அணிகள் மாத்திரம் எஞ்சியிருக்கின்றன, இன்றைய முதலாம் அரையிருதியில் நெதர்லாந்தும் கள்ளத்தனத்தால் காலிறுதியை வெற்றி பெற்ற உருகுவே அணியும் மோதுகின்றன, காலிறுதியில் உருகுவே வீரர் சுவாறெஸ் கையால் பந்தை தட்டிவிட்டு அணியை காப்பாற்றிவிட்டார், எனக்கு பிடித்தமான வீரராக இருந்த சுவாறெஸ் என்னும் வீரர் அன்றிலிருந்து எனக்கு பிடிக்காத வீரராகி விட்டார். பின் வாசல் வழியாக அரையிருதிக்கு வந்த உருகுவே அணியை நெதர்லாந்து துவைத்து எடுக்க வேண்டுமென்பதே எனது அவா.

-----------------------------------------------------------------------------------

இலங்கை கிரிக்கட்டின் பிதாமகனான முரளி தனது ஓய்வை டெஸ்ட் போட்டிகளில் அறிவித்து விட்டார், தன்னை யாரும் விலக்க முன்னர் தானாகவே விலகி தன்னை ஒரு கண்ணியவானாக மீண்டும் நிருபித்து விட்டார், நிறைகுடம் என்றும் தளம்பாது என்பதற்கு முரளி ஒரு சிறந்த உதாரணம், இன்றைக்கு பிராட்மனை கிரிக்கட்டின் சிறந்த துடுப்பாட்ட வீரராக விளிப்பதை போல், எதிர்காலத்தில் அக சுழற்பந்து வீச்சின் தந்தையாக முரளியை கூறுவர்,  முரளியின் கண்கள் காட்டும் பாவம் (உணர்ச்சி) எந்த நாட்டியகாரரிடமும் காணக்கிடைக்காது, முரளியின் முதலாதவது போட்டியிலிருந்து அவரை ரசிப்பதில் பெருமையடைகிறேன், இனி மேல் அவரை டெஸ்ட் போட்டிகளில் பார்க்க முடியாது என்பதை நினைக்கையில் சொல்ல முடியாத கவலை ஏற்படுகிறது.

 சுழற்பந்து வீச்சு முரளி, ஷேன் வோர்ன், குமப்ளே காலம் பொன்னெழுத்துகளால் எழுதப்பட வேண்டிய காலமாகும், முரளி பற்றி தனியாக ஒரு பதிவு போட வேண்டும், கீழே உள்ள வீடியோ 1998ல் இங்கிலாந்தில் முரளி நிகழ்த்திய ஒன்பது விக்கட் சாதனையை காட்டுகிறது, இப் போட்டியில் இங்கிலாந்து அணியின் இரண்டாம் இனிங்சின் பத்து விக்கட்டுகளில் ஒன்பதை முரளி பெற்றது மறக்கவியலாதது, (எஞ்சிய ஒரு விக்கட் உபுல் சந்தனவினால் ரன் அவுட் ஆக்கப்பட்டது) 


முரளி என்னும் வீரரை பிரதியீடு செய்வது இலங்கை கிரிக்கட்டுக்கு இலகுவாக இருக்க போவதில்லை என்பது திண்ணம்.

-----------------------------------------------------------------------------------

ராவணன் படத்தின் இறுதியில் ரகுமானின் குரலில் ஒலிக்கும் “நான் வருவேன், நானே வருவேன்” பாடலை தேடி கொண்டிருக்கிறேன், யாராவது டவுன்லோட் லிங்க் தந்து உதவுங்கள்

-----------------------------------------------------------------------------------

கால்பந்து அரையிறுதி போட்டி தொடங்க போகிறது,  நான் பார்க்க போகிறேன், அதனால் இப்பதிவிற்கு இத்துடன் முற்றுப்புள்ளி, இந்த படத்திலுள்ள மாதிரி எதிர் காலத்தில் நடந்தாலும் நடக்கலாம், காரணம் நாளைய உலகம் விளம்பர உலகம்.

நூடுல்ஸ் (30-06-2010)





எனது மசாலா பதிவுகளுக்கு என்ன பெயர் வைப்பது என முன்னர் யோசித்திருந்தபோது லோஷன் நூடுல்ஸ் என வையுங்கள் என வேடிக்கையாக கூறியதையடுத்தே எனது பதிவுக்கு நூடுல்ஸ் என வைத்தேன். அந்த நாமகரணம் செய்த அதிர்ஷடமோ தெரியவில்லை, இன்று எனக்கும் இன்னும் 2 நண்பர்களுக்கும் சேர்த்து நூடுல்ஸ் சமைக்க போகிறேன். பாவம் அந்த இரண்டு நண்பர்களும்.

-------------------------------------------

செம் மொழி மாநாட்டு நிகழ்ச்சி எதையும் பார்க்க கிடைக்காக கவலையில் இருந்த நான் வார இறுதியில் வீட்டுக்கு சென்றிருந்த போது கலைஞர் தொலைக்காட்சியில் செம்மொழி மாநாட்டு நிகழ்வுகளை ஒளிபரப்புவதை பார்த்தேன். ஒரே ஒரு நிகழ்ச்சி பார்த்து நொந்து விட்டேன்.

நான் பார்த்த நிகழ்ச்சி சாலமன் பாப்பையாவின் தலைமையிலான பட்டிமன்றம், அதன் தலைப்பு “தமிழை வளர்த்தது சின்னத்திரை, வெள்ளித்திரை, எழுத்துதுறை” என்பதாகும். ஆனால் அங்கு பட்டிமன்றத்தில் சகலரும் வாதிட்டது கருணாநிதி வளர்த்தது வெள்ளித்திரையை, சின்னத்திரையை மற்றும் எழுத்துத்திரையை என்னும் தலைப்பிலாகும். இங்கு கதைத்த பலரும் கருணாநிதி என்னும் மனிதனை காக்காய் பிடிப்பதையே செய்தார்கள், இதில் லியோனி, சந்திரசேகர், எஸ்.வி.சேகர், பாரதிராஜா போன்றோர் எதை கதைத்தார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம். லியோனி எல்லாம் ஒரு பேச்சாளராகவே எனக்கு தெரியவில்லை, சினிமா பற்றி கதைக்காமல் சினிமா பாட்டு பாடாமல் பேச சொன்னால் மனுஷன் ஊரை விட்டு ஓடிவிடுவார் என நினைக்கிறேன். இவர்களை எங்கள் ஊர்களில் கல்லூரி விவாதங்களில் பேசுவோரிடம் பயிற்சிக்கு அனுப்பலாம்.

உலக தமிழர்களின் தலைவராக கருணாநிதி என்னும் பேராசை பிடித்த மனிதனை உருவகப்படுத்தும் மேடை பேச்சாளர்களிடம் நான் சொல்ல விரும்புவது “ஐயா இந்தியாவிலே பலரும் அவரை தலைவராக ஏற்று கொள்ளவில்லை என்னும் போது, இலங்கையில் தமிழர்கள் யாரும் அவரை தலைவராக ஏற்று கொள்ளவில்லை” என்பதையாகும். தயவு செய்து உலக தமிழர்களின் தலைவராக அந்த பேராசை பிடித்த மனுஷனை சொல்லாதீர்கள். சினிமா கதை, சினிமா பாட்டு, தற்பெருமை கவிதை எழுதுவது எல்லாம் தமிழ் சேவை என்பதில் அடங்காது என்பதை புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் எமது மொழிக்கு செய்யக்கூடிய பெரிய சேவை என்னவென்றால் இவ்வாறான கேலிக்கூத்துகளை அரங்கேற்றி தமிழையும் தமிழனையும் கேவலப்படுத்தாமலிருப்பதாகும்.

-------------------------------------------

உலக கிண்ண கால்பந்து போட்டிகள் சுவாரஸ்யமான கட்டத்திற்கு வந்துவிட்டன, அது பற்றி தனியாக ஒரு பதிவு போட எண்ணியிருக்கேன். 32 அணிகளுடன் தொடங்கிய போட்டிகளில், இப்போதைக்கு மீதமிருப்பது 8 அணிகளாகும். எதிர்பார்த்திருந்த பல அணிகள் வெளியேறியது ரசிகர்களுக்கு கவலையான விடயமாகும். தென் கொரியா மற்றும் ஜப்பான் அணிகள் ரொம்ப போராடி தோல்வியடைந்தது எனக்கு கொஞ்சம் கஷ்டமாகவிருந்தது. ஆனாலும் இறுதிவரை போராடியதற்காக இரண்டு ஆசிய அணிகளும் பெருமைபட்டு கொள்ளலாம். இப்போதைக்கு மீதமிருக்கும் அணிகளில் ஆர்ஜன்டினாவே உலக கோப்பையை வெல்லக்கூடிய அணியாக நான் கருதும் அணி. இவர்களது ஆட்டத்தை ரசித்து கொண்டேயிருக்கலாம், என்ன நளினமாய் விளையாடுகிறார்கள், அதிலும் லயனல் மெஸ்ஸியின் ஆட்டம். பார்த்து கொண்டேயிருக்கலாம்.

I Love Argentina


முக்கியமான பல போட்டிகளை காட்டாமல் விட்ட ஐ அலைவரிசை அதற்கு பதிலாக அறுவை நாடகங்களை காட்டுவது ஏனோ தெரியவில்லை, இப்படி நாடகம் தான் முக்கியம் என்றால், வேறு ஏதாவது அலைவரிசைக்கு இப்போட்டிகளை விட்டு கொடுத்திருக்கலாம்.
-------------------------------------------

இலங்கை தமிழ் வானொலிகளில் மலையத்தில் அநேகமானோரின் விருப்பத்திற்குறிய வானொலியாக இருப்பது “வெற்றி” வானொலியாகும். சதவீதப்படி பார்த்தால் மேல் மாகாணத்தை விட அதிக வீதமாக வெற்றியின் நேயர்கள் மலையகத்தில் இருப்பார்கள் என நினைக்கிறேன், ஆனாலும் வெற்றி தொலைக்காட்சி ஒளிபரப்பில் மலையகம் புறக்கணிக்கப்பட்டிருப்பது கவலைக்குறிய விடயமாகும்.

-------------------------------------------

கிரிக்கட்டில் அவுஸ்திரேலியாவை இங்கிலாந்தும், மேற்கிந்திய தீவுகளை தென்னாபிரிக்காவும் துவைத்து எடுத்து கொண்டிருக்கின்றன. எந்த போட்டிகளையும் பார்க்கவில்லை. அவுஸ்திரேலியா இறங்குமுகத்தில் இருக்கிறதா இல்லை அடுத்த வருட உலக கிண்ணத்திற்கு பாய்வதற்கு முன்னர் இப்போது பதுங்குகிறதா என தெரியவில்லை. பாவம் பொன்டிங்

-------------------------------------------
அழகென்றால் அனுஷ்காதான்
(வசன உதவி - இளைய தளபதி)

நூடுல்ஸ் (16-06-2010)

ரொம்ப நாளாக பதிவு எழுதாவிடின் தொடர்பு விட்டு போய்விடும் என்பதால் ஒரு நூடுல்ஸ் போடுகிறேன்.

--------------------------------------------------------------------------------------------
கால்பந்து காய்ச்சல் வந்து பலரை வாட்டுகிறது, முக்கியமான போட்டிகள் நள்ளிரவில் நடை பெறுவது கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது (நேற்று நம்ம பிரேசில் விளையாடிய நேரம், போட்டியை பார்த்தால் அலுவலகத்தில் தூங்கி வழிய வேண்டி வரும். அடுத்த சுற்று போட்டிகள் தொடங்கிய பின்னர் எல்லா போட்டிகளையும் பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என நினைக்கிறேன்.

--------------------------------------------------------------------------------------------
நேற்று கிரிக்கட் பார்க்கும் எண்ணம் இருக்க வில்லை காரணம் கால்பந்து, சும்மா பார்க்க தொடங்கினேன், செம திரிலாக இருந்தது. யப்பா அப்ரிடிக்கு எப்படி அந்தளவு பொறுமை வந்தது என்பது ஆச்சரியமாக இருக்கிறது. வருவார் 2, 3 சிக்சர் அடித்துவிட்டு போய்விடுவார் என எதிர் பார்த்தால் மனுஷன் சூப்பரா விளையாண்டார், எப்போதுமே அப்ரிடியின் அதிரடியை ரசிப்பேன், நேற்று அந்த மனுஷனுக்கு தசைபிடிப்பு வந்திருக்காவிடின் போட்டியை எப்போதோ வென்றிருப்பார். பதிவர் பவனின் பஞ்ச் படி அப்ரிடி அடித்தது அடியல்ல, ஒவ்வொன்றும் இடி.

பாவம் முரளி, அடித்து நொறுக்கி விட்டார்கள், அடுத்த சிங்கத்துக்கும் வயதாகிறதோ? அப்படியாயின் சனத் மாதிரி தொங்கி கொண்டிருக்க வேண்டாம்.

மத்தியுஸ், மாலிங்க சிறப்பாக விளையாண்டு இலங்கையின் வெற்றிக்கு காரணமாக இருந்தார்கள்.
-----------------------------------------------------------------------------------------------
திங்கட்கிழமை காலை நுவரெலியாவிலிருந்து கண்டி வருகையில் வழமை போல வெற்றி எப் எம்மில் விடியல் கேட்டு கொண்டு வந்தேன், ஆபிரிக்கா பற்றி பல தெரியாத விடயங்களை அந்நிகழ்ச்சியினால் அறிந்து கொண்டேன், இந்த மாதிரி நிகழ்ச்சிகளை அதிகமாக லோஷனிடம் எதிர்பார்க்கிறோம்.

தங்கிலீஸ் பேசும் வானொலிகளில் இவ்வாறான நிகழ்ச்சிகளை எதிர் பார்க்க முடியாதே. அதனால்தான் வெற்றியிடம் எதிர்பார்க்கிறோம்.

வெற்றி வானொலியில் குறையே இல்லை என கேட்க வேண்டாம், நான் அதிகமாக வானொலி கேட்கும் காலை நேரங்களில் விடியல்தான் சிறந்தது என்பதில் சந்தேகமேயில்லை.
--------------------------------------------------------------------------------------------
கொஞ்ச நாளாக “உசுரே போகுது” என பலரது உள்ளங்களை கொள்ளை கொண்ட பாடலுக்காகவே முதல் நாள் ராவணன் பார்க்க யோசித்துள்ளேன், எப்போதுமே நான் ரசிக்கும் ரகுமான், மணிரத்னம், சீயான், ஐஸ் ஆகியோருக்காக கட்டாயம் படம் முதல் நாள் பார்க்க வேண்டும். சுறா அசல் போன்றவற்றையே தியேட்டர்ல பார்த்து பழகிட்டோம், இதை விட கொடுமையாக ராவணன் இருக்காது என நம்பலாம்.
--------------------------------------------------------------------------------------------

--------------------------------------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது

அய்யப்ப பணிக்கர் எனும் மலையாள கவிஞர் எழுதியதாக வைரமுத்து குமுதத்தில் குறிப்பிட்ட கவிதை. தந்தையின் மறைவுக்கு அமெரிக்காவிலிருந்து மகன் அனுப்பும் செய்தி

“விடுமுறை இல்லை,
வீடியோ அனுப்புங்கள்,
வாரக்கடைசியில் பார்த்து
வருத்தப்பட.
வீடியோ கலரில் இருப்பது
உத்தமம்,
ஏனெனில் -
மலையாள மரணம்
பார்த்ததில்லை
என் அமெரிக்க நண்பர்கள்
யாரும்”

--------------------------------------------------------------------------------------------
பார்த்ததில் பிடித்தது


ஜெஸ்ஸி ஜெஸ்ஸி ஜெஸ்ஸி .....

Facebook Badge