நூடுல்ஸ் (22-12-2010)

பதிவர்களுக்கிடையிலான கிரிக்கட் போட்டி விளையாண்ட களைப்பு இன்னும் போகவில்லை, பின்ன கிட்ட தட்ட ஒரு வருடத்திற்கு பின்னர் விளையாண்டால் எப்படி இருக்கும்? ஆறே ஆறு ஓவர்கள் பந்து வீசியது, இன்னும் கைவலி. ஆனாலும் அன்றைய நாள் மிகவும் இனிமையாக கழிந்தது. ஏற்பாட்டாளர்களே இது போன்ற விளையாட்டுகளை எதிர்காலத்திலும் ஏற்பாடு செய்யுங்கள். இவை பதிவர்களுக்கிடையிலான நட்பை அதிகரிக்க உதவும்.

கிரிக்கட் போட்டிக்கு அடுத்த நாள் நடைபெற்ற பதிவர் சந்திப்புக்கு வரவியலாமல் போனது மிகவும் கவலையான விடயம், ஒரு முக்கிய விடயம் காரணமாக கண்டி வர நேரிட்டது. இல்லாவிடின் நிகழ்வில் கலந்து கொண்டிருந்திருக்கலாம்.
------------------------------------------------
மூஞ்சிப்புத்தகத்தில் உருவான காதல்களை பற்றி அடிக்கடி கேள்விபடுகிறோம், இதன் தொடர்ச்சியாக எனது நண்பனொருவருக்கு தெரிந்த ஒருவர் மூஞ்சிப்புத்தகம் மூலம் பழக்கமான பெண்ணொருவரை காதலித்து வீட்டுக்கு தெரியாமல் அப்பெண்ணோடு திருமணம் செய்ய சென்ற போதுதான் அப்பெண் ஏற்கனவே திருமணமானவள் என்றும், அவளது கணவன் வெளி நாட்டில் வேலை செய்கிறார் என்பதும் தெரிந்ததாம், முக்கியமான விடயம் இவை அனைத்தும் நடந்தது 45 நாட்களுக்குள் என்பதாகும்.

எதிர்காலத்தில் சமூக வலையமைப்புகள் எம்மை எங்கு அழைத்து செல்ல போகின்றன?
------------------------------------------------

மலையகத்தில் தோட்ட பாடசாலையொன்றில் 3ம் வகுப்பு படிக்கும் சிறுமியொருத்தியை அப்பாடசாலையில் கற்பிக்கும் காமுகனொருவன் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளான். இவ்விடயம் வெளியே தெரிந்தவுடன் பணம் கொடுத்து இதை மூடி மறைக்க முயன்றானாம். 9வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய கூடிய ஒருத்தனை ஆசிரியனாக நியமித்தது யாரது குற்றம்? இவனெல்லாம் ஒரு ஆசிரியனா? த்த்த்தூதூ

போலீஸ் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. என்னை பொறுத்தவரையில் இவனையெல்லாம் தூக்கிலேற்ற வேண்டும், அல்லது நடு ரோட்டில் வைத்து கல்லெறிந்து கொல்ல வேண்டும்.
------------------------------------------------
ஆஷஸ் போட்டி தொடரில் 3வது போட்டியை வென்று தொடரை உயிர்ப்பித்தது அவுஸ்திரேலிய அணி என்றுதான் சொல்ல வேண்டும். One Side Game என்றுமே பார்ப்பதில் சுகமிருப்பதில்லை. இரு சம பல அணிகள் போட்டியிட்டால் அதனை நன்றாக ரசிக்கலாம். மிட்சில் ஜோன்சன் மற்றும் ஹரிஸ் ஆகிய இருவரது பந்து வீச்சும், ஹசி மற்றும் வொட்சனின் பந்து வீச்சும் அவுஸ்திரேலியாவுக்கு வெற்றியை கொண்டு வந்தன எனலாம். இப்போட்டி நடந்த அதிவேக WACA மைதானத்தில் தனது வழமையான போர்மை காட்டிய மிட்சில் ஜோன்சன் அடுத்த போட்டியில் சிறப்பாக வியைாடுவாரா இல்லையா என்பதிலேயே அவுஸ்திரேலியாவின் தொடர் வெற்றி தங்கியுள்ளது. பொன்டிங் சிறப்பான போர்மில் இல்லாவிட்டாலும் அடுத்த போட்டியில் காயத்தினால் விளையாடாமல் போனால் அது அவுஸ்திரேலியாவுக்கு மனதளவில் பின்னடைவை தருமென்பதில் சந்தேகமில்லை

இந்திய தென்னாபிரிக்காவுக்கு இடையிலான போட்டி எதிர் பார்த்தபடி தென்னாபிரிக்காவுக்கு இனிங்ஸ் வெற்றியை பெற்று தந்திருக்கிறது, ஆனாலும் சாதனை நாயகன் சச்சின் தனது 50 சதத்தை பெற்று கிரிக்கட் சாதனை புத்தகத்தில் இன்னுமொருமுறை தனது பெயரை எழுதியிருக்கிறார். ஆனாலும் சச்சினுக்கு மற்றைய துடுப்பாட்ட வீரர்கள் ஆதரவளித்திருந்தால் இந்தியா ஓரளவுக்கு இப்போட்டியை கௌரவமாக முடித்திருக்கலாம்.
------------------------------------------------
கிரிக்கட் உலக கிண்ண போட்டிகள் வருவதையிட்டு “மறக்க முடியா உலக கிண்ண போட்டிகள்” என்ற தலைப்பில் ஒவ்வொரு வாரமும் பதிவெழுத நினைத்துள்ளேன்.
------------------------------------------------
மன்மதன் அம்பு படத்தில் கமல் எழுதிய கவிதை படத்தில் இடம்பெறாதாம், காரணம் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் என்கிறார்கள். உலக நாயகனின் அக்கவிதையை காட்சிப்படுத்தியிருப்பதை பார்க்க ஆவலுடனிருந்த என்னை போன்றவர்களுக்கு ஏமாற்றம்தான். இப்போதெல்லாம் அடிக்கடி கேக்கும் தத்துவ பாட்டு

“போனா போகுதுன்னு விட்டின்னா, கேணைன்னு ஆப்பு வெப்பாண்டா 
தானா தேடி போயி நின்னீன்னா வேணுன்னு காக்க வைப்பாண்டா"

"சாம, தான, பேத,  தண்டம் நாலும் சேர்ந்து 
தோத்துப் போகும் போது தகிடு தத்தோம் செய் தகிடு தத்தோம்  "

இவ்வகையான உச்சரிப்புடன் பாடலை பாடுவது கமலுக்கு அல்வா சாப்பிடுவது போன்றிருக்கும் என நினைக்கிறேன். 
------------------------------------------------

இம்முறையும் ஆஸ்காருக்கும், கோல்டன் குளோப் விருதுக்கும் பரிந்துரைக்ப்பட்டிருக்கும் நம் இசைப்புயலுக்கு இன்னொரு முறை விருது பெற வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்
------------------------------------------------
பத்து தலை நாகபாம்பு ஒன்று இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அதனை இந்து மக்கள் வணங்குகிறார்கள் எனவும் வதந்தியொன்று இலங்கை முழுவதும் பரவியதை அனைவரும் அறிந்திருப்பர். இப்பத்து நாகம் ஒரு போட்டோஷொப் பாவனையாளரின் கைங்கரியம் என்பதை கீழே உள்ள படத்தை பார்த்தால் தெரியும் ஒரு தலையுடன் இருக்கும் பாம்பின் நிழலையும் 10 தலையுடன் இருக்கும் பாம்பின் நிழலையும் கவனியுங்கள். இரண்டும் ஒன்றே.

14 Responses
  1. This comment has been removed by the author.

  2. எனக்குத் தான் சுடு சோறு சாப்பிட்டுட்டு வரட்டுமா...

    அன்புச் சகோதரன்...
    மதி.சுதா.
    யாழ்ப்பாணத்தில் உருவாகும் திரைப்படமும் அதன் பின்னணியும்.


  3. Ramesh Says:

    அருமை. நல்லா இருக்கு. சில சகிக்கமுடியாத நிகழ்வுகள். சில சந்தோசச்சாரல்கள்...பகிர்வுக்கு நன்றிகள்


  4. என்ன அண்ணரே நூடில்ஸ் என்று விட்டு அறுசுவை அரங்கமே நடத்தி முடித்துள்ளீர்கள்..
    வதனப்புத்தக விசயம் பல நடக்கிறது...
    ஆசிரியர் மன்னிக்க முடியதவரே....
    உலகக்கிண்ணப் பதிவிற்காய் காத்திருக்கிறேன் கடந்த உலகக்கிண்ணத்தில் அரையிறுதி, இறுதிப் போட்டிகள் மட்டுமே பார்க்க முடிந்தது வருத்தமே.....
    காத்திருக்கிறேன்...


  5. சிறுவர் துஷ்பிரயோகத்தை நினைக்கும் போதே மனம் துடிக்கிறது.

    ஆனால் சட்டம் சிக்கலானது, அதன் ஒவ்வொரு தீர்மானத்திற்கும் பலநூறு நியாயங்கள் உண்டு. எதுவும் 100 சதவீதம் சரி என்று சொல்லிட முடியாது ஆனால் இருதரப்பு நியாயங்களையும் சட்டம் கேட்கும் - அது தான் சட்டம். நீதியின் அளவு கோல் பொதுவானது, நியாயத்தின் அளவு கோல் ஆளுக்காள் மாறுபடும்.

    இந்த இடத்தில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு இலங்கைக் குற்றவியல் சட்டத்தின்படி என்ன தண்டனை என்பதை குறிப்பிட விளைகிறேன்.

    இலங்கை குற்றவியல் சட்டத்தின் (திருத்தப்பட்ட) 365அ பிரிவின் படி, சிறுவர் மீதான பாலியல் துஷ்பிரயோத்திற்கு 10 வருடத்திற்குக் குறையாத இருபது வருடத்திற்கு மேற்படாத கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

    குற்றவாளி தன்னை மனநோயாளியாக ஆக்கிக்கொள்ளாதவரை இதுபோன்ற வழக்கிலிருந்து தப்பிப்பதோ, தண்டனையைக் குறைப்பதுவோ கஷ்டம்.

    ஜனாதிபதி மன்னித்தால் முடியும். ஏற்கனவே அவர் இரண்டு கொலைக்குற்றவாளிகளையே மன்னித்து விடுதலை செய்தவர்!


  6. எல்லாமே நல்லா இருந்ததுங்க ஆனால் இருதியில பா பா பா பாம்பு


  7. Subankan Says:

    நூடுல்ஸ் வழமைபோல் கலக்கல் :)

    இப்போதெல்லாம் சிறுவர் துஸ்பிரயோகச் செய்திகள் அடிக்கடி வருகின்றன. எங்கே போய் முடியப்போகிறதோ :(


  8. KANA VARO Says:

    நிறைய நல்ல விசயங்கள். வாத்தியார்ட வேலையைப் பார்க்க எரிச்சல் வருது. சவுதி தண்டனைகள் தான் குடுக்கணும்.


  9. Admin Says:

    அங்கு மாத்திரமல்ல எல்லா இடங்களிலும் ஆசிரியர்களினால் சிறுவர்கள் துஸ்பிரயோகம் செய்யப்படுகின்றனர். இங்கேயும் பல விடயங்கள் நடந்தேறி இருக்கின்றன. ஒரு ஆசிரியர் பல மாணவிகளை துஸ்பிரயோகம் செய்திருக்கின்றார் நானும் இவை பற்றி பல விடயங்களை எழுத இருக்கின்றேன்.


  10. பதிவர் கிறிக்கற்: ஆமாம். மகிழ்ச்சியான நாள்.

    பேஸ்புக்: ;-)

    வன்புணர்வு: :-(
    மனிதர்களாக உணர்ந்து திருந்தும் நாள் எப்போது வருமோ?
    ஆகக்கூடிய தண்டனை வழங்கப்பட வேண்டும்.


    ஆஷஷ்: பொன்ரிங் விளையாடுவார்.
    ஜோன்சன் சிறப்பாக ஆடுவார் என்று நம்புவோம். :-)

    இந்தியா - தென்னாபிரிக்கா: :-)))

    மறக்கமுடீயா உலகக்கிண்ணப் போட்டிகள்: அருமை, எழுதுங்கள்.

    மன்மதன் அம்பு: எதிர்பார்க்கிறேன்.

    இசைப்புயல்: வாழ்த்துக்கள்.

    பாம்பு: ஹி ஹி....

    கலக்கல் நூடில்ஸ்.... :-))))


  11. நூட்லஸ் அருமை யோ
    அந்த ஆசிரியன் எனப்படுபவனை பற்றிய செய்தி நிறைய வருத்தம் கொள்ளச் செய்தது


  12. Unknown Says:

    நூடில்ஸ் ரொம்பவே ருசி...வாழ்த்துக்கள் !!


  13. மூஞ்சிப்புத்தக ஸ்டேடஸின் அர்த்தம் இப்பதான் புரிகிறது!


  14. Jana Says:

    சிறுவர் துஸ்பிரயோகத்திற்கு எதிராக தற்போது கடுமையான சட்டங்கள் உள்ளபோதிலும். அது நடைமுறைப்படுத்தப்படுவது சந்தேகமே. இன்னும் கடுமையான சட்டம் கொண்டுவரப்படவேண்டும். தாங்கள் சொன்னதுபோல தூக்கு...ம்ம்ம்...அதையும்விட


Facebook Badge