மறக்க முடியா உலக கிண்ண கிரிக்கட் போட்டிகள் - போட்டி 1

மறக்க முடியாத உலக கிண்ண கிரிக்கட் போட்டிகள் என்னும் தொடரை இன்று முதல் எழுத எண்ணியுள்ளேன். உங்களின் ஆதரவுடன் தொடர்ந்து இதை எழுதலாம் என்றிருக்கிறேன்


போட்டி - 1996ம் ஆண்டு உலக கிண்ண போட்டிகள் அரையிறுதி ஆட்டம்
அணிகள் - அவுஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகள்
மைதானம் - மொகாலி
நாணய சுழற்சியில் வெற்றி - அவுஸ்திரேலியா


நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலியா அணி தலைவர் மார்க் டெயிலர் வேக பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான மொகாலி ஆடுகளத்தில் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானிக்கிறார். முதலில் துடுப்பெடுத்தாட இந்த ஆடுகளம் சிறப்பானதல்ல என்பதை மேற்கிந்திய வேகபந்து வீச்சாளர்கள் அவுஸ்திரேலியாக்கு உணர்த்தினார்கள். தொடர் முழுவதும் சிறப்பாக ஆடி வந்த மார்க் வாஹ்வை கர்ட்லி அம்ரோஸ் ஓட்டம் பெற முன்னரே ஆட்டமிழக்க செய்தார், தொடர்ந்து மார்க்டெயிலர், ரிக்கி பொன்டிங், ஸ்டீவ் வாஹ் ஆகியோரை குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க செய்தனர். ஸ்டீவ் வாஹ் ஆட்டமிழக்கும் போது அவுஸ்திரேலிய அணியின் ஸ்கோர் 4 விக்கட் இழப்புக்கு 15 ஓட்டங்கள். இப்போட்டியில் வென்றால்தான் உலக கிண்ண இறுதி போட்டியில் விளையாடலாம் என்னும் இக்கட்டான போட்டியில் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்ட முதுகெழும்பை முறியடித்தனர் மேற்கிந்திய தீவுகளின் வேக பந்து வீச்சாளர்கள் அம்ரோசும் மற்றும் இயன் பிஷோப். 


பின்னர் ஆடுகளத்தில் இணைந்த அக்காலப்பகுதியில் ஆபத்பாந்தவனாக அவுஸ்திரேலியா அணிக்கு கை கொடுக்கும் மைக்கல் பெவன் மற்றும் சகல துறை ஆட்டக்காரர் ஸ்டுவர்ட் லோ ஆகிய இருவரும்  ஒரு சிறப்பான இணைப்பாட்டத்தினை வழங்கினர். இவ்விருவருக்கும் இடையிலான 137 ஓட்ட இணைப்பாட்டதுடன், இறுதி நேரத்தில் இறங்கிய இயன் ஹீலியின் அதிரடியான 31 ஒட்டமும் சேர அவுஸ்திரேலிய அணிக்கு ஓரளவுக்கு போராட கூடிய 207 என்னும் ஓட்ட எண்ணிக்கை கிடைத்தது.


208 என்னும் இலகுவான இலக்கினை நோக்கி ஆட தொடங்கிய மேற்கிந்திய அணிக்கு ஓரளவு சிறப்பான ஆரம்பத்தை பெற்று தந்தனர். அவ்வணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான சிவ்நரின் சந்தர்போல் மற்றும் கோட்னி பிரவுண் ஆகியோர். எப்படியாவது ஒரு விக்கட் எடுக்க வேண்டும் என்று முயன்ற அவுஸ்திரேலிய அணி தலைவர் மார்க் டெயிலர் பவர்பிளே முடிய முன்னர் தனது மாயாஜால பந்து வீச்சாளரான ஷேன் வோர்னை அழைத்தார். மார்க் டெயிலரின் திட்டம் பலித்தது, தனது முதலாவது பந்திலேயே பிரவுணை ஆட்டமிழக்க செய்தார் ஷேன் வோர்ன். அதன் பின்னர் இணைந்து ஆட தொடங்கிய இடது ஆட்டக்காரர்களான லாரா மற்றும் சந்தர்போல் போட்டியை மேற்கிந்திய அணிக்கு வெற்றிக்கு இட்டு செல்ல சிறப்பாக ஆடினர். வேகமாக 45 ஓட்டங்களை பெற்ற பிரையன் லாராவின் முக்கியமான விக்கட்டை ஸ்டீவ் வாஹ் வீழ்த்துகையில் அணியின் ஓட்ட எண்ணிக்கை 2 விக்கட் இழப்புக்கு 93. தொடர்ந்து அணித்தலைவர் ரிச்சி ரிச்சர்ட்சனும் சந்தர்போலும் இணைந்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை 163வரை கொண்டு சென்றனர். காலில் ஏற்பட்ட உபாதை காரணமாக சிறப்பாக விளையாட இயலாத சந்தர்போல் கிளன் மெக்ராவின் பந்து வீச்சில் பிளமிங்கிடம் பிடி கொடுத்து ஆட்டமிழக்கும் போது ஓட்ட எண்ணிக்கை 165. அவர் பெற்ற ஓட்ட எண்ணிக்கை 80. இன்னும் 9 ஓவர்களின் 43 ஓட்டங்களை பெற வேண்டும், கைவசம் 7 விக்கட்டுகள் உள்ளன, மேலும் அணித்தலைவர் ரிச்சி ரிச்சர்ட்சன் சிறப்பாக விளையாடி கொண்டிருக்கிறார் என்பதால் இலவாக இப்போட்டியை வென்று விடலாம் என மேற்கிந்திய அணி எண்ணியிருக்கையில் அடுத்த விக்கட்டையும் வீழ்த்துகிறார் கிளன் மெக்ரா. எனினும் ஆட்டமிழந்த வீரர் ரொஜர் ஹாப்பர், இவர் ஒரு பந்துவீசும் வீரராகவே அறியப்பட்டு வந்துள்ளார். தொடர்ந்து ஆடுகளத்தில் இறங்கிய சகலதுறை வீரர் ஒட்டிஸ் கிப்சன் வோனின் மாயசுழலில் மாட்டி விக்கட் காப்பாளர் ஹீலியிடம் பிடி கொடுத்து ஆட்டமிழக்கையில் அணியின் ஓட்ட எண்ணிக்கை 178. தொடர்ந்து துடுப்பெடுத்தாட வந்த அணியின் துடுப்பாட்ட வீரர் ஜிம்மி அடம்ஸை ஓட்டம் பெற முன்னர் ஷேன் வோர்ன் ஆட்டமிழக்க செய்ய, தொடர்ந்து ஆட வருகிறார், ஒற்றைகையால் ஆறு ஓட்டங்களை அடிப்பதில் கில்லாடியான கீத் ஆர்த்தட்டன். இவரை ஒரு சிறப்பான பந்து வீச்சின் மூலம் ஆட்டமிழக்க செய்கிறார் டேமியன் பிளமிங். Attacking Field Setting செய்து பின்வரிசை துடுப்பாட்ட வீரர்களுக்கு ஓட்டம் பெற முடியாதவாறு செய்த அவுஸ்திரேலிய அணி தலைவர் மார்க் டெயிலருக்கு ஆதரவா சிறப்பாக பந்து வீசினர் அவ்வணி பந்து வீச்சாளர்கள். முக்கியமாக ஷேன் வோர்ன் தனது கடைசி 3 ஓவர்களில் ஆறு ஓட்டங்களை கொடுத்து 3 விக்கட்டுகளை பெறுகின்றார்.  ஆனாலும் சிறப்பாக ஆடி கொண்டிருக்கும் தலைவர் ரிச்சி ரிச்சட்சன் கடைசி ஓவரை முகம் கொடுக்கும் போது அணியின் வெற்றிக்கு தேவையான ஓட்ட எண்ணிக்கை 10. மீதமுள்ள விக்கட்டுகளின் எண்ணிக்கை 2.  இறுதி ஓவரை வீச மார்க் டெயிலர் பந்தை டேமியன் பிளமிங்கிடம் கொடுக்கிறார்.


முதலாம் பந்து - மிட் விக்கட் திசையில் அப்பந்தை அடித்து ஆடிய ரிச்சட்சன் 4 ஓட்டங்களை பெறுகிறார். இன்றும் 5 பந்துகளில் 6 ஓட்டங்கள் தேவை.


இரண்டாம் பந்து - ரிச்சட்சனின் துடுப்பில் உள்பகுதியில் பட்ட பந்துக்கு ஓட்டம் பெற முயன்றனர் அம்ரோசும், ரிச்சட்சனும். பந்தை எடுத்த ஹீலி விக்கட்டை நோக்கி எறிகிறார். மூன்றாம் நடுவரின் தீர்ப்பின்படி அம்ரோஸ் ஆட்டமிழக்கப்பட்டவராக அறிவிக்கப்படுகிறார். இன்னும் நான்கு பந்து களில் 6 ஓட்டங்கள் தேவை. பந்தை எதிர் கொள்ள வந்திருப்பவர். உலகில் அதிக முறை பூச்சியத்துக்கு ஆட்டமிழந்த வீரர் என்னும் சாதனையை கொண்டிருந்த வீரர் கோட்னி வோல்ஷ்


மூன்றாம் பந்து - கிளீன் போல்ட். பிளமிங் விக்கட்டை நோக்கி வீசிய பந்தை கோட்டை விட்ட வோல்ஷ் உலக கிண்ண கனவையும் கனவாகவே மாற்றிவிட்டார். மறுபுறத்தில் 49 ஓட்டங்களுடன் அணிதலைவர் ஆடுகளத்தில் இருந்தும் போட்டியை 5 ஓட்டங்களால் வென்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது அவுஸ்திரேலிய அணி


ஸ்கோர் சுருக்கும் 


அவுஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 8 விக்கட் இழப்புக்கு 207 ஓட்டங்கள்
 துடுப்பாட்டத்தில் மைக்கல் பேவன் - 69, ஸ்டுவர்ட் லோ - 72, ஹீலி - 31
 பந்து வீச்சில் அம்ரோஸ் 26/2, பிஷப் 35/2


மேற்கிந்திய தீவுகள் அணி 49.3 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 202 ஓட்டங்கள்

  துடுப்பாட்டத்தில் சந்தர்போல் - 80, லாரா - 45, ரிச்சட்சன் - 49 ஆட்டமிக்காமல்
   பந்து வீச்சில் ஷேன் வோர்ன் 36/4, பிளமிங் 48/2, மக்ரா 30/2

 போட்டியின் சிறப்பாட்டக்காரர் ஷேன் வோர்ன்



குறிப்பு - இப்போட்டியை மறக்காமைக்கு இன்னொரு முக்கிய காரணம், எனது விருப்பத்துக்குறிய வீரர்களில் ஒருவரான ரிச்சி ரிச்சட்சனின் இறுதி சர்வதேச போட்டி இதுவென்பதாலாகும்.
15 Responses
  1. KANA VARO Says:

    ஆஹா! நன்று..


  2. என்ன செய்யிறது? செஞ்சோற்றுக் கடனுக்காக :D :D :D


  3. கிரிக்கட் பதிவுகளை என்னதான் முயன்றாலும் முற்றாக வாசிக்க முடிவதில்லை. நானென்ன செய்ய :(


  4. Jana Says:

    மீண்டும் 1996 ற்கு அழைத்து சென்று விட்டீர்கள். அப்போது பாரிய இடப்பெயர்வு ஒன்று நிகழ்ந்து நாங்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து வடமராட்சியில் தங்கியிருந்த காலங்கள். எனினும் எங்கள் வட்டத்தினுள்(Gang) மண் எண்ணெய் ஒரு லீட்டர் 3500 ரூபாய்க்கும் கிடைக்காத நேரத்தில் ஜெனரேட்டரில் பார்த்த அதிசயங்கள்.
    அவுஸ்ரேலிய- மேற்கிந்தியத்தீவுகள் அரையிறுதி ஆட்டத்திலேயே பொன்டிங்மீது எனக்கு ஆர்வம் வந்தது.
    லோவுடன் சேர்ந்து சிறப்பாக ஆடினார். அத்தோடு ஆட்ட ஆரம்பத்தில் ஹொட்னிவோல்ஸ், ஹேட்லி அம்புரூஸ் ஜோடியின் அந்த முதல் நான்கு ஓவர்களும், அப்பா... ஜெட்டில் போவது போன்ற உணர்வை தந்தன.
    அருமையான பகிர்வு யோ...தொடர்ந்தும் எழுதுங்க..படு ஆவலாக இங்கே நான்.


  5. Ashwin-WIN Says:

    அருமையான ஆரம்பம் வொய்ஸ்... பழைய போட்டிகளை அப்படியே கண்முன்னே கொண்டு வந்திருக்கிறீர்கள்.. தொடர்ந்து எழுதவும்... ஆவலுடன்..


  6. சூப்பர்

    இந்த போட்டிகள் டொடர்பான காட்சிகள் கைவசம் இருக்கு போல..

    இவளவு தெளிவா சொல்றீக...?


  7. நீங்கள் குறிப்பிட்டிருக்கும் இந்தப் போட்டியை நானும் பார்த்திருக்கிறேன்... 1996 தான் நான் கிரிக்கெட் பார்க்க ஆரம்பித்திருந்த சமயம்... மேலும் இந்தப் போட்டியில் ரிச்சி ரிச்சர்ட்சன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியும் அவர்கள் தோல்வியைத் தழுவியது எனக்கு ரொம்ப வருத்தம்...

    மற்றொரு அரையிறுதியான இந்தியா - இலங்கை ஆட்டத்தில் இந்தியாவிற்கு நடந்த மானக்கேடு பற்றி தெரியும்தானே...


  8. நீங்கள் குறிப்பிட்டிருக்கும் இந்தப் போட்டியை நானும் பார்த்திருக்கிறேன்... 1996 தான் நான் கிரிக்கெட் பார்க்க ஆரம்பித்திருந்த சமயம்... மேலும் இந்தப் போட்டியில் ரிச்சி ரிச்சர்ட்சன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியும் அவர்கள் தோல்வியைத் தழுவியது எனக்கு ரொம்ப வருத்தம்...

    மற்றொரு அரையிறுதியான இந்தியா - இலங்கை ஆட்டத்தில் இந்தியாவிற்கு நடந்த மானக்கேடு பற்றி தெரியும்தானே...


  9. Unknown Says:

    அருமையான போட்டி அது..மீண்டும் கொண்டு வந்ததற்கு நன்றிகள்!!


  10. Bavan Says:

    அந்தநாள் ஞாபகம்.. நெஞ்சிலே வந்ததே..:D
    உண்மையில் நான் 96களில் நடந்த போட்டிகளைப் பார்த்தது 2000ம் ஆண்டுக்குப் பிறகுதான்..:D

    பகிர்வுக்கு நன்றி அண்ணா..;)


  11. வாழ்த்துக்கள் யோ. கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு முன்னர் நான் அதிசயித்து மேற்கிந்திய தீவுகள் வெற்றிபெறாதா என்று ஆவலுடன் டியூசனுக்கு கட்டடிச்சு பாத்த போட்டி. இந்த போட்டியில் தான் லாரா அடித்த ஒரு நடுவரைப் பலமாக தாக்கியது என்று நினைக்கின்றேன்.


  12. Dharshan Says:

    இன்னமும் மனதில் நிழலாடும் போட்டி இதில்தான் ரிச்சி ரிச்சர்ட்சன் ஸ்வீப் செய்த பந்து square leg இல் பி.சி. கூறேயின் தலையைத் தாக்கியது. ஒரு நான்கு ஓட்டங்கள் வீணானது. இந்தத் தொடரின் உலகின் ஆகச் சிறந்த நடுவரிசை காப்பரணாக மைக்கல் பவன் உருவானார்
    கோபி,பவன் போன்றோரை விடுங்கள் சின்னப் பசங்க. நீங்கள், லோஷன் அண்ணா போன்றோரை பார்க்கும் போது பொறாமையாக இருக்கிறது. இன்னமும் கிரிக்கெட் பார்க்கவும் விவாதிக்கவும் நேரமிருக்கிறதே எனக்கு 2003 உலகக்கிண்ணம் அரவிந்தவின் ஓய்வோடு முன்பிருந்த ஆர்வம் வடிந்து விட்டது. இப்போது கூட ஸ்டார் கிரிக்கெட்டிலோ espn இலோ 96 ,92 போட்டிகளை மீளப் பார்ப்பதில் தான் ஆர்வம் அதிகமாய் உள்ளது


  13. Unknown Says:

    இந்தப் போட்டி நல்லா ஞாபகம் இருக்கு. வோல்ஷ் துடுப்பெடுத்தாட வந்து நிக்க பக்கத்தில இருந்து பாத்த ஒரு அண்ணை சொன்னார், உவன் சிக்ஸ் அடிப்பான் என. முந்தியும் ஒருக்கா அடிச்சவன் எண்டுவேற சொன்னார். ஆனா வோல்ஷ் bat பிடிச்சதைப் பாக்கேக்கை அவர் அப்ப சொன்னது பெரிய ஜோக்.


  14. நல்லதொரு பார்வை சகோதரம்... இப்போட்டித் தொடர் தான் எனது முதலாவது கிரிக்கேட் பிரவேசம் என்பதால் அப்படியே மனக்கண்ணில் இருக்கிறது...


  15. Akash Says:

    இந்த போட்டியை போலவே தான் 1999 உலக கிண்ண அரை இறுதி போட்டி யும் அமைந்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது....இரண்டுக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன.


Facebook Badge