ஐ.பி.எல்லில் சாதித்த இந்திய இளம் வீரர்கள் சிம்பாபேயிடம் தோல்வி கண்டது ஏன்?


ஐ.பி.எல்லில் ஆறும் நான்குமாகவே அடித்த தினேஷ் கார்த்திக், ரெய்னா, முரளி விஜய் போன்ற வீரர்கள் சிம்பாபே தொடரில் சாதிக்காமல் போனதற்கு என்ன காரணம் என யோசித்து பார்த்தால், டுவென்டி டுவென்டி ஒரு முழுமையான கிரிக்கட் வடிவமல்ல. அது இன்ஸ்ட்ண்ட் நூடுல்ஸ் போன்றது. அவசரத்துக்கு சாப்பிடலாம் எனினும் தொடர்ந்து அதை கொண்டு பசியாற முடியாது.

எதிர்கால சிறந்த கிரிக்கட் வீரர்களை உருவாக்க வேண்டுமானால் சிறிய வயதில் அவர்கள் 50 ஓவர் போட்டிகளில் விளையாடுவதை குறைக்க வேண்டும் என எங்களது பாடசாலை கிரிக்கட் பயிற்சியாளர் அந்த காலத்தில் சொல்லிய விடயம் எவ்வளவு உண்மை என்பதை மறுக்கவியலாது. 50 ஓவர் போட்டிகளே இப்படியாக மாறினால் 20 ஓவர் போட்டிகளின் அவர்களை எவ்வாறு மாற்றிவிடும் என யோசிக்க தோன்றுகிறது.

ஆறு, நான்கு அடிப்பதுதான் துடுப்பாட்டமும், துடுப்பாட்ட வீரர்களை ஓட்டங்களை எடுக்கவிடாமல் கட்டுபடுத்துவதுதான் பந்துவீச்சும் என விளையாடும் 20-20 போட்டிகள் 25 வருடங்களுக்கு முன்னர் கண்டறியப்பட்டிருந்தால் இன்று சச்சின் டெண்டுல்கார், சங்கக்கார, அரவிந்த டீ சில்வா, கவாஸ்கர், டிராவிட், லாரா போன்ற துடுப்பாட்ட வீரர்களும் முரளிதரன், கபில்தேவ், சேர். ரிச்சர்ட் ஹாட்லி, வசீம் அக்ரம், இம்ரான் கான் போன்ற பந்து வீச்சாளர்களும் உலகத்திற்கு கிடைக்காமல் போயிருப்பார்கள்.

இந்தியா இத்தொடரில் இறுதி போட்டிக்கு செல்லாமல் வெளியேறியது மற்ற எல்லா நாடுகளை விடவும் இந்தியாவிற்கு இது பெரிய ஒரு அபாய அறிவிப்பு மணி என எடுத்து கொள்ளலாம். காரணம் ஐ.பி.எல் என்னும் பணம் சம்பாதிப்பதை மட்டுமே குறியாக கொண்டுள்ள தொடர் முழுக்க முழுக்க இந்திய கிரிக்கட் சபையால் நடாத்தப்படுவதாலாகும்.

இரண்டாம் தர இந்திய அணியை அனுப்பியதால் தோல்வியுற்றோம் என சப்பை காரணம் இந்திய தெரிவாளர்களால் சொல்ல முடியாது ஏனெனில், இத்தொடரில் இந்தியாவை இருமுறை தோலவியுற செய்த சிம்பாபே அணியின் வீரர்களை பார்க்கும் போது, இத்தொடரில் விளையாடிய பல இந்திய வீரர்கள் சர்வதேச போட்டிகளில் அனுபவம் உள்ளவர்களே ஆகும். மேலும் இந்திய கிரிக்கட் சபையின் சொத்தின் ஐநூறில் ஒரு பங்கு கூட இல்லாத சிம்பாபே கிரிக்கட் சபையின் கிரிக்கட் கட்டமைப்பு உலகறிந்ததே. எனவே உள்நாட்டு கிரிக்கட் போட்டிகளிற்கு பயிற்சி பெறவே சிறந்த கட்டமைப்பு இல்லாத சிம்பாபே அணி இந்திய இளம் வீரர்களை (அனைவரும் ஐ.பி.எல் போட்டிகளில் திறமை காட்டிய வீரர்கள்) கொண்ட அணியை வெற்றி கொண்டதற்கு முக்கிய காரணமாக நான் காண்பது, இன்னமும் 20-20 மோகம் சிம்பாபே அணிக்கு ஏற்படவில்லை என்பதாகும். இன்னமும் 20-20 போட்டிகளை ஐசீசீ ஆதரித்து வளர்த்தெடுத்தால் கிரிக்கட் இன்னும் பாதாளத்தை நோக்கியே விழும்.


நல்ல வேளை சச்சின் தெண்டுல்கார் 20-20 சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார். யோசிக்க தெரிந்த அந்த வீரர் தொடர்ந்து சிறப்பாக விளையாட கூடிய மனநிலையை தொடர்ந்து தக்கவைத்து கொள்ளவெ அந்த முடிவை எடுத்திருப்பார் என நினைக்கிறேன்.

முன்னொரு போதும் இப்படியான பதிவெழுதிய போது, இந்திய கிரிக்கட் சபை மீது கொண்ட பொறாமையால்தான் இவ்வாறு எழுதினேன் கருத்து தெரிவித்த நண்பர்கள் இப்போது என்ன சொல்ல போகிறார்கள்?


இலங்கை அணிக்கு இந்திய அணியின் தோல்வியிலிருந்து படிக்க வேண்டிய விடயங்கள் ஏராளமாக உள்ளன. இந்த இலங்கை அணி ஒரு அவுஸ்திரேலியா இளம் அணியிடம் விளையாடியிருந்தால் முடிவு வேறுவிதமாக கிடைத்திருக்கலாம். எளியவர்களின் கூட்டத்தில் வலியவனாக இருக்கும் இலங்கை வீரர்களில் பலரும் 20-20 மோகத்திற்கு உட்பட்டவர்களே. எனக்கு தெரிந்து இலங்கை கிரிக்கட் சபை இலங்கை வீரர்களை ஐ.பி.எல் போன்ற வெளிநாட்டு 20-20 போட்டி தொடர்களில் விளையாடுவதை தடுக்க முயல வேண்டும். பணக்கார இந்திய கிரிக்கட் சபைக்கு எதிராக சுண்டைக்காய் கிரிக்கட் சபையான இலங்கை கிரிக்கட் சபைக்கு இது முடியுமான காரியமா என தெரியவில்லை? கவுண்டி போட்டிகளில் விளையாண்டு தனது துடுப்பாட்டத்தை மெறுகேற்றிய அரவிந்த டீ சில்வா போன்ற வீரர்கள் விளையாண்ட போட்டி தொடரல்ல வெளிநாட்டு 20-20 கிரிக்கட் லீக்குகள்.

இலங்கை பாடசாலை மட்ட கிரிக்கட் போட்டிகள் உலக பிரசித்தி பெற்றவை, அவற்றின் தரமும் அவ்வாறே. அதை நேற்று வந்த தினேஷ் சந்திமால் தொடக்கம் அந்த கால அர்ஜுன ரணதுங்க வரை நிரூபித்திருக்கிறார்கள். இப்பாடசாலை விளையாட்டுகளின் தரத்தை தொடர்ந்து பேண வேண்டுமானால் பாடசாலைகளில் 20-20 கிரிக்கட் போட்டிகளை தடை செய்ய வேண்டும்.

20-20 போட்டிகள் எப்பவாவது விளையாண்டால் அது ஏற்று கொள்ள கூடிய விடயம் தான் ஆனால் எந்நாளும் அதை விளையாடுவதை, அதற்காக டெஸ்ட் போட்டிகளை எதிர்கால கிரிக்கட் அட்டவணையிலிருந்து ஒதுக்குவதை நான் கடுமையாக எதிர்க்கிறேன். இன்னமும் டெஸ்ட் போட்டிகள் தான் சிறந்த வகை கிரிக்கட் போட்டிகள் என்பதை நம்புகிறேன்.

நண்பர்களே நீங்களும் உங்களது கருத்துகளை சொல்லிவிட்டு போங்கள்
10 Responses
 1. தலைப்பைப் பார்த்தவுடன் (ஐ.பி.எல் இல் பிரகாசித்த வீரர்கள் ஏன் சிம்பாப்வே தொடரில் பிரகாசிக்கவில்லை) வந்து 'ஏனென்றால் ஐ.பி.எல் இன் கிறிக்கறின் அளவு அந்தளவு தான். சர்வதேசப் போட்டிகள் கடினம் வாய்ந்தவை' என்று பதில் அனுப்பிவிட்டுப் போகலாம் என்று நினைத்தேன்.

  நீங்கள் இருபதுக்கு இருபது பற்றி ஆராய்ந்திருக்கிறீர்கள்.
  இதற்கு ரணதுங்க சொன்னது தான்.
  'இருபதுக்கு இருபது போட்டிகள் தான் கிறிக்கற் என்றால் இந்தியாவின் தலைசிறந்த துடுப்பாட்ட வீரர்களாக கவாஸ்கரும், சச்சினும் இருக்கமாட்டார்கள், மாறாக யூசுப் பதானும், யுவ்ராஜ் சிங்குமே இருப்பார்கள்' என்றார்.

  அதுதான் யதார்த்தம்.

  இருபதுக்கு இருபது போட்டிகள் நடக்கட்டும், ஆனால் அதைப் பெரிதுபடுத்தி, அதுதான் ஏதோ கிறிக்கற் என்றவாறான பிரசாரங்கள் நிறுத்தப்படவேண்டும்.

  நல்ல பதிவு. :)


 2. // இன்னமும் டெஸ்ட் போட்டிகள் தான் சிறந்த வகை கிரிக்கட் போட்டிகள் என்பதை நம்புகிறேன். //

  இன்னமுமல்ல, எப்போதுமே ரெஸ்ற் போட்டிகள் தான் உண்மையான கிறிக்கற்....


 3. EKSAAR Says:

  நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான்.. ஆனால் ரசிகர்கள் 10 ஓவருக்கேனும் தொடர்ந்து கவனத்தை செலுத்தமுடியாது இருப்பது பற்றியும் அதற்கு சாத்தியமான தீர்வொன்றை பற்றியும் பதிவு பேசவில்லை. சரியாக கிரிக்கட் சந்தைப்படுத்தப்படாவிட்டால் கிரிக்கட் அழியுமல்லவா?

  T20 இல் கூட முதல் 5 ஓவரையும் கடைசி 5 ஓவரையும் பார்க்கும் அளவுக்குத்தானே ரசிகர்கட்கு நேரம் இருக்கிறது... இந்த சாதாரண ரசிகர்களை தவிர்த்தால் அரவிந்தவும், கவாஸ்கரும் மட்டும்தான் கிரிக்கட் பார்ப்பார்கள்..?


 4. balavasakan Says:

  நான் நினைக்கிறேன் இந்திய அணியின் மிக மோசமான பந்து வீச்சுத்தான் தோல் விக்கு காரணம் ..துடுப்பாட்ட வீரர்கள் ஓரளவுக்கு செய்திருந்தார்கள் ரோகித்..ரெய்னா...ஆனால் முரளிவிஜய் பிரகாசிக்காமைக்கு காரணம்..அனுபவம் போதாமையாக இருக்கலாம்... ஐபிஎல்க்கும் இதற்கும் முடிச்சு போடுவது எந்தளவுக்கு பொருத்தமானது எனபது எனக்கு தெரியவில்லை ஏனெனில் இந்திய ஆடுகளங்களுக்கும் சிம்பாவே ஆடுகளங்களுக்கும் பாரிய வேறுபாடு இருந்தது கண்கூடு இங்கு ஐபிஎல் அனுபவம் ஒருபோதும் கைகொடுக்காது..ஒன்லி அனுபவம் + திறமை தான்...இரண்டும் இந்திய அணிவீரர்களிடம் குறைந்திருந்ததுதான் காரணம்...


 5. anuthinan Says:

  யோகா அண்ணா! நீங்கள் சொன்னது போல இருபதுக்கு இருபது போட்டிகள் எதிர்கால கிரிக்கெட்டை கேள்விக்குறியாக்கி விட போகின்றது...!


  என்ன சொன்னாலும் இன்றுவரை இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான போட்டிகளின் தரமே தனிதான்! (அனுபவித்து சொல்லுகிறேன்)


 6. இந்த தோல்வி நிச்சயம் இந்தியாவிற்கு தேவை தான். ஐ.பி.எல் என்ற கொடி பிடித்துக்கொண்டு தம்பட்டம் அடித்ததற்கு கிடைத்த தக்க பதிலடி இது.


 7. ARV Loshan Says:
  This comment has been removed by the author.

 8. ARV Loshan Says:

  நல்லதொரு ஆய்வு யோகா,,
  Back to form.. like Dilshan.. ;)

  ஆனால் சிம்பாப்வே தோல்விக்கும் க்கும் நேரடித் தொடர்பிருப்பதாக நான் நினைக்கவில்லை.

  பாலவாசகன் சொன்ன சில விஷயங்களை நான் ஆமோதிக்கிறேன்.
  சிம்பாப்வேயின் Slow and Low ஆடுகளங்கள் இந்தியத் துடுப்பாட்ட வீரர்களை ஏமாற்றி விட்டன.
  ஆனால் சுழல் பந்துவீச்சுக்கு இந்தியா சுருள்வது இப்போது அடிக்கடி நடக்கிறது..

  உலகக் கிண்ணத்தில் பங்கலாதேஷுக்கேதிராக,பின்னர் அஜந்தா மென்டிசிடம்.. இப்போது இங்கே..

  பந்துவீச்சையும் களத்தடுப்பையும் இவர்கள் மேம்படுத்தவே வேண்டும்.


 9. This comment has been removed by the author.

 10. பாலவாசகன் அண்ணாவுக்கு:

  இந்தியத் துடுப்பாட்ட வீரர்கள்.
  இந்தத் தொடரில்...

  http://bit.ly/dxj7bc

  சர்மா, ஜடேஜா, விரோத் கோலி தவிர யூசுப் பதான், ரெய்னா, கார்த்திக், விஜய், ஒருபோட்டியில் விளையாடிய நமன் ஒஜா ஆகியோர் சறுக்கியிருந்தனர்...

  இவ்வளவு பேர் சறுக்கிய போது துடுப்பாட்ட வீரர்கள் ஓரளவுக்குச் செய்தார்கள் என்ற முடியமா?

  இந்தியாவின் பலமே அவர்களது துடுப்பாட்டமாகவே இருந்து வந்திருக்கிறது.

  தோல்வியை முழுமையாக ஆராயப் போனால் தெளிவாகப் பதில் சொல்லலாம் என்று நினைக்கிறேன், ஆனால் தோற்றது இந்தியா தான் என்பதால் எனக்கு அந்தத் திட்டமில்லை.... :D

  ஆனால் இந்த ஆண்டில் நடந்த மட்டுப்படுத்தப்பட்ட பந்துப்பரிமாற்றப் போட்டிகளில் (இருபதுக்கு இருபது + ஒருநாள் ) 17 போட்டிகளில் இந்தியா 8 இல் வென்று 9 இல் தோற்றிருக்கிறது.

  ஆகவே இது பெரிய விடயமுமல்ல...


Facebook Badge