நூடுல்ஸ் - 28-07-2010
நேற்று இயற்கையை காதல் கொள்ளும் விடயங்களை பற்றி விடியலில் பேசிய லோஷன், இன்று காலை விடியலில் குழந்தை பருவத்தில் யாராக வர விரும்பினீர்கள் நிகழ்ச்சி நடத்தினார். அதை பார்த்ததும் சிறிய வயதில் நான் கண்டவர்களிடமெல்லாம் “நான் டொக்டராக வருவேன்” என செல்லி திரிந்தது ஞாபகம் வந்தது. யாரோ என் மனதில் சிறிய வயதில் விளைத்தது தான் டொக்டர் ஆசை. அதே ஆசையில் எனது படிப்பை தொடர்ந்தேன். இரசாயனவியல் மற்றும் தாவரவியல் பரீட்சை தாள்கள் தயாரிக்கும் பேராசிரியர்களின் சதியினால் என்னால் டொக்டராக முடியவில்லை. (அப்புறம் நான் படித்த கேள்விகள் பரீட்சையில் வராதது யார் செய்த சதி?) நான் டொக்டராகாமல் விட்டது பல உயிர்களுக்கு இலாபம் என்பது வேறு விடயம்.
இம்மாதிரியான பல விடயங்களை தாங்கி வரும் விடியல் எங்களில் பலருக்கு நாளுக்கு நல்ல தொடக்கத்தை வழங்குகிறது, அதற்காக லோலஷனுக்கும் மற்றைய வெற்றி குழுவினர்களுக்கும் நன்றிகள். இப்போதெல்லாம் நான் கேட்கும் ஒரே வானொலி நிகழ்ச்சி விடியல் மட்டும்தான், காரணம் நேரமின்மை. எனது நண்பியொருத்தி வெற்றியில் “நண்பனிடம் கேளுங்கள்” நிகழ்ச்சி கேட்க சொன்னாள், நல்ல நிகழ்ச்சியாம். நேரமின்மையினால் கேட்க முடியவில்லை.
-------------------------------------------------------------
இலங்கை தமிழ் வானொலி வரலாற்றில் பல புரட்சிகள் செய்த சூரிய வானொலி பிறந்த நாளை கடந்த வாரம் கொண்டாடியது. ஒரு காலத்தில் எனது நாளில் அநேகமான நேரத்தை சூரியனுடன் கழித்திருக்கிறேன். “மணி அடித்தி்ட இசை ஒலித்திடும் இசைத்திடும் இன்ப ராகங்கள்”, “சூரியராகங்கள்”, “மெய் மறப்போம் பொய் கறப்போம்” போன்ற நிகழ்ச்சிகளை தொடர்ந்து கேட்டு வந்திருக்கிறேன்.
சூரிய வானொலிக்கும் சூரிய குடும்பத்திற்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். தொடர்ந்து வானலையில் சூரியன் ஜொலிக்கட்டும்
-------------------------------------------------------------
பல சாதனைகளை படைத்து கடந்த வாரம் ஓய்வு பெற்ற முரளிதரன், பிஷன் சிங் பேடி அவரை பற்றி பல வருட காலமாக கூறி வந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்திருக்கிறார். என்னை பொறுத்த வரையில் பிஷன் சிங் பேடி முரளியை விமர்சிப்பது பொறாமையினால் என்றே நினைக்கிறேன். முரளி எத்தனை சோதனைகளில் தன்னை நிரூபித்திருக்கிறார். இன்னும் ஏன்????
-------------------------------------------------------------
இப்போது முரளியை பலரும் தமிழர் பிரச்சினையை பேசவில்லை என கூறி தமிழின் எதிரியாக விமர்சிக்க தொடங்கிவிட்டார்கள், ரகுமான் ஒஸ்கார் மேடையில் இப்பிரச்சினையை பேசாமல் தமிழினத்திற்கே துரோகம் செய்து விட்டார் என ராதாரவி தொடங்கிய பிரச்சினையின் வேறு வடிவம்தான் இது. இலங்கை தமிழரை வைத்து இன்னும் எப்படியெல்லாம் இலாபம் சம்பாதிக்க போகிறார்களோ தெரியாது.
சீமானுக்கு அவரது படபிடிப்பை இலங்கையில் நடத்துகையில் இலங்கை நல்ல நாடாக தெரிந்தது. சகோர மொழி பேசும் நாயகியை தனது படத்தில் நடிக்க வைக்கலாம், ஆனால் இப்போது விவேக் ஓப்ராயோ அல்லது அசினோ இங்கு வந்தால் .................................................................. (வார்த்தை அசிங்கமாக வருகிறது, வேண்டாம்)
-------------------------------------------------------------
இலங்கை தமிழர் பிரச்சினை பற்றிய பதிவுகளில் மூக்கை நான் நுளைக்காமலிருப்பதற்கு முக்கிய காரணம், நான் பதிவெழுத தொடங்க முன்னைய காலத்தில் தெரிந்த யுனிகோட் தமிழில் தட்டு தடுமாறி இலங்கை தமிழர் பற்றிய யாரோ ஒருவர் எழுதிய பதிவில் பின்னூட்டி நல்லா வாங்கி கட்டினேன். அதுதான் நான் எழுதிய பின்னூட்டம், அந்நேரம் எனக்கு பதிவுகள் பற்றிய பெரிய அறிவு கிடையாது. என்னை பலர் நீ மலையகத்தான் உனக்கு ஈழ தமிழரை பற்றி பேச உரிமையில்லை என கூறிவிட்டனர். உண்மையை கூறினால் என்னுள்ளே எள்ளளவும் பிரதேச வாதமில்லை, ஆனாலும் அன்று தொடக்கம் இன்று வரை நான் அரசியல் மற்றும் இலங்கை தமிழர் பிரச்சினை பற்றிய பதிவுகளில் அடக்கியே பின்னூட்டியிருக்கிறேன்.
ரொம்ப நாளாகவே சொல்ல விரும்பிய விடயம் இன்று சொல்லிவிட்டேன்.
-------------------------------------------------------------
இன்று செவாக் 99 ஓட்டங்களில் ஆட்டமிழந்து விட்டார், சென்ற முறை இலங்கை வந்திருந்த போது 199 ஓட்டங்களிலென்று நினைக்கிறேன், முரளியின் பந்தில் ரிவர்ஸ் சுவீப் செய்து 4 ஓட்டங்களை பெற்று இரட்டை சதம் பெற்றார். அரவிந்த, சனத் ஆகியோரும் இவ்வாறே 6 அல்லது 4 ஓட்டங்களின் மூலமே சதத்தை பெறுவர். அந்த தன்னம்பிக்கை உள்ளதன் காரணமாக எனக்கு சேவாக்கை ரொம்ப பிடிக்கும். என்னை பொருத்த வரையில் இந்திய அணியில் தன்னம்பிக்கை அதிகம் உள்ள வீரராக நான் கருதுவது சேவாக்கைதான். விவியன் ரிச்சர்ட்சும் இப்படி தன்னம்பிக்கையோடு விளையாடியதாக கூறுவார்கள்.
-------------------------------------------------------------
கிரிக் இன்போ இணைய தளத்தில் நான் ரசித்த கார்டூன்